குஜராத் மாநிலத்தின் உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வகை செய்யும் உள்ளாட்சி சட்டத் திருத்த மசோதாவுக்கு மாநில ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்படி, வாக்களிக்கத் தவறும் வாக்காளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், அந்தத் தொகை எவ்வளவாக இருக்கும் என்பது குறித்து முடிவு காணப்படவில்லை.
குஜராத்தின் முந்தைய ஆளுநர் கமலா பெனிவால் இந்த மசோதாவுக்கு அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். இது தனி மனித உரிமையில் குறுக்கிடுவதாக அவர் காரணம் கூறியிருந்தார். ஆனால், மத்தியில் பா.ஜ.க. அரசு அமைந்து, நரேந்திர மோடி பிரதமராகப் பதவியேற்ற பின்னர், புதிய ஆளுநராகப் பதவியேற்றுள்ள கோலி, தற்போது இந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கியுள்ளார். கடந்த ஒரு வார காலமாக இது பல்வேறு தளங்களில் விவாதப் பொருளாக இருக்கிறது.
வாக்களிப்பதைக் கட்டாயமாக்குவது தேவையா? இது சாத்தியமா? இது தனி மனித உரிமையில் தலையிடுவதாகாதா? அபராதம் என்றால் அதற்கு அளவு என்ன? இதனை மக்களவை, சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கும் நடைமுறைப்படுத்த இயலுமா ஆகியவைதான் விவாதங்களில் இடம்பெறும் முதன்மையான கேள்விகள். இதை ஆதரிப்போரும் உள்ளனர்; எதிர்ப்போரும் உள்ளனர்.
வாக்கு என்பது உரிமை. ஆனால், வாக்களிப்பது என்பது கடமை அல்ல. அது குடிமகனின் விருப்பம். ஒரு தனி மனிதனைக் கட்டாயப்படுத்தும்போது, அது அவரது தனி மனித உரிமையில் தலையிடுவதாக ஆகிறது என்ற வாதம் பெரும்பாலானோரால் முன்வைக்கப்படுகிறது. அவர்கள் மேலும் தங்கள் வாதத்துக்கு வலுக்கூட்டும்போது சொல்வது இதுதான்: தகவல் அறியும் உரிமைச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் பொருந்தும். ஆனால், எல்லோரும் தகவல் கேட்டுப் பெற வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது அவரவர் விருப்பம் என்கிறார்கள்.
ஆனால், இதற்கு எதிரான வாதத்தை முன்வைப்போர் இதே கேள்வியை சற்றுத் திருப்பிப் போடுகிறார்கள். கல்வி உரிமைச் சட்டம் என்பது எல்லாக் குழந்தைகளுக்கும் உரியது. இதை, விருப்பம் இருந்தால் படிக்கலாம், இல்லாவிட்டால் படிக்காமல் இருந்துவிடலாம் என்று கூறி, தங்கள் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்காத பெற்றோர்களைத் தண்டிப்பதோ அல்லது குழந்தைகளைக் கட்டாயமாகப் பள்ளிக்கு அனுப்பத் தவறினால் தண்டனை விதிப்பதோ எவ்வகையில் குற்றமாகும்? எந்த விதத்தில் தனி மனித உரிமையில் தலையிடுவதாக ஆகும்? தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கினால், அது தனி மனித உரிமையில் தலையிடுவதாக ஆகிவிடுமா? ஜனநாயகம் கேலிக்கூத்தாக மாறாமல் இருக்கவும், ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்கினால் என்ன தவறு என்பது எதிர்வாதம்.
எல்லாத் தேர்தல்களிலும் சராசரியாக வெறும் 60% பேர்தான் வாக்களிக்கின்றனர். இந்த 60% வாக்காளர்களில் சுமார் 25% பேர் தேர்வு செய்யும் நபர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுகிறார். அதாவது, ஒரு ஜனநாயகத்தில் மிகக் குறைந்த ஒரு பிரிவினர் மட்டுமே ஆட்சியாளர் தேர்வுக்கு காரணமாக இருக்கிறார்கள். இத்தகைய மோசமான நிலையை போக்கவே வாக்களிப்பது கட்டாயம் என்ற சட்டம் தேவைப்படுகிறது. இவ்வாறு, வாக்களிப்பது கட்டாயம் என்ற நிலை இந்தியாவுக்குப் புதியது. ஆனால், ஆஸ்திரேலியா, பிரேசில் ஆகிய நாடுகளில் அமலில் உள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை ஓர் அடையாளச் சான்று என்பதால், இந்த வாய்ப்பை இழக்க யாரும் விரும்புவதில்லை. ஆகவே, அனைவரும் பெயர் பதிவு செய்கிறார்கள். ஆனால், வாக்களிப்பதை மட்டும் தங்கள் விருப்பம் எனக் கருதுகிறார்கள். இதனால், வாக்காளர் பெயர் பட்டியலில் பாதிக்கும் மேற்பட்டோர் பெயர், அதை அச்சிடும் செலவு, ஒவ்வொரு வாக்காளருக்கும் தேர்தல் ஆணையம் புகைப்படத்துடன் அச்சிட்டுத் தரும் வாக்குச்சாவடி சீட்டு எல்லாமும் வீண் செலவாகப் போகிறதே, இது அரசுக்கு நட்டமில்லையா?
இது தொடர்பான விவாதங்களில், வாக்களிப்பது கடமையா, உரிமையா என்பதைக் காட்டிலும், வாக்களிக்கத் தவறுவோருக்கு அபராதம், தண்டனை என்பதற்கு மட்டுமே எதிர்ப்பு இருப்பதைக் காண முடிகிறது.
அதேபோன்று, வாக்குச் சாவடிக்கு அன்றைய தினம் வரமுடியாத நிலை ஏற்பட்டு, வாக்களிக்கத் தவறும்போது ஒருவர் என்ன செய்ய வேண்டும், யாருக்கெல்லாம் விதிவிலக்கு அளிக்கலாம் என்பது குறித்தும் இந்தச் சட்டம் இன்னும் தெளிவுபடுத்தவில்லை. இதிலும் பல கருத்து மாறுபாடுகள் உள்ளன.
வாக்களிப்பதைக் கட்டாயம் என்று சட்டமாக்காமல், வாக்களித்தவர்களுக்கு மட்டுமான சலுகைகள் என்று மாற்றுவதே அனைவரையும் வாக்குச் சாவடிக்கு வரச் செய்வதற்கான சிறந்த வழிமுறையாக இருக்கும். தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள், சலுகைகளை வரவேற்பார்கள்.
உதாரணமாக, வாக்களித்தோர் பெயர்ப் பட்டியலைத் தேர்தலுக்குப் பிறகு இணையதளத்தில் வெளியிட்டு, ஒரு குடும்பத்தில் எத்தனை பேர் வாக்களித்தார்களோ அவர்களுக்கு மட்டுமே பொது விநியோகத்தில் சர்க்கரை, அரிசி ஆகியன மானிய விலையில் பெற முடியும் என்றும், வாக்களிக்காத குடும்ப உறுப்பினர்களுக்கான சர்க்கரை, அரிசி அளவுகளுக்கு முழுத் தொகை வசூலிக்கப்படும் என்றும் நிபந்தனை விதிக்கலாம். வாக்களித்தவருக்கு தொழில் வரியில், வீட்டு வரியில், ஏன் வருமான வரியில்கூட சலுகை அளிக்கலாம். இதுபோல, ஊக்கப்படுத்துவதன் மூலம் அனைவரையும் வாக்குச் சாவடிக்கு வரச் செய்வதுதான் இந்தியா போன்ற பரந்துபட்ட தேசத்துக்கு சரியான அணுகுமுறையாக இருக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

