புது தில்லியில் ஜூலை 15-ஆம் தேதி நடைபெற்ற மத்திய கொள்கைக் குழுக் கூட்டத்தில் (நீதி ஆயோக்) பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, நிலம் கையகப்படுத்துதல் மசோதாவில் ஒருமித்த கருத்து ஏற்பட முடியாமல் போனால், அதுகுறித்து அந்தந்த மாநில அரசுகளின் முடிவுக்கே விடப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
"அந்தந்த மாநிலங்களின் விருப்பத்துக்கு உள்பட்டது' என்ற நிபந்தனையுடன் இந்த மசோதா வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும் என்பது உறுதி. இரண்டாவது தடவை இந்த மசோதா தொடர்பாக அவசரச் சட்டம் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே எடுத்திருக்க வேண்டிய நிலைப்பாடு இது. காலம் தாழ்த்தியிருக்கத் தேவையில்லை.
சில மாநிலங்களில் இந்த நிலம் கையக மசோதா அப்படியே, மத்திய அரசு கொண்டு வந்த அதே வடிவத்தில் அமலுக்கு வரும். மற்ற மாநிலங்கள் தங்களுக்கு ஏற்புடைய வகையில் மாற்றி அமைப்பார்கள். அப்படிச் செய்யும்போது, விவசாயிகளுக்குப் பாதிப்பு ஏற்படாது என்றோ அல்லது இப்போது மாநிலங்கள் கோருவதைப் போல கூடுதல் இழப்பீடு, மீள் குடியமர்வு, மாதம்தோறும் அதிகப்படியான உதவித் தொகை போன்றவை விவசாயிக்கு கிடைத்து விடும் என்றோ உறுதிபடச் சொல்லிவிட முடியாது. அந்தந்த மாநிலங்களில் ஆளும் முதல்வர்களின் ஆளுமையைப் பொருத்துதான் விவசாயிகள் நலன் அமையும்.
மாநில அரசுகள் தற்போதைய நிலம் கையக மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதன் அடிப்படை நோக்கம் விவசாயிகள் மீதான கவலை அல்ல. மாநிலத்தில் அமையப் போகும் பெருவணிக வளாகம் அல்லது பெருந்திட்டங்களில் மாநிலங்களின் விருப்புரிமை, செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்ற அச்சமும், இந்தத்
திட்டங்களுக்கு மத்திய அரசே தன்னை முன்னிலைப்படுத்தி பாராட்டுகளையும், வாக்குகளையும் பெற்றுச் செல்லும் என்கிற அரசியலுமே தற்போதைய எதிர்ப்புகளுக்குக் காரணம். மாநில அரசுகளின் எதிர்பார்ப்பும் எண்ணமும் நியாயமானது என்பதையும் மறுப்பதற்கில்லை.
ஒவ்வொரு மாநில அரசும் தங்கள் ஆட்சிக் காலத்தில் பெருமுதலீடுகளைத் தங்கள் மாநிலத்தில் செய்யுமாறு அழைப்பு விடுத்து மாநிலத்தின் பொருளாதாரத்தை வளப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. ஆகவே, அவர்கள் இத்தகைய தொழிற்கூடங்களை அந்தந்த மாநில அளவிலான விவசாயச் சூழல் கருதி மேற்கொள்ளும் நெளிவு சுளிவு தேவையாக இருக்கிறது. ஆகவேதான், பல மாநிலங்கள் நிலம் கையகப்படுத்துதல் மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனவே தவிர, இந்த மசோதாவே வேண்டாம் என்பதற்காக அல்ல.
நிலம் கையக மசோதா சட்டத்தின் அடிப்படையான அம்சங்கள் நாடு முழுவதுக்கும் ஒன்று போலவும், விவசாயிகளுக்கான இழப்பீடு, மீள் குடியமர்த்தல், விவசாயிகளின் ஒப்புதல் பெறுதல் போன்ற ஷரத்துகளில் மாநில அரசுகளின் போக்குக்கே விட்டுவிடுவதுமான நடைமுறைதான் கூட்டாட்சித் தத்துவத்துக்கும் பொருந்துவதாக இருக்கும்.
நாட்டின் பாதுகாப்பு, நெடுஞ்சாலை, அணைகள் போன்ற விவகாரங்களில் மத்திய அரசு விதிமுறைப்படி அமையவும், மற்ற திட்டங்களை மேற்கொள்ளவிருக்கும் நிறுவனங்களின் தகுதி, அமைவிடத்துக்கு ஏற்ப அந்தந்த மாநிலங்களே நிலப் பரப்பின் அளவு, இழப்பீடு, மீள் குடியமர்வுச் செலவுகள், உதவித் தொகை ஆகியவற்றைத் தீர்மானித்துக் கொள்வதும்தான் இந்தப் பிரச்னைக்குத் தீர்வாக அமையும். இதில் ஏற்படும் பிரச்னைகளுக்கு மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டியதில்லை. இதில் இடைத்தரகு, மறைமுக ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அது மாநில அரசுக்குத்தான் பாதிப்பே தவிர மத்திய அரசுக்கு அதனால் பாதிப்பு இருக்காது.
தற்போது நெல், கரும்பு, கோதுமைக்கு மத்திய அரசு ஆதரவு விலை நிர்ணயித்தாலும், கூடுதல் விலையை அந்தந்த மாநிலங்களே அறிவிப்பதைப் போன்ற ஒரு நெகிழ்வுத்தன்மை நிலம் கையகப்படுத்துவதிலும் இருக்க வேண்டும். இத்தகைய நெகிழ்வுத்தன்மை மத்திய, மாநில அரசுகளிடையே முரண் இல்லாத நிலையை உருவாக்கும். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழிவகுக்கும்.
தற்போதைய நிலம் கையகப்படுத்தும் மசோதாவின்படி, பாதிக்கப்படும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கட்டாயம் வேலைவாய்ப்புத் தரப்பட வேண்டும் என்றும், அவர்களுக்குத் தரப்பட வேண்டிய முழு இழப்பீட்டுத் தொகையும் அவர்களது வங்கிக் கணக்கில் வைப்புத் தொகையாகப் செலுத்தப்பட்ட பிறகுதான் அவர்களது நிலம் கையகப்படுத்தப்பட வேண்டும் என்றும் விதிமுறைகள் உள்ளன. இதை மாநில அரசுகள் தொடருமா, இல்லையா என்பது கேள்விக்குறி.
இன்னொரு நெருடலும் இருக்கவே செய்கிறது. நிலம் கையக மசோதாவை மத்திய அரசும், மாநில அரசும் எத்தனை விதமாகத் திருத்தி பயன்படுத்தினாலும், எவ்வளவுதான் இழப்பீட்டையும், உதவித் தொகையையும் அதிகரித்துக் கொடுத்தாலும் அல்லது மாநிலங்கள் தனிப்பட்ட முறையில் கூடுதல் விலை, பணப் பயன்கள் வழங்குவதாகவே இருந்தாலும்கூட, உள்ளூர் அரசியல்வாதிதான் இடைத்தரகராக இருந்து நிலத்தைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவராக, பெரும்பான்மையினரை "உடன்பட' வைப்பவராக இருக்கப் போகிறார். ஆகவே, பணப் பலன் விவசாயியின் கைகளுக்குக் கிடைக்கும்போது, குரங்கு பங்கிட்ட அப்பம் போலத்தான் விவசாயிகளைப் போய் சேரப் போகிறது.
விவசாயிகள் மீது அக்கறை உள்ளவர்கள் அனைவர் மனதில் இருக்கும் அச்சம் இதுதான். ஆனாலும், விவசாயிக்கு இது ஒருவகையான தவிர்க்கவியலாத கட்டாயம்; செயற்கைப் பேரிடர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சவரனுக்கு ரூ. 800 உயர்ந்த தங்கம்: வெள்ளி?

சல்மான் கான் - நயன்தாரா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சென்னையில் அதிநவீன வழிகாட்டி பலகைகள்! வாகன ஓட்டிகளுக்கு ஜாக்பாட்!!

வாக்களிக்க சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் சென்னை திரும்ப 14,508 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

