தற்போது அமலில் உள்ள "வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டம் 2010'இல் மேலும் சில திருத்தங்களைச் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் செயல்படும் தன்னார்வ அமைப்புகளின் செயல்பாட்டை கட்டுக்குள், கண்காணிப்பில் கொண்டுவர முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
இந்தியாவில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ அமைப்புகள் பதிவு செய்து செயல்படுகின்றன. இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தின்படி தாக்கல் செய்ய வேண்டிய ஆண்டறிக்கையைத் தாக்கல் செய்வதே இல்லை. 2009-10, 2010-11, 2011-12 ஆகிய மூன்று நிதியாண்டுகளுக்கும் ஆண்டறிக்கை தாக்கல் செய்யாத தன்னார்வ அமைப்புகள் தமிழ்நாட்டில் 1,108, உத்தரப் பிரதேசத்தில் 1,167, கர்நாடகத்தில் 821, மகாராஷ்டிரத்தில் 990, தில்லியில் 400, கேரளத்தில் 538 எனும்போது இவர்களின் செயல்பாடுகள் எப்படியாக இருக்கும்? இவர்களது அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என்ற கேள்வி எழுவது நியாயம்தான். இந்த மாதத் தொடக்கத்தில் 4,470 தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டது.
தற்போது மத்திய அரசு செய்யவிருக்கும் மாற்றத்தின்படி, தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியை, "நாட்டுக்கும், மக்களுக்கும், நாட்டின் பாதுகாப்புக்கும், நாட்டின் அறிவியல், பொருளாதார வளர்ச்சிக்கும் எதிராகப் பயன்படுத்தமாட்டோம்' என்ற உறுதிமொழியை அளித்தாக வேண்டும். இதற்கு நிச்சயமாக எதிர்ப்புகள் தோன்றும்.
இந்தியாவில் செயல்படும் கிரீன் பீஸ் அமைப்பின் கணக்குகள் கடந்த ஏப்ரல் மாதம் முடக்கப்பட்டன. இதற்கு பல்வேறு அமைப்புகள் மத்திய அரசைக் கண்டித்தன. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் அராஜகம், ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும் விமர்சனம் செய்தன. நீதிமன்ற உத்தரவின்பேரில் சில வங்கிக் கணக்குகள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.
கிரீன் பீஸ் அமைப்பினர் இதுபற்றிக் கூறியபோது, நாங்கள் இந்தியாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக பாடுபட்டு வருகிறோம். மத்திய அரசு காடுகளை அழிக்கும் வகையில் நிலக்கரி, கனிமச் சுரங்கங்களுக்கு அனுமதி அளிக்கிறது. அணுஉலைகள் நிறுவுகின்றது. இதை எதிர்ப்பதால் எங்களுக்கு நெருக்கடி தருகின்றனர் என்று குறை கூறினர்.
இது ஒருவகையில் உண்மையாக இருப்பினும், இவர்கள் ஏன் அரசு சொல்லும் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை; ஏன் மற்றவர்களுக்கு அளிக்கப்பட்ட, மற்ற கணக்குகளுக்கு மாற்றப்பட்ட தொகைகள் குறித்தும், கிடைத்த நன்கொடைகள் குறித்தும் அரசுக்கு அறிவிக்கவில்லை என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. கிரீன் பீஸ் அமைப்பு தனது கணக்கு விவகாரங்களை முறையாகவும், மற்ற அமைப்புகளுக்கு பணத்தை வழங்கியதை மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியுடனும் செய்திருந்தால், அந்த அமைப்பு இந்திய இயற்கைக்காகப் போராடுவதை யாரும் தடுத்திருக்கவே முடியாது.
தற்போதைய நன்கொடை சட்டத்தின்படி, வெளிநாட்டிலிருந்து கிடைக்கப் பெற்ற நிதி அல்லது ரூ.25,000க்கு அதிகமான மதிப்புள்ள பொருள்கள் குறித்து மத்திய அரசுக்கு 30 நாள்களுக்குள் தெரிவிக்க வேண்டும். தற்போது, 48 மணி நேரத்துக்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று இந்த விதிமுறை மாற்றி அமைக்கப்படுகிறது. தன்னார்வ அமைப்புக்கு தெரியாமலேயே இணைய வங்கி பரிவர்த்தனை மூலம் பணம் மாற்றப்பட்டது என்றாலும் அது குற்றமாகக் கருதப்படும்.
ஒரு தன்னார்வ அமைப்பு தனக்குக் கிடைக்கும் வெளிநாட்டு நிதியில் 10 சதவீதம் வரை, இந்தியாவில் பதிவு செய்துள்ள மற்றொரு தொண்டு நிறுவனத்துக்கு வழங்கலாம் என்ற விதி உள்ளது. ஆனால், இது கடைப்பிடிக்கப்படுவதே இல்லை. பல அமைப்புகளுக்கு பல அளவுகளில் பணம் பகிர்ந்தளிக்கப்பட்டு, எந்த நிறுவனம், எந்தத் திட்டத்துக்காக, யாருக்கு செலவிட்டது என்கிற விவரத்தில் குழப்பம் ஏற்படுத்தவும், மோசடிக்கு இடமாக்கவுமே இந்த விதிமுறை பயன்படுத்தப்படுகிறது.
இவ்வாறு மற்ற தொண்டு நிறுவனத்துக்கு வழங்கும் முன்பாக அதுகுறித்து மத்திய அரசின் முன்அனுமதி பெற வேண்டும் என்ற விதிமுறையை எந்தத் தன்னார்வ நிறுவனமும் கடைப்பிடிப்பதே இல்லை. பெரும்பாலான நிதி முறைகேடுகள் இதன் மூலம்தான் நடைபெறுகின்றன.
அரசுக்கு ஆண்டறிக்கை அளிக்காத தன்னார்வ நிறுவனங்கள் பலவும் இவ்வாறு பெரிய தன்னார்வ அமைப்பிடமிருந்து நிதியைப் பெற்று, தவறான செயல்களுக்கு அதைப் பயன்படுத்தி, பிறகு காணாமல் போய்விடுகின்றன என்பதை உறுதிப்படுத்திய பிறகுதான் அரசு இவ்வாறு சட்டத்தை மேலும் இறுக்குகிறது.
தற்போதைய அரசு மேற்கொள்ளவிருக்கும் புதிய திருத்தத்தின்படி, இவ்வாறு ஒரு தொண்டு நிறுவனத்தின் கணக்கிலிருந்து பயன்பாட்டு கணக்கு அல்லது வேறு எந்த வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டாலும், அல்லது வெளிநாட்டு நிதிக் கணக்கில் சேர்க்கப்பட்டாலும், வங்கிகள் அதுகுறித்த தகவலை 48 மணி நேரத்துக்குள் மத்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டும். 48 மணி நேரம் என்பதே அதிகம். இப்போதெல்லாம், ஒரு கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டாலோ, அல்லது பணம் போடப்பட்டாலோ அடுத்த சில நிமிடங்களில் குறுந்தகவல் வந்துவிடும் தொழில்நுட்பம் இருப்பதால், தன்னார்வத் தொண்டு நிறுவன கணக்குப் பரிமாற்றங்கள் ஒவ்வொன்றையும் தன்னிச்சையான இ-மெயில் மூலம் உடனுக்குடன் தெரிவிக்க முடியும்.
இந்தியத் தொண்டு நிறுவனங்களுக்குப் பணத்தை வாரிக் கொடுப்போர் அனைவருமே இந்தியாவின் இயற்கை மீதும், ஏழைகள் மீதும் அக்கறை கொண்டிருப்பதில்லை என்பதைப் புரிந்து கொண்டால், இந்தச் சட்டத்தின் நியாயமும் அவசியமும் தெரியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

