ஆம் ஆத்மியில் இருந்து மேலும் சில தலைவர்கள் விலகுவார்கள்: பாஜகவில் இணைந்த எம்.பி. ஸ்வாதி மாலிவால்நீட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு எப்போது? என்டிஏ அறிவிப்புவருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?எச்-1பி விசாவுக்கு 3 ஆண்டுகள் தடை? டிரம்ப் அரசு புதிய மசோதா!திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்!
/

இதுவும் அச்சுறுத்தல்தான்!

பாங்க் ஆஃப் பரோடா அதிகாரிகளின் உதவியுடன் ஹாங்காங் நகரில் செயல்படும் வங்கிகளுக்கு ரூ.6,100 கோடி முறைகேடாக அனுப்பப்பட்ட விவகாரத்தில் தற்போது வங்கியின் அதிகாரிகள் இருவர், எச்.டி.எப்.சி. வங்கியின் அன்னியச் செலாவணி பிரிவுத் தலைவர் கமல் கல்ரா உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Updated On :14 அக்டோபர் 2015, 8:05 pm

பாங்க் ஆஃப் பரோடா அதிகாரிகளின் உதவியுடன் ஹாங்காங் நகரில் செயல்படும் வங்கிகளுக்கு ரூ.6,100 கோடி முறைகேடாக அனுப்பப்பட்ட விவகாரத்தில் தற்போது வங்கியின் அதிகாரிகள் இருவர், எச்.டி.எப்.சி. வங்கியின் அன்னியச் செலாவணி பிரிவுத் தலைவர் கமல் கல்ரா உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 இந்த நடப்புக் கணக்குக்கு 30-க்கும் மேற்பட்ட வங்கிகள் மூலம் பணம் வந்து குவிந்துள்ளது. பின்னர், இந்தப் பணம் ஹாங்காங் நகரைச் சேர்ந்த 400 நிறுவனக் கணக்குகளுக்கு மாற்றப்பட்டபோது, இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான முன்பணம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணம் ஹாங்காங்-கிற்கு பரிவர்த்தனை மாற்றம் செய்யப்பட்ட பின்னர், இறக்குமதி செய்வதாகச் சொல்லப்பட்ட அரிசி, முந்திரி, பருப்பு எதுவுமே இந்தியாவுக்கு வரவில்லை. ஹாங்காங்கிற்கு பணம் அனுப்பும்போது ரூ.65 லட்சத்துக்கும் குறைவான தொகையைப் பல தடவைகளாக அனுப்பி, கண்காணிப்பு வளையத்திலிருந்து தப்பியுள்ளனர்.
 பாங்க் ஆஃப் பரோடா தில்லி அசோக் விஹார் கிளையில் 59 நிறுவனங்களின் பெயரிலான வங்கிக் கணக்குகள் மூலம் இந்தப் பரிவர்த்தனை நடத்தப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டைக் கண்டுபிடித்ததும் இதே வங்கிதான். இதையடுத்து, கிளையின் இரண்டு அதிகாரிகள் மீது வங்கி நிர்வாகமே புகார் அளித்துள்ளது. அதன் பிறகே இந்த விவகாரத்தின் மீது அமலாக்கத் துறை நடவடிக்கையில் இறங்கியது. அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ. அதிகாரிகளும் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.
 இந்த வங்கிக் கிளையில், தற்போது புகாரில் சிக்கியுள்ள 59 கணக்குகளுக்கும் நேரடியாகப் பணம் வரவு வைக்கப்பட்டது அதிகபட்சம் 10% மட்டுமே. மீதிப் பணம் முழுவதும் 2014-15 காலகட்டங்களில் இந்தியாவில் இயங்கும் அரசு மற்றும் தனியார் வங்கிகளிலிருந்து இணையவழி பரிவர்த்தனை மூலமாக இந்தக் கணக்குகளில் பணம் போடப்பட்டுள்ளது. அந்தப் பணத்தை அன்னியச் செலாவணிச் சட்ட விதிமுறைகளைப் பின்பற்றாமல் ஹாங்காங் நகர வங்கிக் கணக்குகளுக்கு பணம் அனுப்பிய தவறு, அந்தக் கிளை அதிகாரிகள் உதவியுடன் நடத்தப்பட்டு வந்துள்ளது. இது தெரிந்தும் அதைப் பதிவு செய்யாத தணிக்கை அதிகாரியை, வங்கி பதவி நீக்கியுள்ளது.
 ஒரே ஒரு கிளையில் உள்ள இரண்டு அதிகாரிகளைச் சரிசெய்துவிட்டால், அதன் வழியாக ரூ.6,100 கோடியை அன்னியச் செலாவணி விதிமுறைகளை மீறி வெளிக்கடத்த முடியும் என்பதுதான் இந்த விவகாரத்தின் மூலம் வெளிப்படும் உண்மை. அப்படியானால், இந்தியா முழுவதும் உள்ள சில லட்சம் வங்கிக் கிளைகள் மூலம் இத்தகைய முறைகேடுகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து நடக்கவில்லை என்பது என்ன நிச்சயம்?
 கருப்புப் பணம் மீட்பு நடவடிக்கையில் அரசு தீவிரம் காட்டிய பின்னர், இதுவரை 638 பேர் தங்களுக்கு வெளிநாடுகளில் ரூ.3,770 கோடி கருப்புப் பணம் இருப்பதாக ஒப்புக்கொண்டு அதற்கான அபராதம் செலுத்த முன்வந்தனர். ஆனால், ஸ்விட்சர்லாந்தில் இருப்பதாகச் சொல்லப்படும் இந்தியர்களின் கருப்புப் பண அளவுக்கும் இதற்கும் மிகப்பெரும் இடைவெளி இருக்கிறது.
 வெளிநாடுகளில் கருப்புப் பணம் சேமிப்பு என்பது, உள்நாட்டுத் தொழிலுக்கு வெளிநாடுகள் தர வேண்டிய பணத்தை இந்தியாவுக்குக் கொண்டு வராமல் அப்படியே வெளிநாடுகளில் கணக்குத் தொடங்கி அதில் சேமித்து வைப்பது என்பதாகக் கருதப்பட்டது. பின்னர், வெளிநாடுகளில் நிலக்கரி வாங்குதல், பெட்ரோலியப் பொருள் வாங்குதல், ஆயுத பேரங்கள் ஆகியவற்றில் அரசியல்வாதிகள் பெருந்தொகையைக் கமிஷனாகப் பெற்று அதைக் கருப்புப் பணமாக வெளிநாடுகளில் சேமிக்கத் தொடங்கினர்.
 உள்நாட்டு, வெளிநாட்டுத் தொழிலதிபர்களை தங்கள் நிறுவனத்தில் பங்குதாரராகச் சேர்த்து, பங்குத்தொகையை அப்படியே அவர்கள் கணக்கில் மாற்றுவதன் மூலம் கருப்புப் பணத்தை நேரடியாக இந்தியாவுக்கு கொண்டு வரும் நடைமுறைகளும் தெரியவந்தன. இப்போது இந்தியாவில் இருக்கும் கருப்புப் பணத்தை வெளிநாடுகளுக்கு வங்கி அதிகாரிகள் துணையுடன் அனுப்பிக்கொண்டிருக்கும் நடைமுறைகள் அம்பலத்துக்கு வந்துள்ளன.
 பணஅட்டை பயன்பாடு அதிகரிக்கும்போது கருப்புப் பணம் குறையத் தொடங்கும் என்று சொல்லப்படும் நிலையில், இணையவழி வங்கிப் பரிவர்த்தனை மூலம் பல ஆயிரம் கோடி வரவு வைத்து, அதை அப்படியே வெளிநாட்டுக்குப் பொய்யான வணிகத்துக்கு திருப்பிவிட முடிவதைப் பார்க்கும்போது, இதனைக் கண்டறியவும் கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் புதிய தடுப்பு நடவடிக்கைகளை வங்கித் துறையில் ஏற்படுத்துவது அவசியமாகிறது.
 இந்தியாவுக்கு வெளிநாட்டிலிருந்து கருப்புப் பணம் வருவதால் அரசுக்கு எதிராக நடக்கும், அரசு இயங்காமல் தடுக்கும் போராட்டங்களை ஊக்கப்படுத்த முடியும். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு உதவ முடியும். இந்தியாவிலிருந்து கருப்புப் பணம் வெளியேறும் என்றால், இந்தியாவின் உழைப்பு நமக்குத் தெரியாமலேயே சுரண்டப்படுவதில் போய் முடியும். எந்த வகையில் பார்த்தாலும் கருப்புப் பண விவகாரம் தேசத்துக்கு அச்சுறுத்தல்தான்.
 இந்த விவகாரத்தில் அதிகாரிகள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வங்கிக் கிளையில் நடப்புக் கணக்கு வைத்திருந்த 59 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்படவும் இல்லை, அவர்களது பெயர்களை அரசு தெரிவிக்கவுமில்லை. இந்த விவகாரத்தில் இன்னும் தீவிரமான நடவடிக்கை எடுத்தால் மட்டும் போதாது. கடந்த ஓராண்டில் பல்வேறு வங்கிகள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்ட பணப் பரிவர்த்தனை அனைத்தையும் மறு தணிக்கை செய்வது அவசியம்!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.