கண்ணுக்குத் தெரியாமல் ஒரு மிகப்பெரிய பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்தியப் பொருளாதாரம் வளர்ந்து விடாமல் அதன் தோளில் ஏறி அமர்ந்து, பலனை எல்லாம் அட்டையாக உறிஞ்சிக் கொண்டிருக்கும் கருப்புப் பணப் பொருளாதாரத்திற்கும், அதன் முதுகெலும்பை உடைக்கும் முயற்சிக்கும் இடையே நடக்கும் அந்தப் போராட்டம் வெளிப்படையாகத் தெரிவதில்லை. கருப்புப் பணத்திற்கு எதிராக எந்தவொரு அரசு நடவடிக்கை எடுக்க முற்பட்டாலும், அந்த ஆட்சியைக் கவிழ்க்க கருப்புப் பணப் பொருளாதாரம் இயன்றவரை முயற்சி செய்யும் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.
அன்னிய நாட்டிலிருந்து கருப்புப் பணத்தைக் கொண்டு வரவோ, அது பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்ளவோகூட, அந்த நிழல் சக்திகள் அனுமதிப்பதில்லை. இல்லையென்றால், வருமான வரிக் கணக்கில் எந்தெந்த நாடுகளுக்கு ஒருவர் பயணித்திருக்கிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும் என்கிற நிபந்தனையை எதிர்ப்பானேன்?
அன்னிய நாட்டிலுள்ள கருப்புப் பணத்தைக் கொண்டு வருவது இருக்கட்டும், இந்தியாவுக்குள் இருக்கும் கருப்புப் பணத்தை முடக்கவும், கருப்புப் பணப் பரிவர்த்தனைகளைக் கட்டுப்படுத்தவும், கருப்புப் பணம் உருவாவதைத் தடுக்கவும் மத்திய அரசு முனைந்திருக்கிறது. அதன் முதல்படியாகக் கடந்த நிதிநிலை அறிக்கையில் கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு, தண்டனை கடுமையாக்கப்பட்டது. இப்போது, மின்னணுச் சேவையை (இ-டிரான்சாக்ஷன்ஸ்) ஊக்குவிக்கும் முயற்சியிலும் இறங்கி இருக்கிறது.
கடந்த 2013-14 நிதியாண்டில் மட்டும் கணக்கில் காட்டப்படாத வருவாய் ரூ.90,390 கோடி என்றும், சோதனைகள் மூலம் கைப்பற்றிய கருப்புப் பணம் ரூ.10,791 கோடி என்றும் வருமான வரிப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இந்த அளவுக்குக் கருப்புப் பணம் உருவாவதற்கு மூல காரணம், இந்தியாவில் வர்த்தகப் பரிமாற்றங்கள் பெரும்பாலும் நேரடிப் பணப் பரிமாற்றங்களாக மட்டுமே இருப்பதும், வங்கிப் பரிமாற்றம் குறைவாக இருப்பதும்தான்.
நேரடி ரூபாய் பணப் பரிமாற்றத்தைச் சார்ந்த பொருளாதாரமாக இந்தியா இருப்பதால், அது எளிதாகக் கருப்புப் பணம் உருவாக வழிகோலுகிறது. இந்தியாவைப் போன்ற பிற நாடுகளான பிரேசில் (3.9%), மெக்சிகோ (5.3%), தென் ஆப்பிரிக்கா (3.7%) ஆகியவற்றைவிட நமது நாட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ரூபாய் பரிமாற்றத்தின் அளவு நான்கு மடங்கு (12%) அதிகம். ரூபாய் நோட்டு மூலம் பரிமாற்றம் எனும்போதே, கருப்புப் பணத்தைக் கண்டறிந்து தடுப்பது இயலாததாகிறது.
பிரச்னை அதுமட்டுமல்ல, இந்தியாவின் மக்கள்தொகையில் வருமான வரி செலுத்துபவர்களின் விழுக்காடு வெறும் 3% மட்டுமே. தெருவுக்குத் தெரு நாம் பார்க்கும் பல திடீர் பணக்காரர்கள் வரி செலுத்துவதே இல்லை. அவர்கள் வரி வளையத்துக்குள் அகப்படுவதில்லை. கருப்புப் பணப் பரிமாற்றத்தினூடே மட்டுமே அவர்களது வியாபாரம் நடைபெறுகிறது.
இப்படிப்பட்ட நிலையில், நேரடியான பணப் பரிமாற்றத்திற்கு முற்றுப்புள்ளி விழாத வரையில், கருப்புப் பணத்தின் குரல்வளையை நெரிப்பது என்பது இயலாத விஷயம். இதை உணர்ந்துதான், தென் கொரியா போன்ற வளர்ச்சி அடைந்த ஆசிய நாடுகள், மின்னணு சேவையை ஊக்குவித்துக் கருப்புப் பணம் உருவாவதைக் கணிசமாகத் தடுக்க முற்பட்டிருக்கின்றன. அவர்கள் வழியில், இந்தியாவும் அதிக அளவில் மின்னணு சேவை மூலம் வியாபாரப் பரிமாற்றங்கள் நடப்பதை ஊக்குவிப்பது என்கிற முயற்சியில் இறங்கி இருக்கிறது.
வியாபாரப் பரிமாற்றங்களுக்கு பெரிய தொகையாக இருந்தாலும் வங்கி அட்டைகளையோ, காசோலைகளையோ, இணையதளப் பரிமாற்றத்தையோ மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்படுத்தும் முயற்சியில் அரசு இறங்கி இருக்கிறது. குறிப்பாக, இடநிலப் பயன்மாற்றங்களில் (ரியல் எஸ்டேட்) பாதிக்குப் பாதி கருப்புப் பணப் பரிமாற்றம் நடைபெறுவது அல்லது நேரடிப் பணப்பரிமாற்றம் நடைபெறுவது தடுக்கப்பட்டாலே மிகப்பெரிய அளவில் கருப்புப் பணத்தைக் கட்டுப்படுத்திவிடலாம். ஏறத்தாழ, ரூ.128 லட்சம் கோடி அளவிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் (ஜி.டி.பி.) உள்ள இந்தியாவில், நேரடிப் பணப் பரிமாற்றம் தடுக்கப்பட்டால், அதனால் ஏற்படும் ஆதாயங்கள் அளப்பரியவை.
லட்சம் ரூபாய்க்கு மேலே உள்ள அனைத்து கொடுக்கல் வாங்கல்களும் இனிமேல் வங்கி அட்டை, காசோலை, இணையப் பரிமாற்றம் மூலம் மட்டுமே என்று ஏற்பட்டுவிட்டால், கருப்புப் பணம் உருவாவது கணிசமாகத் தடுக்கப்படும் என்பது மட்டுமல்ல, அரசியல் தளத்திலும் கருப்புப் பணத்தின் ஆதிக்கம் கணிசமாகக் குறையக்கூடும். கடுமையான கருப்புப் பணத் தடுப்புச் சட்டம் ஏற்கெனவே கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், இந்தப் புதிய அணுகுமுறை கருப்புப் பணத்தின் ஊற்றுக்கண்ணையும் அடைக்க மேற்கொள்ளப்படும் புதிய முயற்சி.
இணைய வணிகம், இணையத்தின் மூலம் பயன்பாட்டுக் கட்டணம் செலுத்துதல் ஆகியவை அதிகரித்து வருகின்றன. செல்லிடப்பேசிகளின் பயன்பாடும், "ஜன்தன்' வங்கிக் கணக்குத் திட்டமும் மின்னணு சேவையை கிராமப்புற அளவிலும் விரைவுபடுத்தும் என்கிற எதிர்பார்ப்புதான் அரசின் முனைப்புக்குக் காரணம்.
பெட்ரோல் போடுவது, பயன்பாட்டுக் கட்டணங்கள் செலுத்துவது போன்றவற்றுக்கு இனி வங்கி அட்டைகளை மட்டுமே பயன்படுத்துவது, நேரடிப் பணப் பயன்பாட்டைத் தவிர்ப்பது என்று ஒவ்வொரு பொறுப்புள்ள இந்தியனும் உறுதி பூண்டாலே போதும், கருப்புப் பணத்திற்குக் கடிவாளம் போட்டதாகிவிடும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

