மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கெனவே அறிவித்தபடி, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்புடைய 64 ஆவணங்களை "மந்தண'வகைப் பட்டியலிலிருந்து நீக்கி, பொதுமக்கள் யாவரும் பார்க்கவும் படிக்கவுமான ஆவணக் கோப்புகளாக வெளியிட்டுள்ளது கொல்கத்தா காவல் துறை.
கொல்கத்தா காவல் அருங்காட்சியகத்தில், காவல் துறைத் தலைவர் சுரஜித் கர் புரகயாஸ்தா வெளியிட்டுள்ள இந்த 64 ஆவணங்கள் மொத்தம் 12,744 பக்கங்கள் கொண்டவை. இதன் டிஜிட்டல் வடிவம் தற்போது நேதாஜியின் குடும்பத்தினரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 1937 முதல் 1947 வரையிலான நேதாஜி குறித்த தகவல்கள் அடங்கிய ஆவணங்கள் இவை.
பிரிட்டிஷ் அரசால் சிறைப் பிடிக்கப்பட்ட நேதாஜி, டிசம்பர் 1940-இல் விடுதலை செய்யப்படுகிறார். பிறகு ஜனவரி 26, 1941 முதல் அவரை யாரும் பார்க்கவில்லை. மத்திய அசெம்பிளி உறுப்பினராக அவர் பதவியேற்காத காரணத்தால் அந்த இடம் காலி என்று கவர்னர் ஜெனரல் அறிவிக்கிறார். ÷
அதன் பிறகு, அவர் 1945-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி, டோக்கியோவிலிருந்து மலேசிய - இந்திய நல்லெண்ணக் குழுவைச் சேர்ந்த 4 பேர் உள்பட 11 பேர்களுடன் சென்ற ராணுவ விமானத்தின் தகவல் சமிக்ஞை கிடைக்காததால் அது விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்தவர்கள் இறந்திருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது என்கின்ற ஜப்பானிய செய்தி நிறுவனம் தந்த தகவல் மட்டுமே, நேதாஜி இந்த விபத்தில் இறந்திருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அவர் இறந்துவிட்டதாக ஜப்பான் உறுதிப்படுத்தியதே தவிர, அவர் அந்த விபத்தில் தப்பியிருக்கக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகளும் நிறையவே காணப்பட்டன.
இப்போது வெளியிடப்பட்டிருக்கும் ஆவணங்கள் 1937 முதல் 1947 வரையிலான கால கட்டத்தைச் சேர்ந்தவை. இதில் 1941 ஜனவரி வரையிலும் அவரது வாழ்க்கை குறித்த எந்தவித ரகசியங்களும் கிடையாது. அவர் மற்றெல்லா விடுதலைப் போராட்ட வீரர்களைப் போலவே போராட்டங்களைத் திட்டமிட்டார். அரசியல் நடத்தினார். மிதவாத காந்திக்கு மாறாக, தீவிரவாத அரசியல் நடத்தத் திட்டமிட்டதும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டதுமான பிரிட்டிஷ் உளவுத் துறையின் தகவல்கள் மட்டுமே இவற்றில் காணப்படுகின்றன.
நேதாஜி 1941-க்குப் பிறகு எங்கே சென்றார், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் யாருடன் பேசினார், உறவினர்களுடன் எத்தகைய தொடர்பு கொண்டிருந்தார், அவருக்கு நிதியுதவிகள் எவ்வாறு அனுப்பப்பட்டன போன்ற காவல் துறை ரகசிய உளவாளிகள் கொடுத்த அறிக்கைகள்தான் இந்த ஆவணங்களில் பெரும்பாலானவை. நேதாஜியின் மரணம் குறித்த மர்ம முடிச்சுகளை இந்த ஆவணங்களின் உதவியால் அவிழ்க்க முடியுமா என்று கேட்டால், முடியாது என்பதை இந்த 12,744 பக்கங்களையும் படிக்காமலேயே சொல்லிவிட முடியும்.
நேதாஜியின் ஐ.என்.ஏ. அமைப்புக்கு இந்தியத் தலைவர் ஒருவர் பெரும் எதிர்ப்புத் தெரிவித்து, அதற்கு மற்றவர்கள் எந்தவித உதவியும் தராமல் தடுத்து வந்ததாக ஒரு தகவல் இந்த ஆவணத்தில் இருக்குமெனில், இந்தத் தகவல் உண்மையா என்பதைக் காட்டிலும், அந்தத் தலைவரைக் கொச்சைப் படுத்தவே இந்த ஆவணங்கள் தற்போது பயன்படும். அதைத் தவிர்ப்பதற்காகத்தான் இவை "மந்தண' வகைப்பாட்டில் இத்தனைக் காலம் வைக்கப்பட்டிருந்தன.
வரலாற்றில் தெரிய வராத உண்மைகளின் இடைவெளியை ஊகங்களால் இட்டு நிரப்பவே இந்த ஆவணங்கள் உதவும். சர்ச்சை கிளம்பும் பிரபலங்களின் நூல்கள் போலத்தான் இந்த ஆவணங்களும். பெருமைகளைவிட, சிறுமைகளை சேற்றில் கிளறுவோருக்கே அதிகம் பயன்படும்.
மத்திய அரசு வைத்துள்ள 130 ஆவணங்களையும் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கையையும் நேதாஜி ஆதரவாளர்கள் தற்போது எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்த ஆவணங்கள் பெரும்பாலும் ரஷியா, ஜப்பான், மலேசியா நாடுகளில் நேதாஜி கொண்டிருந்த அரசியல் உறவு தொடர்பானவை. அவற்றை தற்போது அம்பலப்படுத்துவது ராஜீய உறவுகளுக்கு சங்கடத்தை ஏற்படுத்தக்கூடியவை.
70 ஆண்டுகளுக்குப் பிறகு, எந்த ஆவணங்களை வெளியிடலாம், எவை இன்றும்கூட வெளியிடக் கூடாத அளவுக்கு மிகவும் முக்கியமானவை என்று பகுத்தறிந்து அதன் பிறகு இந்த ஆவணங்களை வெளியிடுவதே சரியான முறை. நேதாஜி தொடர்பான ஆவணங்களை அவர்தம் உறவினர், முக்கியமான அரசியல் தலைவர்கள் சிலர் மற்றும் அரசுத் தரப்பு அதிகாரிகள் கொண்ட குழுவினால் முழுமையாகப் படிக்கப்பட்டு, எவை வெளியிடப்படலாம், எவற்றை அல்லது எந்தப் பகுதிகளை தொடர்ந்து ரகசியமாக வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதுதான் சரியாக இருக்கும்.
நேதாஜியின் குடும்பத்தினரை நேருவின் அரசு உளவு பார்த்ததா என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், கேட்கப்பட்ட கேள்விக்கு, நேதாஜி குறித்த ஆவணங்களைத் தர முடியாது என்று மத்திய அரசு கூறியதால் இந்தச் சிக்கல் பெரிதாகியுள்ளது.
நேதாஜி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பல ஆண்டுகள் உயிருடன் இருந்தார்; சைபீரியாவில் ரஷியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்; நேதாஜியை இந்தியாவுக்குள் அனுமதிக்கக் கூடாது என்று பிரிட்டிஷார் பண்டித நேருவை எச்சரித்தனர் - இப்படி எத்தனை எத்தனையோ வதந்திகள். ஆனால், ஒன்றுமட்டும் நிச்சயம். அண்ணல் காந்தியடிகளுக்கு "மகாத்மா' என்கிற பட்டத்தைக் கொடுத்த, இந்தியர்களுக்கு "ஜெய்ஹிந்த்' என்கிற வீரமுழக்கத்தைக் கொடுத்த, எந்தப் பதவியையும் வகிக்காமலேயே ஒவ்வொரு இந்தியரின் மனதிலும் தனிப்பெரும் தலைவனாக வாழும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் நிரந்தரமானவர், என்றும் அழிவதில்லை!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

