"கடந்த இரு ஆண்டுகளாக, அரசினால் விலை நிர்ணயிக்கப்பட்ட மருந்துகளின் விற்பனை ஊரகப் பகுதிகளில் 7% குறைந்துள்ளது. அதேவேளையில், அரசு கட்டுப்பாட்டில் இல்லாத மாத்திரைகளின் விற்பனை 5% அதிகரித்துள்ளது. அரசின் மருந்து விலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கையால் பயன் அடைவோர் நகர்ப்புற மக்கள் மட்டுமே. கிராம மக்கள் பயனடையவில்லை. இந்திய அரசின் மருந்து விலைக் கட்டுப்பாட்டு அமைப்பால் எந்தப் பயனும் விளையவில்லை. மாறாக, இந்த அமைப்பால் மக்களுக்கு பாதகமே அதிகமாகி வருகிறது' என்பது இந்திய மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டிருக்கும் ஆய்வு முடிவு.
மருந்து உற்பத்தியாளர்களின் மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவுகள் மிகத் தெளிவானவை. மருந்து நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதோடு அரசு நிற்க வேண்டும். மருந்து விலையை நிர்ணயித்தல் கூடாது. மருந்து, மாத்திரை விலையை சந்தையே தீர்மானிக்கட்டும் என்பதுதான் இவர்களது வாதம்.
ஒரு பொருளின் நன்மை, தீமை குறித்து அறிந்திருக்கும் சந்தை மட்டுமே தனக்கான பொருளைத் தேர்ந்தெடுத்து வாங்கும். அப்போது தரம் முதன்மை பெறும். விலையைச் சந்தையே நியாயப்படுத்தித் தீர்மானித்துக் கொள்ளும் என்கிற வாதம் ஏற்புடையதல்ல. ஒரு ஹோட்டலில் உணவுக்கான தரத்துக்கு அந்த விலை நியாயமானதே என்று மக்கள் தீர்மானிப்பதைப் போல, ஒரு மருந்தின் தரம், விலை குறித்து ஒரு நோயாளி தீர்மானிக்க முடியாது. ஆகவே, இந்த விவகாரத்தில் மருந்தின் விலையை சந்தை தீர்மானிக்கட்டும் என்று விட்டுவிட முடியாது.
அரசு விலை நிர்ணயித்துள்ள மருந்து, மாத்திரைகளின் விற்பனை குறைந்து வருவதற்கும், மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் தாங்களே 3 மடங்கு கூடுதலாக விலை நிர்ணயிக்கும் மாத்திரைகளின் விற்பனை உயர்ந்து வருவதற்கும் காரணம் மருந்து உற்பத்தியாளர்கள்தான்.
2013-ஆம் ஆண்டு மத்திய அரசின் மருந்து விலைக் கட்டுப்பாடு அமைப்பு 352 அடிப்படை மருந்து, மாத்திரைகளுக்கான விலையை நிர்ணயம் செய்து அறிவித்தது. இந்த விலையானது, அந்த மருந்துக்குத் தேவைப்படும் மூலக்கூறு விலை, அதை மாத்திரையாக மாற்றும் தொழில் செலவு, ஊழியர் செலவு, சந்தைப்படுத்தும் செலவு ஆகிய அனைத்தையும் கருத்தில் கொண்டு நிர்ணயம் செய்யப்பட்டது.
ஆனால், அரசு விலை நிர்ணயம் செய்த மாத்திரைகள் மிகவும் குறைவாகத் தயாரிக்கப்பட்டன. இந்த மாத்திரைகளை மிகக் குறைந்த அளவில் மருந்துக் கடைகளுக்கு விநியோகம் செய்தனர் உற்பத்தியாளர்கள். இதே மூலக்கூறுடன் சில வைட்டமின்கள் சேர்த்து, விலை நிர்ணயிக்கப்படாத மாத்திரை என்ற இலச்சினையில் அதிக விலைக்கு (300% கூடுதல்) அதிகமாக விநியோகம் செய்தார்கள். இவற்றின் விலை அதிகம், மருந்துக் கடைகளுக்கு லாபமும் அதிகம்.
மருத்து உற்பத்தியாளர்கள் தங்கள் பொருளைச் சந்தைப்படுத்த கடைக்காரர்களைத்தானே அணுக வேண்டும். மருத்துவர்கள் அறைவாசலில் மருந்து விற்பனைப் பிரதிநிதிகள் ஏன் தவம் கிடக்கிறார்கள்? ஏனென்றால், மருத்துவர்கள் எழுதித் தரும் மாத்திரையை மட்டுமே வாங்குபவர்கள் இந்தியர்கள். மருத்துவர்கள் இவர்களது புதிய மருந்தை எழுதித் தராமல் விற்பனை நடக்காது. ஆகவே, மருத்துவர்களை எல்லா வகையிலும் வலைவீச முற்படுகிறார்கள்.
மருந்து உற்பத்தியில் உலக அளவில் இந்தியா 3-ஆவது இடத்தில் இருக்கிறது. ஆனால், உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் மதிப்பு அல்லது விற்றுமுதல் அளவைப் பொருத்தவரை இந்தியா 14-ஆவது இடத்தில் இருக்கிறது. இதற்குக் காரணம், இந்தியாவில் மருந்து உற்பத்திச் செலவு குறைவு, ஆகவே, மருந்துகளின் விலையும் குறைவு. அதனால், விற்பனை மதிப்பில் 14-ஆவது இடத்தில் இருக்கிறோம். ஆகவேதான், அரசின் விலைக் கட்டுப்பாடு கூடாது என்று தங்கள் வாதத்துக்கு வலு சேர்க்கும் புள்ளிவிவரங்களை முன் வைக்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.
இந்தியாவில் உள்நாட்டு மருந்து விற்பனை அளவு 2,000 கோடி டாலர். தற்போது அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்ட பிறகு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் மருந்து, மாத்திரைகளின் அளவு உள்நாட்டு விற்பனை அளவைக் காட்டிலும் அதிகமாகிவிடும். இவர்கள் இந்தியர்களுக்கு மருந்துகளை குறைந்த விலையில் விற்று, வெளிநாடுகளுக்கு அதிகமான மருந்து, மாத்திரைகளை ஏற்றுமதி செய்து சம்பாதிப்பதுதான் இந்த மண்ணுக்கும், மண்ணின் மைந்தர்களுக்கும் திருப்பிச் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்க முடியும். ஆனால், இந்தியச் சந்தையையும் அமெரிக்க சந்தைபோல, மிக அதிக விலைக்கு மாத்திரை வாங்கும் சந்தையாக மாற்றிவிட நினைக்கிறார்கள் என்பதுதான் வேதனைக்குரியது.
இத்தகைய திட்டமிட்ட பரப்புரைக்கு மத்திய, மாநில அரசுகள் உடன்படுதல் கூடாது. மேலும் கூடுதலான மருந்து, மாத்திரைகளை விலை நிர்ணய கட்டுப்பாட்டுப் பட்டியலில் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மருத்துவரும் தனது நோயாளிக்குப் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை அதன் மூலக்கூறுகளை மட்டுமே தெளிவாகப் படிக்கும் விதத்தில் எழுதி அல்லது கணினி ரசீதாக அளிக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தினால், விலை நிர்ணயிக்கப்படாத மாத்திரைகளின் சந்தைப் புழக்கம் தானாகவே குறையும்.
சர்க்கரை ஆலைகள் பொது விநியோகத்துக்கு வழங்க வேண்டிய சர்க்கரை அளவை எவ்வாறு மத்திய அரசு நிர்ணயிக்கிறதோ அதேபோன்று மருந்து, மாத்திரைகளின் தேவையைக் கணக்கிட்டு, மருந்துத் தயாரிப்பு நிறுவனங்கள் எந்த அளவுக்கு விலை நிர்ணயிக்கப்பட்ட பட்டியல் மாத்திரைகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்து, அதை உற்பத்தி செய்கிறார்களா என்று கண்காணிக்கவும் வேண்டும். அதுதான் இந்த நோய்க்கான மருந்து.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

