காலத்தின் தேவை!
அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்ட காப்பீட்டுத் திருத்தச் சட்ட மசோதா மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிட்டது.


அவசரச் சட்டமாகப் பிறப்பிக்கப்பட்ட காப்பீட்டுத் திருத்தச் சட்ட மசோதா மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. கடந்த ஆறு ஆண்டுகளாக நாடாளுமன்றத்தில் இப்போது அப்போது என்று இழுத்தடிக்கப்பட்ட அந்த மசோதாவுக்கு, நரேந்திர மோடி அரசு பதவி ஏற்று ஒன்பது மாதங்களுக்குப் பிறகாவது விடிவு காலம் பிறந்திருப்பதில் மகிழ்ச்சி.
கடந்த ஐந்து ஆண்டுகளும் காப்பீட்டு மசோதாவை நிறைவேற்றவிடாமல் மன்மோகன் சிங் அரசைத் தடுத்த புண்ணியம் இப்போதைய ஆளும் கட்சியான பா.ஜ.க.வைச் சேரும். கடந்த 9 மாதங்களாக இந்த மசோதாவைத் தொங்கலில் விட்ட புண்ணியம், "இது நாங்கள் கொண்டு வந்த மசோதா' என்று பெருமை தட்டிக் கொள்ளும் காங்கிரûஸச் சாரும். இதற்கெல்லாம் காரணம், கொள்கையல்ல, வெற்று அரசியல் அவ்வளவே. காங்கிரஸால் முன்மொழியப்பட்ட மசோதா என்பதால் அதைக் கிடப்பில் போடாமல், அரசியலை ஒதுக்கிவிட்டு நிறைவேற்ற முற்பட்ட நரேந்திர மோடி அரசுக்கும், பா.ஜ.க.வைப் போலத் தொடர்ந்து பிடிவாதம் பிடித்து மசோதா நிறைவேறாமல் தடுத்து நிறுத்த முற்படாமல் அரசுடன்
ஒத்துழைத்த காங்கிரஸ் கட்சிக்கும் நன்றி. காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிப்பதும், அதைத் தனியார்வசம் ஒப்படைப்பதும் தேவைதானா? அரசு நிறுவனங்களான இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் (எல்.ஐ.சி.), நான்கு அரசுடைமைப் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களும் முறையாகவும், திறமையாகவும் செயல்பட்டிருந்தால் இந்தக் கேள்விக்கே இடமிருந்திருக்காது.
1956-இல் தேசியமயமாக்கப்பட்டு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனம் உருவாகி ஏறத்தாழ 60 ஆண்டுகளாகப் போகிறது. ஆனால், ஆயுள் காப்பீடு, பொதுக் காப்பீடு இரண்டையும் சேர்த்து இந்தியாவில் காப்பீடு செய்பவர்களின் எண்ணிக்கை 2013 புள்ளிவிவரப்படி மொத்த மக்கள்தொகையில் வெறும் 3.9% மட்டுமே. 2000-த்தில் 2.3%-ஆக இருந்தது, 2013-இல் 3.9%-ஆக உயர்ந்திருப்பதற்குக் காரணம் பல தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியதால் ஏற்பட்ட விழிப்புணர்வுதான் எனலாம்.
ஏற்கெனவே காப்பீட்டுத் துறையில் 26% அன்னிய முதலீட்டுக்கு வாசலைத் திறந்துவிட்டு, தனியார் நிறுவனங்கள் செயல்படவும் அனுமதித்துவிட்ட நிலையில், இப்போது அன்னிய முதலீட்டுக்கான விழுக்காட்டை அதிகரிப்பதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. 49% அன்னிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கும் அதேவேளையில், காப்பீட்டு நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களாக மட்டுமே இயங்க முடியும் என்கிற நிபந்தனையும், காப்பீட்டு (திருத்த) சட்டத்தில் இடம் பெறுவதால் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. ஆனால், அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் ரூ.20,000 கோடி அன்னிய முதலீடு இந்தியாவுக்குக் கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளாகவே உறுப்பினர்களின் முதலாண்டுக்கான காப்பீட்டுத் தவணைத் தொகையின் அளவு குறைந்து வருவதாகத் தெரிகிறது. 2012-இல் ரூ.86,698 கோடியாக இருந்த முதலாண்டுத் தவணைத் தொகை 2013-இல் ரூ.84,726 கோடியாகவும், 2014-இல் ரூ.73,777 கோடியாகவும் குறைந்து வந்திருக்கிறது. தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் தவணைத் தொகையில் 1.4% வீழ்ச்சி காணப்படுகிறது. முதலீடு இல்லாமல் இருப்பது இதற்கு முக்கியமான காரணம்.
ஒரு நாட்டின் கட்டமைப்புத் திட்டங்களுக்குத் தேவையான நிதித் தேவையை வங்கிகளும், காப்பீட்டு நிறுவனங்களும்தான் கொடுக்க முடியும். வங்கிகளின் வைப்பு நிதிகள் ஒரு சில ஆண்டுகளுக்கு மட்டுமே என்பதால், கட்டமைப்புத் திட்டங்களுக்கு நீண்டகாலக் கடனுதவி அளிக்க வங்கிகளால் இயலாது. அதேநேரத்தில், காப்பீட்டு நிறுவனங்கள், குறிப்பாக, ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களால் நீண்டகாலக் கடனுதவி அளிக்க முடியும். காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க, கட்டமைப்புத் திட்டங்களில் முதலீடு செய்யும் அவர்களது ஆற்றலும் அதிகரிக்கும்.
காப்பீட்டுத் துறையில் அன்னிய முதலீட்டுக்கு வழிகோலுவது என்பது மறைமுகமாக சாலை வசதிகள், ரயில்வே, விமானத் துறைகளின் வளர்ச்சி, துறைமுகங்கள் நிறுவுதல், மின் உற்பத்தி ஆகியவற்றிற்குத் தேவையான நீண்டகால நிதியுதவிக்கு வழிகோலுவதும்கூட என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 25 ஆண்டுகளுக்கு நீண்டகாலக் கடனுதவியை காப்பீட்டுத் துறையால் மட்டுமே வழங்க முடியும்.
தனியார் துறையானாலும், அரசுத் துறையானாலும் காப்பீட்டுத் துறையைப் பொருத்த வரை, பொதுமக்களிடமிருந்து தவணைத் தொகையைப் பெறுவதில் அவர்கள் காட்டும் முனைப்பையும், சுறுசுறுப்பையும், இழப்பீடு வழங்குவதில் காட்டுவதில்லை. பலவித நிபந்தனைகளையும், கண்ணுக்குத் தெரியாத சட்ட திட்டங்களையும் காட்டி இழப்பீடு தரப்படாமல் தடுப்பதற்கான எல்லா வழிகளையும் கண்டுபிடிப்பார்கள். அதைக் கண்காணித்துத் தடுக்க, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் சட்டமாக இருக்கும் காப்பீட்டு (திருத்த) மசோதா, காப்பீட்டு ஒழுங்காற்று ஆணையத்திற்கு மிக அதிகமான அதிகாரங்களை வழங்கி இருப்பது கவனிக்கவும் பாராட்டவும் வேண்டிய அம்சம்.
தகவல் தொலைத்தொடர்புத் துறையில் தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு ஏற்பட்டிருக்கும் தகவல் புரட்சி போல, காப்பீட்டுத் துறையிலும் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட வேண்டியது அவசியம். அரசு நிறுவனங்கள் செய்யத் தவறிவிட்ட இந்தப் பணியைத் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. சாமானியனுக்கும் காப்பீட்டுப் பாதுகாப்பு சாத்தியப்பட்டாக வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...