ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றம் கடந்த திங்கள்கிழமை தாக்கப்பட்டிருக்கிறது. நாடாளுமன்றத்துக்குள் நுழைந்த 6 பயங்கரவாதிகள் ஆப்கன் தேசியப் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்கொலைப் படையைச் சேர்ந்த ஒருவர் தன் மீதிருந்த குண்டு வெடித்ததில் இறந்துவிட்டிருக்கிறார். நாடாளுமன்றத்தின் ஒரு பகுதி இடிந்து சரிந்திருக்கிறது. உறுப்பினர்கள் யாருக்கும் உயிர்ச் சேதம் ஏற்படவில்லை.
"ஆப்கானிஸ்தானின் எதிரிகள் பாகிஸ்தானின் நண்பர்களாக இருக்க முடியாது' என்று ஒரு மாதத்துக்கு முன்னால் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பது இந்தத் தாக்குதலின் மூலம் தெரிந்துவிட்டது. ஆப்கானிஸ்தானைக் குறிவைக்கும் பயங்கரவாதிகள் பாகிஸ்தானால் சட்ட விரோதிகளாகக் கருதப்பட்டு வேட்டையாடப்படுவார்கள் என்று பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியது உண்மையானால், பாகிஸ்தானின் மறைமுக ஆதரவு பெற்ற தலிபான்கள் இப்படியொரு தாக்குதலுக்கு எப்படி துணிந்திருக்க முடியும்?
பாகிஸ்தான் பிரதமரும், ராணுவத் தளபதியும் பல தடவை இதுபோல உறுதிமொழி அளித்த போதிலும், இதுவரை தலிபான்களின் தலைமையான "ஷுரா'வின் உறுப்பினர்களையோ, பெஷாவர், குவெட்டா போன்ற நகரங்களில் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் தலிபான்களையோ கைது செய்யவில்லை. அது மட்டுமல்ல, தலிபான்களின் தாக்குதல்களைத் திட்டமிட்டுச் செயல்படுத்தும் சிராஜுதின் ஹக்கானியின் தலைமையிலான பயங்கரவாதக் குழுவின் மீது நடவடிக்கை எடுக்கவும் இல்லை.
தலிபான்களையோ அவர்களுடன் தொடர்புடைய ஹக்கானி போன்றவர்களின் பயங்கரவாதக் குழுக்களையோ பலவீனப்படுத்தும் எந்தவித முயற்சியிலும் பாகிஸ்தான் ஈடுபடாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமிய அரசியல் சக்திகள் இடையே இந்த பயங்கரவாத இயக்கத்தினருக்கு ஆதரவு இருப்பது முதல் காரணம். ஏற்கெனவே பாகிஸ்தான் அரசுக்கு எதிராகச் செயல்படும் ஜிகாதிகளை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் நிலையில், புதிய எதிரிகளை சம்பாதித்துக் கொள்ள பாகிஸ்தான் தலைமை விரும்பாதது இன்னொரு காரணம்.
இன்னும் பல காரணங்களும் உண்டு. அமெரிக்கா தனது படைகளைப் படிப்படியாக விலக்கிக் கொள்ளும் நிலையில், ஆப்கானிஸ்தானை தனது பொறுப்பில் விட்டுவிடும் என்று பாகிஸ்தான் எதிர்பார்க்கிறது. அப்படிப்பட்ட சூழலில் தலிபான்களுடன் சமரசம் செய்து கொள்ள இப்போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதுதான் சரியாக இருக்கும் என்று கருதுவதும்கூட, தலிபான்களுக்கு பாகிஸ்தான் அடைக்கலம் கொடுப்பதன் காரணம்.
முந்தைய அதிபர் ஹமீது கர்சாய் போல, இப்போதைய ஆப்கன் அதிபர் முகம்மது அஷ்ரப் கனி இந்தியாவுடன் நெருக்கமாக நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை செலுத்தவில்லை. பாகிஸ்தானுடன்தான் நெருக்கமாக இருக்கிறார். ஆனால், பாகிஸ்தான் அவரிடம் உறுதி அளித்ததுபோல, தலிபான்களுடனான சமாதானப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யவில்லை. இது அதிபர் கனிக்கு மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.
அதிபர் அஷ்ரப் கனி முன்பு உறுதி அளித்ததுபோல ஏப்ரல் மாதத்தில் நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தவில்லை. இதனால், பல நிர்வாக அமைப்புகள் செயல்படாமல் முடங்கிக் கிடக்கின்றன. போதாக்குறைக்கு, "இஸ்லாமிய தேசம்' ஜிகாதிகள் ஆப்கானிஸ்தானிலும் வேரூன்றத் தொடங்கியிருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானில் காணப்படும் நிலையற்ற தன்மையும் அரசியல் குழப்பமும் "இஸ்லாமிய தேசம்' பயங்கரவாதிகளுக்கு சாதகமான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆப்கன் மத குருமார்கள் ரமலான் மாதத்தில் சமாதானம் நிலவ வேண்டும் என்கிற கோரிக்கையை வைத்திருந்தனர். தலிபான்கள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதல் மூலம் அதை நிராகரித்திருக்கிறார்கள். கடந்த மே மாதம் தலைநகர் காபூலில் ஒரு விருந்தினர் மாளிகை தாக்கப்பட்டதில் 9 வெளிநாட்டினர் உள்பட 14 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள். வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள குண்டூஸ் பிரதேசத்தை தலிபான்கள் கைப்பற்றியிருக்கிறார்கள்.
"இஸ்லாமிய தேசம்' பயங்கரவாத இயக்கம் ஆப்கானிஸ்தானில் நுழைவதைத் தடுப்பதும், அமெரிக்கப் படைகள் படிப்படியாக வெளியேறியதும் பாகிஸ்தானின் மறைமுக உதவியுடன் ஆப்கானிஸ்தானில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான் தலிபான்களின் இப்போதைய இலக்கு. ஆப்கானிஸ்தானின் விவகாரங்களில் தலையிடக் கூடாது என்று "இஸ்லாமிய தேசம்' பயங்கரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதிக்கு தலிபான்கள் கடந்த ஜூன் மாதம் எச்சரிக்கைக் கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ரஷியா, சீனா, ஈரான், துருக்கி ஆகிய நாடுகளுக்கும் தீவிரவாத இயக்கங்களின் வளர்ச்சி அச்சுறுத்தலாகி இருக்கிறது. இந்தியாவிலும் "இஸ்லாமிய தேசம்' நுழைய தலைப்பட்டிருப்பது கவலையளிக்கும் போக்கு.
இந்தியா மிகவும் எச்சரிக்கையாக ஆப்கன் விவகாரத்தைக் கையாள வேண்டும். அமெரிக்கா போல ஆப்கானிஸ்தானுக்கு ராணுவ உதவி செய்யாவிட்டாலும், மிகப் பெரிய அளவில் அங்கே கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் முதலீடு செய்திருக்கிறோம். பாகிஸ்தானின் தூண்டுதலால், இந்தியா நிறைவேற்றி வரும் கட்டமைப்புத் திட்டங்கள் தலிபான்களின் தாக்குதலுக்கு உள்ளாகின்றன என்பதை நாம் உணர வேண்டும்.
பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிரான ஆப்கனின் போராட்டத்துக்கு நாம் உதவவும் முடியாது; அதேநேரத்தில், வாளாவிருக்கவும் முடியாது என்கிற தர்மசங்கடம் இந்தியாவுக்கு. நமது வாசலில் ஆபத்து காத்திருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

