கடந்த சில நாள்களாக அஸ்ஸாமில் வெள்ளம், பிகாரில் வெள்ளம் என்றெல்லாம் செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருப்பதாலும், மழை வெள்ளத்தில் மிதக்கும் பகுதிகள் நகரங்களாக இருப்பதும், வெள்ளத்தில் நிறையப் பேர் இறந்து போவதும் ஊடகங்களின் கவனம் பெறுவதாலும் இந்தியாவில் இந்த ஆண்டு மழை நன்றாகவே பெய்திருக்கிறது என்ற எண்ணம்தான் ஏற்படும். ஆனால், உண்மை நிலை அதற்கு மாறானது. நிகழாண்டும் மழைப் பற்றாக்குறை ஆண்டுகளில் ஒன்றுதான்.
இந்தியா முழுவதிலும் 44% பகுதிகளில் மழை குறைவாகவும், 50% நிலப்பரப்பில் வழக்கமான மழையும், 6% நிலப்பரப்பில் அதிக மழையும் பெய்துள்ளது. இந்த 6% நிலப்பரப்பில் பெரும்பாலும் நகரங்கள் இடம் பெற்றுவிடுகின்றன. சாலைகளில் வெள்ளம் வழிந்தோடி நல்ல காட்சித் தொகுப்புக்கு வாய்ப்பாக அமைகிறது.
வழக்கமாக செப்டம்பர் 30-ஆம் தேதியில்தான் இந்தப் பருவத்துக்கான (ஜூன்-செப்டம்பர்) மழையின் இறுதி அளவை வானிலை மையம் அறிவிக்கும். இருப்பினும், தற்போதைய நிலவரப்படி இது மைனஸ் 16 என்ற அளவில் உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில், 2002-இல் மைனஸ் 19.2, 2009-இல் மைனஸ் 21.8 என்ற அளவுக்கு மழைப் பற்றாக்குறை மிக மோசமாக இருந்தது. 30 ஆண்டுகளில் மூன்றாம் முறையாக தற்போது மழைப் பற்றாக்குறை மிக மோசமாகக் கீழிறங்கியிருக்கிறது. மழையின் அளவு குறைந்ததற்குக் காரணமான "எல்நினோ'வின் (பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு தொடர்ந்து வெப்பமடைதல்) தாக்கம் 2016 மார்ச் வரை தொடரும் என்று கூறப்படுகிறது.
வட இந்தியாவின் பற்றாக்குறையை ஒப்பிடும்போது தென் இந்தியாவில் மழைப் பற்றாக்குறையின் அளவு குறைவு என்பது மட்டுமே சிறு ஆறுதல். செப்டம்பர் மாதத்தின் முதல் இரு வாரங்களில் தென் இந்தியாவில் மழை சற்றுக் கூடுதலாக பெய்யத் தொடங்கியிருப்பதாக வானிலை மையம் தெரிவித்தாலும், தமிழகம், புதுவையில் பரவலாக மழை பெய்தாலும்கூட, விவசாயத் தேவைக்குப் போதுமான அளவுக்கு மழைப் பொழிவு இல்லை என்பதே உண்மை. இதன் விளைவாக அணைகளிலும் நீர் இருப்பு குறைந்து காணப்படுகிறது.
மத்திய பொதுப் பணித் துறை தென் இந்தியாவில் உள்ள 31 அணைகளின் நீர் இருப்பைக் கணக்கிட்டு, அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 33% மட்டுமே (மூன்றில் ஒரு பங்குதான்) அணைகளில் நீர் இருப்பு உள்ளதாகத் தெரிவித்திருக்கிறது. இது செப்டம்பர் 3-ஆம் தேதி அறிவிக்கப்பட்ட கணக்கெடுப்பு. இதே காலகட்டத்தில் சென்ற ஆண்டு அணைகளின் நீர் இருப்பு அவற்றின் மொத்தக் கொள்ளளவில் 75%-ஆக இருந்தது. பத்து ஆண்டுகளில் இதே காலகட்டத்தில் அணை நீர் இருப்பு சராசரி 67%. ஆகவே, தற்போது தென் இந்தியாவில் இருக்கும் 31 அணைகளின் நீர் இருப்பு பத்தாண்டு சராசரிக்கும் குறைவு, சென்ற ஆண்டின் இருப்புக்கும் குறைவானது.
மண் மீதும் மழை மீதும் விவசாயிகளின் நம்பிக்கை அதிசயமானது. நிலைமை இப்படியாக இருந்த போதிலும், இந்தியா முழுவதிலும் குறுவைப் பருவத்தில் 998.67 கோடி ஹெக்டேர் பரப்பில் சாகுபடி நடந்துள்ளது. சென்ற ஆண்டைக் காட்டிலும் 50 லட்சம் ஹெக்டேர் கூடுதலான பரப்பில் சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாகத் தமிழகம், புதுவையில் பரவலாகப் பெய்த சிறு மழையினால் மானாவாரிப் பயிர்கள் பயனடையும். ஆனால், அதிக நீர்த் தேவையுள்ள நெல் சாகுபடிக்கு, குறிப்பாக தஞ்சை டெல்டா விவசாயிகள், காவிரியைத்தான் நம்பியுள்ளனர். மேட்டூர் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. செப்டம்பர் 14-ஆம் தேதி மாலை 77.56 அடியாக இருந்தது. கடந்த வாரம் வரை விநாடிக்கு 4,800 கனஅடி வந்துகொண்டிருந்த நிலைமை மாறி, தற்போது விநாடிக்கு 2,300 கன அடியாக நீர்வரத்து குறைந்துள்ளது. ஆனால், அணையிலிருந்து 15,000 கனஅடி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில், மிக வேகமாக மேட்டூர் அணையின் நீர் குறைந்துவிடும்.
கர்நாடகம் பிடிவாதமாக, செப்டம்பர் மாதம் காவிரியில் நீர் விடப்போவதில்லை என்று அறிவித்த நிலையில் பிரதமருக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதினார். இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
குறைந்தபட்சம் மத்திய பொதுப் பணித் துறைக் குழுவினரை ஆய்வுக்கு அனுப்பி, தமிழகத்துக்குக் குறைந்தபட்சமாக எந்த அளவுக்கு நியாயம் வழங்க முடியும் என்று ஆய்வு செய்யவும்கூட மத்திய அரசு உத்தரவிடவில்லை. அணைகளின் நீர் இருப்பும், காலமும் வேகமாகக் கரைந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மேட்டூர் அணை நீர் இருப்பு, அணையின் தோராய நீர்வரத்து ஆகியவற்றை மதிப்பிட்டு, இருக்கும் தண்ணீரை எவ்வாறு சிக்கனமாக அனைவருக்கும் பகிர்வது என்பதைத் தமிழக வேளாண் துறை, பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து, அமல்படுத்தும் அதிரடி முயற்சியில் தமிழக அரசு இறங்க வேண்டும். இதேபோன்று பற்றாக்குறை நிலவியபோது, பாசன நீரை நிலத்தின் மீது கொண்டு செல்லாமல், வாய்க்காலில் இருந்து குழாய்கள் மூலம் கொண்டு சென்றபோது, 20% தண்ணீர் வீணாவது தடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. இதேபோன்ற அல்லது இதைவிடவும் செம்மையான நீர் மேலாண்மை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
ஒவ்வொரு பகுதியிலும் பயிரிடப்பட்டுள்ள நெல் சாகுபடி பரப்புக்கு ஏற்ப, அனைவருக்கும் பாசன வசதி கிடைக்கும் வகையில் காவிரி நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த உடனடி மீள்ஆய்வு அவசியம். இதனால் நீர் மேலாண்மையுடன், விவசாயிகளிடம் நம்பிக்கையையும் விதைக்க முடியும்.
காவிரியின் ஒவ்வொரு துளியும் ஒரு நெல்மணி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தல் அலுவலர்களுக்கு பிரியாணி வாங்கிக் கொடுத்ததாக புகார்!

கூடுதல் நேரத்தில் கோல் அடித்த ரியல் பெட்டிஸ்..! முதலிடத்துக்கான வாய்ப்பை இழக்கும் ரியல் மாட்ரிட்!

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

