பிரதமர் நரேந்திர மோடியின் "மின்யுக இந்தியா' (டிஜிட்டல் இந்தியா) என்கிற கனவுத் திட்டம் நிறைவேறுமேயானால், அது ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டிப் போட்டு, சமூக, பொருளாதார, நிர்வாகரீதியாக மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தக் கூடும். இலக்கு பாராட்டுக்குரியது. ஆனால், நடைமுறைப்படுத்தப்படுவதில்தான் அதன் வெற்றி இருக்கிறது. லஞ்சம் வாங்கியே பழகிவிட்ட அதிகார வர்க்கமும், முறைகேடுகளின் மூலமும் விதிவிலக்குகளை அளிப்பதன் மூலமும் தங்களை வளப்படுத்திக் கொள்ளும் அரசியல்வாதிகளும், இடைத்தரகர்களும் இந்தத் திட்டம் செயல்பட அனுமதிப்பார்களா என்பதுதான் முதல் ஐயப்பாடு.
"மின்யுக இந்தியா' திட்டம் மூன்று செயல்பாடுகளை உள்ளடக்கியது. இந்தியாவிலுள்ள ஒவ்வொரு குடிமகனும் பயன்படுத்த வாய்ப்பளிக்கும் வகையில் இணையதளக் கட்டமைப்பை உருவாக்குவது முதலாவது நோக்கம். அரசின் நிர்வாகரீதியான எல்லா சேவைகளையும் இணையத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும் வசதியை உருவாக்குவது இரண்டாவது நோக்கம். மூன்றாவதாக, மின்னஞ்சல், இணையதளம் போன்றவை பற்றிய மின்யுகப் புரிதலை அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள வழிகோலுவது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் எல்லாம், அடித்தட்டு மக்களும்கூட மின்யுகப் பயன்பாடுகளைக் கையாள்வதுபோல இந்தியாவையும் மாற்றுவது என்பதுதான் இந்தத் திட்டத்தின் இலக்கு.
"மின்யுக இந்தியா' திட்டம் முழுமையான செயல்பாட்டுக்கு வருமேயானால், நிர்வாகத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை ஏற்படும்; இடைத்தரகர்களோ, பரிந்துரைகளோ இல்லாமல் அரசின் நிர்வாகரீதியிலான சேவைகளை மக்கள் தங்கள் செல்லிடப்பேசியிலிருக்கும் செயலி (ஆப்ஸ்) மூலம் அல்லது மின்னஞ்சல் மூலம் வீட்டில் இருந்தபடியே பெற முடியும்; அனுமதிகளுக்காகவோ, உத்தரவுக்காகவோ சம்பந்தப்பட்ட அலுவலகத்துக்கு பல முறை நடையாய் நடப்பதற்கு விரயமாகும் நேரமும், செலவும் கணிசமாகக் குறையும்; நிர்வாகச் செலவினங்களுக்காக மக்கள் வரிப் பணம் விரயமாகாமல் தடுக்கப்படும்; அதிவிரைவான வளர்ச்சியும், மிகப் பெரிய அளவிலான வேலைவாய்ப்பும் உருவாகும்.
இப்போதேகூட, பல மாநிலங்களில் அரசு நிர்வாகத்தில் மின்யுகப் பயன்பாடு கணிசமாக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தையே எடுத்துக் கொண்டால், 150 இணைய சேவை மையங்களை முதல்வர் ஜெயலலிதா அண்மையில் தொடங்கி வைத்திருக்கிறார். சொத்து வரி, மின் கட்டணம், குடிநீர்க் கட்டணம், வடிகால் சேவை வரி செலுத்துதல் போன்றவை இணையத்தின் மூலம் நடைபெற வழிகோலப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் பல அலுவலகங்களும், உள்ளாட்சி நிர்வாகங்களும் இணைய சேவை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.
இணைய சேவை மூலம் அலுவல்களையும், அனுமதிகளையும், செயல்பாடுகளையும் கணினிப் பயன்பாடு விரைவுபடுத்தி இருப்பதுடன், இடைத்தரகர்களை அகற்றி ஓரளவுக்குக் கையூட்டை அகற்ற உதவியிருக்கிறது. கடவுச்சீட்டுப் பெறுதல், வருமான வரி செலுத்துதல், ரயில், விமான, போக்குவரத்துப் பயணச் சீட்டுகள் பெறுதல், ஏன் நீதிமன்ற, அரசு நிர்வாகச் செயல்பாடுகளில்கூட இணைய சேவை மிகப் பெரிய மாற்றங்களைச் செய்துவிட்டிருக்கிறது. இன்னும், இதுபோல இணைய சேவை வளையத்துக்குள் கொண்டுவர வேண்டிய நடைமுறை நிர்வாகச் செயல்பாடுகள் ஏராளம், ஏராளம்.
சில ஆண்டுகளுக்கு முன்புவரை, தகவல் தொலைத் தொடர்பு என்பது மின் கம்பிகளின் மூலம் இருந்ததுபோய், இப்போது நேரடியாகக் காற்றலைகளின் மூலம் என்றாகி விட்டதால், மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த மாற்றம் தகவல் பரிமாற்றத்துக்கு மட்டுமல்லாமல், அரசின் அத்தனை சேவைகளையும் பெறுவதற்குமாக மாற்றுவது என்பதுதான் "மின்யுக இந்தியா' திட்டத்தின் நோக்கம்.
குறிக்கோள் உன்னதமானது என்றாலும் செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது அவ்வளவு எளிதானதல்ல. "பாரத் நெட்' என்கிற திட்டத்தின் மூலம் இந்தியாவிலுள்ள 2,50,000 ஊராட்சிகளையும் இணைக்கும் அலைக்கற்றை நெடுஞ்சாலை (பிராட்பேண்ட் ஹைவே) அமைப்பது சுலபமானதல்ல. ஒருபுறம், அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக அதிக செல்லிடப்பேசிகள் செயல்படும் தேசமாக இருந்தாலும் தகவல் தொலைத் தொடர்புக் கட்டமைப்பில் நாம் மிகவும் பின்தங்கி இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது.
தேசிய அளவில் கண்ணாடி இழை மூலம் இந்தியாவில் 2,50,000 ஊராட்சிகளை இணைப்பது என்கிற திட்டம் 2011-இல் போடப்பட்டு, நரேந்திர மோடி அரசு பதவிக்கு வந்த பிறகுதான் 40% பணி முடிந்திருக்கிறது. மாதம் 30,000 கி.மீ. கண்ணாடி இழை இணைப்புகள் போடப்பட்டால்தான் திட்டமிட்டபடி "மின்யுக இந்தியா' திட்டம் நிறைவேறும்.
கிராமப்புறங்களை செல்லிடப்பேசிகள் சென்றடைந்து விட்டாலும், இணைய வசதி சென்றடையாத வரையில் "மின்யுக இந்தியா' திட்டம் நிறைவேறாது. அதுமட்டுமல்ல, இணையத்தைப் பயன்படுத்தக் கற்றுக் கொடுத்தாலும்கூட, அவரவர் மொழியில் இணைய சேவை ஏற்படாத வரையில், திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுவது சாத்தியமில்லை.
நகர்ப்புறங்களில் 64% பேர் இணைய சேவையைப் பயன்படுத்துகிறார்கள் என்றால், ஊரகப் பகுதியில் இணையத்தைப் பயன்படுத்துவோர் வெறும் 9% மட்டுமே.
தனியார் துறையினர் இந்தத் திட்டத்தில் ரூ.4.5 லட்சம் கோடி முதலீடு செய்ய இருக்கிறார்கள். மிகப் பெரிய அளவில் தகவல் தொலைத் தொடர்புத் துறையும், மின்னணுவியல் துறையும் வளர்ச்சி அடைவதுடன், "மின்யுக இந்தியா' திட்டத்தால் 10 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாகும்.
நல்லதே நடக்கும், திட்டம் வெற்றி பெறும் என்று எதிர்பார்ப்போமாக...!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

