மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

இறுக்கம் தளரட்டும்!

பொருளாதாரத் தடை விதிக்கக் காரணம், இதனால் மக்களுக்கு இன்றியமையாத் தேவைகளில் பெரும் நெருக்கடி உருவாகும். துருக்கி அரசின் நடவடிக்கைகளை மக்கள் கடுமையாக விமர்சிக்க முற்படுவார்கள் என்பதுதான். ஆனால், பொருளாதாரத் தடை என்பது இருமுனைக் கத்தி போல. இந்தப் பொருளாதாரத் தடையால் ரஷியாவுக்கும் இழப்பு ஏற்படும்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:40 am

ஆசிரியர்

நவம்பர் 24-ஆம் தேதி ரஷிய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய துருக்கி நாட்டுக்கு பொருளாதாரத் தடை விதித்துள்ளது ரஷியா. இதனால் துருக்கி பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
 பொருளாதாரத் தடை விதிக்கக் காரணம், இதனால் மக்களுக்கு இன்றியமையாத் தேவைகளில் பெரும் நெருக்கடி உருவாகும். துருக்கி அரசின் நடவடிக்கைகளை மக்கள் கடுமையாக விமர்சிக்க முற்படுவார்கள் என்பதுதான். ஆனால், பொருளாதாரத் தடை என்பது இருமுனைக் கத்தி போல. இந்தப் பொருளாதாரத் தடையால் ரஷியாவுக்கும் இழப்பு ஏற்படும்.
 ரஷிய மக்கள் அதிகளவில் சுற்றுலாச் செல்லும் நாடு துருக்கி. கடந்த ஆண்டு, துருக்கி வந்த வெளிநாட்டுப் பயணிகளில் 32 லட்சம் பேர் ரஷியர்கள். துருக்கிக்கு அடுத்த நிலையில் ரஷியர்கள் சுற்றுலா செல்லும் இடம் எகிப்து. கடந்த அக்டோபர் மாதம் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினரால் ரஷியப் பயணிகள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட பிறகு, ரஷியாவின் எகிப்து விமான சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் துருக்கி செல்லத் தொடங்கினர். இப்போது அதுவும் தடைக்கு உள்ளாகியிருக்கிறது. துருக்கி - ரஷியா இடையிலான பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது.
 துருக்கியிலிருந்து உணவுப் பொருள்கள், பழங்கள் என ரஷியாவுக்கு அதிகளவு ஏற்றுமதி செய்யப்பட்டுவரும் நிலையில், தடை அறிவிப்புக்கு முன்பாகவே, துருக்கியிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களில் ரஷிய அதிகாரிகள் அதிரடி ஆய்வு நடத்தி, இறுக்கமான சூழலை உருவாக்கிவிட்டனர். கடவுச்சீட்டு இல்லாமல் துருக்கியர்கள் ரஷியாவுக்கு வரும் நடைமுறை தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
 ரஷியாவிடமிருந்து எரிவாயு கொள்முதல் செய்யும் நாடுகளில் ஜெர்மனிக்கு அடுத்த நிலையில் இருப்பது துருக்கி. அவர்கள் தங்கள் தேவையில் 57% எரிவாயுவை ரஷியாவிடம் கொள்முதல் செய்கிறார்கள். இப்போது தடை விதிக்கப்படுவதால் துருக்கி மக்களுக்கு மிகப்பெரும் நெருக்கடி ஏற்படும். ரஷியாவுக்கு பொருளாதார இழப்பு ஏற்படும்.
 ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து பெட்ரோலிய எண்ணெய்ப் பொருள்களை துருக்கி பெறுகிறது என்று ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது. அது பொய்ப்பிரசாரம் என்று துருக்கி அதிபர் சொல்லி வருகிறார். இப்போது இத்தகைய தடை மூலம், அவர்கள் தங்கள் எரிபொருள் தேவைக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புகளை நாட வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். துருக்கியை வலியப்போய் ஐ.எஸ். வலையில் வீழச்செய்யும் முயற்சியாகத்தான் ரஷியாவின் முடிவு விமர்சிக்கப்படுகிறது.
 ரஷியாவின் பல்வேறு வணிகமுத்திரைப் பொருள்களில் துருக்கி தொழிலதிபர்களின் முதலீடு இருக்கிறது. துருக்கியைச் சேர்ந்த 100 கட்டுமான நிறுவனங்கள் ரஷியாவில் சுமார் 800 கட்டுமானத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இப்போது இவை செயல்பட முடியாது. இவர்களது முதலீடு முடங்கிப்போகும்.
 துருக்கிக்கு இன்றியமையாத் தேவை மின்சாரம். ஆனால், அவர்களுக்குப் போதுமான உற்பத்தி இல்லை. இதற்கு ரஷியா உதவுகிறது. துருக்கியில், மார்சின் என்ற இடத்தில் அணுமின் நிலையத்தை ரஷியா அமைத்துக் கொண்டிருக்கிறது. இதற்காக, இதுவரை மூன்று பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்து இருக்கிறது. இனி இவர்களும் அங்கே நுழைய முடியாது.
 ரஷியாவின் எஸ்.யு.24 போர் விமானம் துருக்கி வான் எல்லையில் அத்துமீறிப் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டது என்று துருக்கி அரசு தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும், துருக்கியின் வாதம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாததாகவே முடிந்தது. ரஷியப் போர் விமானம் துருக்கி எல்லைக்குள் அத்துமீறிப் பறந்த நேர அளவு 17 விநாடிகள். ஆனால், 10 முறை எச்சரிக்கை விடுத்தும் அவர்கள் மதிக்கவில்லை என்று துருக்கி சொன்னது. இத்தனை முறை எச்சரிக்கை தருவதற்கு குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் தேவை. மேலும் ரஷிய விமானம் துருக்கிக்கு எந்தவிதமான மிரட்டல் விடுக்கவும் பறக்கவில்லை. அந்த போர் விமானங்கள் சிரியா எல்லையில் உள்ள பயங்கரவாதக் குழுக்கள் மீதான தாக்குதலுக்காகச் சென்றவை என்பதை துருக்கி நன்கு அறியும்.
 துருக்கி மன்னிப்பு கேட்கவேண்டும் என்று ரஷியா உறுதியாக இருந்தது. மன்னிப்பு கோராத நிலையில் பொருளாதாரத் தடை விதித்து, அறிவிப்பு செய்துள்ளார் ரஷிய அதிபர் விளாதிமிர் புதின். தடை குறித்து கருத்து தெரிவித்துள்ள துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன், இது உணர்ச்சிவசப்பட்டு மேற்கொள்ளப்பட்ட முடிவு, பொருத்தமற்றது என்று கருத்து தெரிவித்துள்ளார். அதேவேளையில், போர்விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு மன்னிப்பு கேட்காமல் தனது வேதனையைத் தெரிவித்திருக்கிறார். இது நடந்திருக்கக் கூடாது என்றும் கூறியுள்ளார். ஆனால், வெளிப்படையாக மன்னிப்பு கேட்கத் தயங்குகிறார்.
 இரு நாடுகளின் உறவு, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கான பொருளாதாரம் எல்லாமும் நொறுங்கிப்போக 17 விநாடி அத்துமீறல் போதுமானதாக இருக்கிறது. இரு நாட்டுத் தலைவர்களின் அகங்காரம்கூட, ஒருவகை பயங்கரவாதம்தான்.
 இந்த மௌனப் போரில் பாதிக்கப்படுவது இரு நாட்டு மக்கள்தான். ரஷிய அதிபர் புதின் அல்லது துருக்கி அதிபர் தய்யிப் எர்டோகன் அல்ல. இதுவரை, துருக்கி அதிபருடன் ரஷிய அதிபர் பேசவில்லை. அவ்வளவு கோபம். பாரீஸில் நடைபெறவிருக்கும் புவிவெப்ப மாறுதல் மாநாட்டில் இருவரும் சந்தித்துப் பேச வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பிறகு நிலைமை சீரடையும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இறுக்கம் தளரும் என எதிர்பார்ப்போம்.
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.