குமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் 3-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!திமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கோவை கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை: இன்று இறுதி விசாரணை!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்! ஜெயலலிதா மறைந்தபிறகு கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்: ஓபிஎஸ்ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 10,000 கருணைத் தொகை! - அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள்!நல்லகண்ணு உடல்நிலை தொடர் பின்னடைவு!
/

ஜகந்நாதருக்குமா?

கோயில் சார்ந்த சில சடங்குகள் காலத் தேவைக்கேற்ப மாறுவதுண்டு. காலையில் நடக்க வேண்டிய தேர்த் திருவிழா மாலையில் நடைபெறுதல், முதல் மரியாதைக்குரியவரின் பதவி அல்லது குடும்பம் மாறிப்போதல் போன்றவை சமூகச் சூழல் சார்ந்தவை.

News image
Updated On :9 ஜனவரி 2024, 5:52 am

ஆசிரியர்

கோயில் சார்ந்த சில சடங்குகள் காலத் தேவைக்கேற்ப மாறுவதுண்டு. காலையில் நடக்க வேண்டிய தேர்த் திருவிழா மாலையில் நடைபெறுதல், முதல் மரியாதைக்குரியவரின் பதவி அல்லது குடும்பம் மாறிப்போதல் போன்றவை சமூகச் சூழல் சார்ந்தவை. இம்மாற்றத்தால் அந்தக் கோயிலின் தனித்தன்மை கெடுவதில்லை.
 சில சடங்குகள் மாற்றப்படக் கூடாதவை. ஏனென்றால், அவை கோயில் அமைப்பு, மூர்த்தங்களில் பொருத்தப்பட்டுள்ள யந்திரம் ஆகியவற்றின் தன்மைக்கான சடங்குகள். சில கோயில்களில் மூலவருக்கு அபிஷேகம் கிடையாது. வெறும் தீபஆராதனை மட்டுமே. சில மூலவருக்கு கோயில் வழக்கப்படி என்னென்ன அபிஷேகங்கள் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்தாக வேண்டும். அபிஷேகம் என்பது தெய்வத் திருவுருவம் சிதைவுறாமல் (காலத்தால் கல் உலுத்துப் போகாமல்) இருப்பதற்கான பாதுகாப்பு (பிரசர்வேடிவ் மெத்தட்). மூர்த்தங்களுக்குப் பல்வேறு விதமான எண்ணெய்க் காப்புகள் கால முறைப்படி, உரிய காலத்தில் செய்யப்படுவதும் இதனால்தான்.
 அண்மையில் ஒரிசா மாநிலத்தில் புரி ஜகந்நாதர் ஆலயத்தின் நவகளேபர நிகழ்ச்சியின் முதன்மை நிகழ்வான "பிரம்ம பதார்த்த பரிவர்த்தன்" உரிய நேரத்தில் நடத்தப்படாமல் காலதாமதமானது பக்தர்களை பெரும் மனவேதனைக்கு உள்படுத்தியுள்ளது.
 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புரி ஜகந்நாதர் ஆலயக் கருவறையில் உள்ள 4 மூர்த்தங்களும் வேப்ப மரத்தால் ஆனவை. இவை பன்னிரு ஆண்டுகளுக்கு ஒரு முறை, புதிய வேப்ப மர கட்டைகளால் மாற்றி அமைக்கப்படுகின்றன. அந்த மூர்த்தங்களுக்குத் தெய்வத் தன்மை ஏற்படுத்தும் நிகழ்வுகளுக்குப் பிறகு தேரில் ஊர்வலமாக எடுத்து வரப்படுகின்றன. இந்தத் தேர்த் திருவிழா ஜூலை 18-இல் நடைபெறவுள்ளது. சுமார் 50 லட்சம் பேர் பங்கேற்கக்கூடும்.
 நவகளேபர நிகழ்வில் மூர்த்தங்களுக்கான வேப்ப மரத்தைத் தேடும் குழு எவ்வாறு, எத்தனைப் பேர் கொண்டதாக அமைய வேண்டும், தேர்வு செய்யப்படும் வேப்ப மரத்தின் உயரம், தண்டின் சுற்றளவு என ஒவ்வொன்றுக்கும் விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது. தேர் எத்தனை அடி உயரம் இருக்க வேண்டும். சக்கரத்தில் எத்தனை கால்கள் இருக்க வேண்டும் எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளில் சிறு மாற்றமடைந்தால் யாரும் குறை சொல்லப் போவதில்லை.
 ஆனால், நவகளேபர நிகழ்வில் அடிப்படையான சடங்கு பிரம்ம பதார்த்த பரிவர்த்தன். பழைய மூர்த்தங்களில் உள்ள ரகசியப் பொருளை புதிய நான்கு மூர்த்தங்களின் தலைக்குழிக்கு இடம் மாற்றும் நிகழ்வு இது. இந்தப் பொருள் என்ன என்பது யாருக்குமே தெரியாது.
 இந்த பிரம்ம பதார்த்தத்தை புதிய மூர்த்தங்களுக்கு மாற்றி வைக்கும் நிகழ்ச்சி அமாவாசை நள்ளிரவில்தான் நடைபெற வேண்டும். கோயில்களில் எந்த வித வெளிச்சமும் இல்லாதபடி, தீப்பந்தம் அல்லது விளக்குகள் அணைக்கப்பட வேண்டும். தலைமை தைவபதி (குருக்கள்) அமாவாசை நள்ளிரவிலும்கூட தனது கண்களைக் கட்டிக் கொண்டு, கைகளில் ஜகந்நாதருக்கு அணிவிக்கும் துணியைச் சுற்றிக் கொண்டுதான் அந்த ரகசியப் பொருளை எடுத்து புதிய மூர்த்தத்தில் வைக்க வேண்டும். அவர் உள்பட யாரும் பார்க்கவோ, தொட்டுணரவோ கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. கடந்த 8 நூற்றாண்டுகளாக இந்தச் சடங்கு சரியாக அமாவாசை நள்ளிரவில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால், நிகழாண்டில் ஜூன் 16-ஆம் தேதி அமாவாசை நள்ளிரவில் நடைபெறாமல், பல மணி நேர தாமதமாகி, பொழுது விடிந்தபிறகே நடத்தப்பட்டுள்ளது.
 அந்த ரகசியப் பொருள் என்ன என்பது இந்தச் சடங்கில் ஈடுபட்ட தைவபதிகளுக்கும் தெரியாது. ஒரு மூத்த தைவபதி இதுபற்றி ஒரு பேட்டியில் குறிப்பிட்டபோது, "ஒரு முயல் குட்டியைத் தூக்குவதைப் போன்ற அசைவை உணர்ந்தேன்" என்று பேசியிருக்கிறார். இதைத்தவிர, பிரம்ம பதார்த்தம் என்பது என்ன என்று யாருக்கும் தெரியாது.
 இன்றைய நவீன உலகில் அணு உலைக் கழிவு எவ்வளவு பாதுகாப்பாகப் புதைக்கப்படுகிறது என்பதை அறிவோம். அதில் அலட்சியம் காட்டினால் எத்தகைய எதிர்ப்புகள் எழுகின்றன? பிரம்ம பதார்த்தமும் அதற்கொப்பானதுதான். ஆனால். மனிதருக்கு நன்மை தரக்கூடிய கதிர்வீச்சுப் பொருளாக அது இருக்கக்கூடும். ஒருவேளை, ஒளி பட்டால் மாறும் தன்மை கொண்டதாகவும் இருக்கலாம். அதனால்தான் இத்தனை ரகசியம் காக்கப்பட்டிருக்க வேண்டும்.
 தைவபதிகளுக்குள் இரு குழுக்களாகப் பிரிந்து தகராறு ஏற்பட்டதால் தாமதம் என்றும், புதிய மூர்த்தங்கள் செய்வதில் தாமதம் என்றும் என்ன காரணம் சொல்லப்பட்டாலும் உண்மை என்னவென்றால், பிரம்ம பதார்த்த பரிவர்த்தன், அமாவாசை நள்ளிரவில் நடைபெற வேண்டும் என்பதில் கோயிலை நிர்வகிக்கும் அரசு அதிகாரிகள் அக்கறை காட்டாததால் இந்தக் காலதாமதம் என்பது மட்டும் உறுதி. யாருடைய தவறு என்று அரசின் உத்தரவுப்படி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
 "காலதாமதம் ஏற்பட்டது உண்மைதான். என்றாலும், தைவபதி தனது கண்களைக் கட்டிக்கொண்டு, கைகளில் துணி சுற்றிக்கொண்டுதான் ரகசியப் பொருளை இடம் மாற்றி வைத்தார். அனைவரும் கோயிலிலிருந்து வெளியேற்றப்பட்டனர்' என்று கோயில் நிர்வாக அதிகாரிகள் கூறுகின்றனர். அதாவது, பகலில் நடந்தாலும் யாரும் பார்த்துவிடவில்லை என்கின்றனர். இது முறையான பதில் அல்ல.
 கோயில் மூலவர், மூர்த்தங்களுக்கான சடங்குகள் அறிவியல் சார்ந்தவை. அவற்றில் அலட்சியம் காட்டுவது கோயிலின் தனித்தன்மையைக் குலைக்கும். பக்தர்களை வேதனைப்படுத்தும். புரி ஜகந்நாதர் ஆலயமும் உலகளாவிய அளவில் பெயர் பெற்றது. அதன் ஆசாரங்களில் தவறு நேர்ந்திருக்கவே கூடாது!
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.