வறட்சி பாதித்த மாவட்டங்களில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வழக்கமான 100 நாள்களுடன் மேலும் 50 நாள்கள் பணி வழங்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
பரவலாக மழைப் பற்றாக்குறை நிலவுகின்ற காரணத்தால், விவசாயத் தொழிலாளர்களுக்கு இவ்வாறு கூடுதல் வேலைநாள்களை அனுமதிப்பதன் மூலம் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படாது; அவர்களது அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் கூலி பேருதவியாக இருக்கும். இருப்பினும், இத்திட்டத்தில் உழைத்தவருக்கான ஊதியம் உடனடியாகத் தரப்படாமல், 15 நாள்களுக்குள் வழங்கப்படாவிடில், என்ன பயன் கிடைக்கும்?
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் பணியாற்றிய விவசாயத் தொழிலாளர்களுக்கு அனுமதிக்கப்பட்ட 15 நாள் காலக்கெடுவுக்குள் கூலியை வழங்கிய நேர்வுகள் நாடு முழுவதும் 28% மட்டுமே. மீதமுள்ள 72% நேர்வுகளிலும் காலதாமதமாகவே பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. இதில் 9% நேர்வுகளில் 90 நாள்களுக்கும் அதிகமாகியுள்ளது. மத்திய அரசு இதற்கான நிதியை விடுவிப்பதில் காணப்படும் தாமதம்தான் இதற்குக் காரணம். அருணாசலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், திரிபுரா, ஜார்க்கண்ட், உத்தரகண்ட் ஆகிய ஆறு மாநிலங்களில் மட்டுமே, இத்திட்டத்தில் வேலை செய்தவர்களுக்கு 15 நாள்களுக்குள் கூலி வழங்கப்பட்ட நேர்வுகள் 50%-ஆக உள்ளது.
இது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் திட்டம் என்றாலும், இத்திட்டத்துக்கு ரூ.34,699 கோடியை, அதாவது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12% கூடுதலாக ஒதுக்கீடு செய்தது பிரதமர் நரேந்திர மோடியின் அரசு. கடந்த ஏப்ரல் மாதம் முதலாக, இத்திட்டத்துக்கான கூலியையும் உயர்த்தி நிர்ணயித்திருக்கிறது. இதன்படி, தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு ரூ.183 கூலியாக வழங்கப்பட வேண்டும் (ஆந்திரம் - ரூ.180, கர்நாடகம் - ரூ.204, கேரளம் - ரூ.229). விவசாயம் பாதிக்கப்படும்போதும், விவசாய வேலைகள் இல்லாத போதும் கிராமப்புற விவசாயிகள் அன்றாட வாழ்க்கைச் செலவுக்கு திண்டாடக் கூடாது என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
இத்திட்டத்தின் கீழ் வேலை செய்வோருக்கு 15 நாள்களுக்குள் பணம் கிடைக்கச் செய்வது இன்றியமையாதது. குறிப்பாக, வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மற்றும் மத்திய அரசின் நிதி விடுவிப்பு ஆகியன 15 நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும். தங்களுக்கான கூலி காலதாமதமானால், இந்தத் திட்டத்தின் கீழ் பணியாற்ற கிராமத்தினர் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, அது தற்கொலை உள்ளிட்ட விபரீத முடிவுகளுக்குக்கூட வழிகோலும்.
இத்திட்டத்தில் பங்கேற்கும் குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2012-13ஆம் ஆண்டில் 51.7 லட்சம் குடும்பங்கள் இந்த வேலை திட்டத்தில் பங்கேற்றன. 2013-14ஆம் ஆண்டில் இது 46.7 லட்சம் குடும்பங்களாகவும், 2014-15ஆம் ஆண்டில் 23 லட்சம் குடும்பங்களாகவும் குறைந்துள்ளன. அதாவது, வேலை நடக்கிறது. ஆனால், ஒரு குடும்ப அங்கத்தினர்களே மீண்டும் மீண்டும் பணியாற்றுகிறார்கள். மற்ற குடும்பங்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்று பொருள். கூலியை விரைந்து கொடுத்தால் மட்டுமே இந்த நிலைமை மாறும்.
அன்றாட வாழ்க்கைக்குப் பணம் தேவை என்பதால், கூலி உடனடியாகக் கிடைக்காத நிலையில் விவசாயம் அல்லாத வேறு வேலைகளுக்காக நகர்ப்புறங்களுக்கு இடம் பெயர்வது தவிர்க்க முடியாதது. இதனால், இரண்டுவிதமான பாதிப்புகள் ஏற்படும். கிராமங்களில் வேலை செய்ய ஆள் இருக்க மாட்டார்கள். நகரங்களுக்கு இவர்களது வருகை அதிகமானால், அங்கே இவர்களைக் குறைந்த கூலிக்கு அமர்த்தி உழைப்பு சுரண்டப்படும். ஆகவே, உரிய காலகட்டத்தில் இவர்களுக்கான கூலி கிடைக்கச் செய்வது மட்டுமே இதற்கானத் தீர்வு.
தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேளாண்மை சார்ந்த பாசன வாய்க்கால் தூர் எடுப்பு, ஏரி - குளங்களை ஆழப்படுத்துதல் போன்றவை மட்டுமன்றி அங்கன்வாடி, வீடுதோறும் கழிப்பறைத் திட்டம் ஆகியனவும் இடம் பெற்றுள்ளன. ஆகவே, இத்திட்டத்தின் கீழ், கிராம மக்களைக் கொண்டு கிராமத்தின் அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்களுக்கு கழிப்பறை வசதிகளை உருவாக்க முடியும். ஊரகங்களில் கழிப்பறை இல்லாத வீடுகள் இல்லாத நிலைமையை அடுத்த பணியாகச் செய்யலாம்.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஏறத்தாழ ஐந்தில் ஒரு பங்கு வகிக்கும் கிராமப்புற விவசாயம், மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கு மக்களின் வாழ்வாதாரமாக நேரிடையாகவோ, மறைமுகமாகவோ திகழ்கிறது. பெரு விவசாயிகள் வேண்டுமானால், விவசாய உற்பத்தி வருமானத்தில் வாழ்பவர்களாக இருக்கலாம். ஆனால், 70% கிராமப்புற விவசாயக் குடும்பங்கள் குறுநிலங்களை உடையவர்களாகவோ, விவசாயக் கூலித் தொழிலாளர்களாகவோதான் இருக்கிறார்கள்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் எவையெவை என்பது மாநில அரசுகளுடன் கலந்து பேசி அறிவிப்போம் என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறைச் செயலர் தெரிவித்துள்ளார். பொதுவாக, ஒரு மாவட்டத்தின் மழைப் பற்றாக்குறை வழக்கமாக பெய்ய வேண்டிய சராசரி அளவைக் காட்டிலும் மைனஸ் 10 ஆகக் குறைந்திருக்கும் என்றால், அந்த மாவட்டத்தை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டமாகக் கருதலாம். இதை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்.
கர்நாடக அரசு தனது 30 மாவட்டங்களில் 27 மாவட்டங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவித்துள்ளது. தமிழகமும் இந்த விவகாரத்தில் முந்திக்கொண்டு, வறட்சி பாதித்த மாவட்டங்களை உடனடியாக அறிவிக்க வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

