எந்தவித ஊழல் குற்றச்சாட்டோ, முறைகேடோ இல்லாமல் ஓராண்டு ஆட்சியை நடத்தி முடித்திருக்கும் நரேந்திர மோடி அரசின் மீது என்ன குற்றம் கண்டுபிடிக்கலாம், களங்கம் கற்பிக்கலாம் என்று தேடியலைந்து கொண்டிருந்த எதிர்க்கட்சிகளுக்கு வெறும் வாயை மெல்ல அவல் கிடைத்திருக்கிறது. ஒன்றுமில்லாத, எப்போதோ நடந்த ஒரு விவகாரம் இப்போது ஊதிப் பெரிதாக்கப்படுகிறது. பரபரப்பை ஏற்படுத்துவது மட்டுமே தங்களது தொழில் தர்மம் என்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் காட்சி ஊடகங்களும் அதற்குத் துணை போகின்றன.
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி என்கிற சூதாட்டத்தைக் கண்டுபிடித்த வியாபார மூளைக்குச் சொந்தக்காரர் லலித்குமார் மோடி. கிரிக்கெட் விளையாட்டைப் பயன்படுத்தி, கிரிக்கெட் வீரர்களை ஏலத்துக்கு எடுக்கும் உத்தி மூலம் கோடிக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும் என்று உலகத்துக்கு உணர்த்தியவரே அவர்தான். லலித் மோடி ஒன்றும் யோக்கியமானவர் அல்லர். பல கோடி ரூபாய் புழங்கும் இடத்தில் முறைகேடுகள் இல்லாமல் எப்படி இருக்க முடியும்?
பல கோடி ரூபாய் புழங்கிய காரணத்தால், முறைகேடுகள் இருந்தது எவ்வளவு உண்மையோ அதேபோல உண்மை அவருக்கு எதிரிகள் ஏற்பட்டனர் என்பதும். தாவூத் இப்ராஹிம் உள்ளிட்ட பல நிழல் உலக தாதாக்களால் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது. இந்த நிலையில்தான் அன்றைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அவருக்கான பாதுகாப்பை விலக்கிக் கொண்டது. அப்போது தனது உயிருக்குப் பயந்துதான் லலித் மோடி லண்டனுக்குத் தப்பிச் சென்றார் என்கிற உண்மை இப்போது ஊடகங்களால் வசதியாக மறைக்கப்படுகிறது.
2010-இல் லலித் மோடி லண்டனுக்குச் சென்று விட்டார். லலித் மோடி, பல்வேறு வழக்குகளில் விசாரிக்கப்பட வேண்டியவராக இருக்கிறார். இருந்தும் அவர் "தேடப்படும் குற்றவாளி"யாக அறிவிக்கப்படவில்லை. மேலும், அவர் தலைமறைவாக வாழ்பவரும் அல்லர். அவர் லண்டனில் வசிக்கும் முகவரி இந்திய அரசுக்குத் தெரியும். முந்தைய மன்மோகன் சிங் அரசு பதவியில் இருந்த நான்கு ஆண்டுகளில், அவர் லண்டன் போன பிறகு அவரது கடவுச்சீட்டை முடக்கியது அல்லாமல், அவருக்கு எதிரான எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவரது கடவுச்சீட்டு முடக்கப்பட்டதை நீதிமன்றம் விடுவித்துள்ளது. இந்த வழக்கில் வாதாடியவர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் என்பதால்தான், லலித் மோடிக்கு இந்த அளவுக்கு அக்கறை காட்டப்பட்டது என்று சொல்கிறார்கள்.
அப்படிப் பார்த்தால், மேற்கு வங்கத்தில் சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில்கூட, அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் ஆலோசகராக இருந்தார். தடை செய்யப்பட்ட இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான "சிமி'க்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர் சல்மான் குர்ஷித் வாதாடியிருக்கிறார்.
லலித் மோடியின் மனைவி போர்ச்சுகலில் புற்றுநோய்க்காகச் சிகிச்சை பெற்று வருகிறார். தனது அறுவைச் சிகிச்சையின்போது, தனது கணவர் அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். இதற்கு பிரிட்டன் தாற்காலிக நுழைவுஇசைவு வழங்க வேண்டும். அதற்கு இந்திய அரசின் அனுமதி தேவையே இல்லை. ஆனாலும், லலித் மோடியின் மீது அன்னியச் செலாவணி தொடர்பான வழக்குகள் இந்தியாவில் இருப்பதால், இதனால் இரண்டு நாடுகளுக்கு இடையேயும் உள்ள ராஜீய உறவு பாதிக்கப்படக் கூடாது என்று பிரிட்டன் தயங்குகிறது.
பிரிட்டனின் சட்டதிட்டங்களுக்கு உள்பட்டு தாற்காலிக நுழைவுஇசைவு வழங்கலாம் என்று தான் கூறியதாக சுஷ்மா ஸ்வராஜ் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். "இதை மனிதாபிமான அடிப்படையில் செய்தேன். இதில் குற்றம் இருப்பதாகக் கருதவில்லை' என்று வெளிப்படையாகப் பேசியிருப்பதுதான் அவருக்கு பலம்.
இதெல்லாம் நடந்தது கடந்த 2014 ஜூலை 31-ஆம் தேதி. லலித் மோடி போர்ச்சுகலுக்குப் போய் அறுவைச் சிகிச்சை முடிந்து எப்போதோ மீண்டும் லண்டன் திரும்பிவிட்டார். அப்போது, அவர் போர்ச்சுகலுக்குத் தனது மனைவியின் அறுவைச் சிகிச்சைக்குப் போக மனிதாபிமான அடிப்படையில் அனுமதித்தார் என்பதுதான் இப்போது சுஷ்மா ஸ்வராஜ் மீதான குற்றச்சாட்டு.
இந்த விவகாரத்தில், லலித் மோடியைத் தனது பதவிக் காலத்தில் கைது செய்யாத காங்கிரஸ் கட்சியும், அதன் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் நரேந்திர மோடி கருப்புப் பண முதலைக்கு உதவுகிறார் என்று சிறுபிள்ளைத்தனமாகப் பேசுவதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஆயுதப் பேர ஊழலில் தொடர்புடைய குவாத்ரோச்சியை, போபால் விஷவாயுத் தாக்குதலில் தொடர்புடைய ஆண்டர்சனை, நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமை, மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய மேமன் சகோதரர்களை, இப்படி இன்னும் பல தீவிரவாத, சமூக விரோதிகளைத் தப்பியோட விட்ட காங்கிரஸ் கட்சியா, அவர்கள் தப்பியோட விட்ட லலித் மோடியின் மனைவியுடைய புற்றுநோய் சிகிச்சைக்கு மனிதாபிமான அடிப்படையில் எப்போதோ உதவியதற்கு இப்போது சுஷ்மா ஸ்வராஜைப் பதவி விலகவும், பிரதமர் நரேந்திர மோடி மீது களங்கம் சுமத்தவும் முற்படுகிறது?
வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை, ஊடகங்கள் உருவாக்கும் பரபரப்புக்கும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் நெருக்குதலுக்கும் பணிந்து பதவி விலகச் சொன்னால், இதுபோன்ற நெருக்குதலை வாராவாரம் ஏற்படுத்த முற்பட்டு விடுவார்கள் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியும். அதனால் செய்யமாட்டார். ஆனால், நரேந்திர மோடி செய்ய வேண்டியது ஒன்று இருக்கிறது. அது, லலித் மோடியைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!

வாக்களிப்பதற்காக சிவகங்கை சென்றவா் பஞ்சப்பூா் பேருந்து முனையத்தில் மயங்கி விழுந்து பலி

எஸ்.எஸ்.பாலாஜி, ஆளுர் ஷாநவாஸ் ஆகியோருக்கு விசிக-வில் முக்கியப் பொறுப்பு!

பரமத்தி வேலூா் ஏலச் சந்தையில் பூக்களின் விலை உயா்வு
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

