கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டு தலைசிறந்த சமூக சிந்தனையாளர்களின் ஜனநாயகம் பற்றிய கருத்து அவர்களது தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துகிறது. ஒருவர் பேரறிஞர் பெர்னாட் ஷா, மற்றவர் மகாத்மா காந்தி!
பெர்னாட் ஷாவின் நாடகங்கள் புத்தக வடிவம் பெறும்போது, அந்த நாடகங்களுக்கு அவர் எழுதும் முன்னுரைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. தனது நாடகத்தின் மையக் கருவைப் பற்றிய பல்வேறு பரிமாணங்களை அவர் ஆராய்ந்து, தனது கருத்தையும் தெளிவுபடுத்தியிருப்பார். நாடாளுமன்ற ஜனநாயகம் பற்றி 1928-இல் அவர் எழுதிய "ஆப்பிள் கார்ட்' நாடகத்தின் முன்னுரையில் பெர்னாட் ஷா குறிப்பிட்டிருப்பது இதுதான்-
"நாடாளுமன்ற ஜனநாயகம் என்பதை வாயு நிரப்பப்பட்ட மிகப் பெரிய பலூனாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள். அதனடியில் சிலர் அமர்ந்து கொள்ளும்படியான கூடை இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த பலூன் சுமார் 600 பேருடன் மேலே பறக்கவிடப்படுகிறது. அந்த 600 பேருடன் அது மேலே போவதையும், வானத்தில் மிதப்பதையும் பொதுமக்கள் "ஆ'வென்று வாயைப் பிளந்தபடி பார்த்துக் கொண்டிருப்பார்கள். அப்போது பலூனில் அமர்ந்திருக்கும் 600 பேருடைய தொண்டர்கள் அந்த அப்பாவிப் பொதுமக்களின் பையில் உள்ளதை ஜேப்படி செய்து கொண்டிருப்பார்கள்.
அந்த பலூன் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை கீழே இறங்கும். அப்போது, அதிலிருப்பவர்களை இழுத்து வெளியே போட்டுவிட்டு ஏறிக் கொள்பவர்கள் ஏறிக் கொள்ளலாம். அந்த பலூனில் இருப்பது 600 இடங்கள். வெளியே இருப்பது 4 கோடி பிரிட்டிஷ் மக்கள். தங்களது இருக்கையை பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கும் அவர்களில் ஒருவரை இழுத்து வெளியே போட்டுவிட்டு பலூனில் இடம் பிடிக்கும் அளவுக்கு பணமும், நேரமும், துணிவும் 4 கோடி மக்களில் பலருக்கும் இல்லாததால், அநேகமாக, முன்பு இருந்த அதே நபர்களுடன் மீண்டும் பலூன் வானத்தில் பறந்துவிடும். மறுபடியும், "ஆ'வென்று வாயைப் பிளந்து மக்கள் பார்த்துக் கொண்டிருக்க பழையபடி அவர்கள் வஞ்சிக்கப்படுவார்கள்!'
அண்ணல் காந்தியடிகளும் ஏறத்தாழ அதே 1928-ஆம் ஆண்டுதான், இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முழுமூச்சாக இறங்கித் தலைமை தாங்க முற்பட்டார். அடுத்த கால் நூற்றாண்டு காலத்தில் இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டால், காங்கிரஸ்காரர்கள் தங்களுக்குக் கிடைத்த பதவியையும், அதிகாரத்தையும் தவறாகப் பயன்படுத்தி, பிரிட்டிஷ் காலனிய அதிகாரிகளைப் போல நடந்து கொள்வார்கள் என்கிற அச்சம் அவருக்கு இருந்தது.
பொது வாழ்க்கையில் ஈடுபட விரும்புபவர்கள், தங்களது சுயநலத்தையும், சொகுசு வாழ்க்கையையும் துறந்து, தொண்டு மனப்பான்மை கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவது இன்றியமையாதது என்று நினைத்தார். தானே வாழ்ந்து காட்டித் தனக்குப் பின்னே அணி திரளும் காங்கிரஸ் தொண்டர்களை வழிநடத்த முற்பட்டார்.
எளிமையான வாழ்க்கை, தொண்டுள்ளம், நேர்மை, சத்தியம், அகிம்சை போன்ற நற்குணங்கள். கிராமப்புற, தாழ்த்தப்பட்ட கடைநிலை மக்களில் ஒருவராக அவர்களுடன் வாழ்ந்து அவர்களுக்காக உழைப்பது. இவையெல்லாம்தான் அண்ணல் காந்தியடிகள் காங்கிரஸ் தொண்டனின் அடிப்படை அடையாளங்கள் என்கிற இலக்கணத்தை வகுக்க முற்பட்டார்.
இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகளாகிவிட்டன. 16 மக்களவைத் தேர்தல்கள் நடந்து விட்டன. பெர்னாட் ஷாவின் தீர்க்க தரிசனமும், அண்ணல் காந்தியடிகளின் அச்சமும் உண்மையிலும் உண்மை என்று நிரூபித்து வருகிறார்கள் நமது தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள்.
சில நாள்களுக்கு முன்னால்தான், அமைச்சர்களின் ஊதியத்தை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.40 ஆயிரம் ஆகவும், உறுப்பினர்களின் ஊதியத்தை ரூ.25 ஆயிரமாகவும் கர்நாடக சட்டப்பேரவை உயர்த்தியது என்றால், இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தையும், ஓய்வூதியத்தையும், அவர்களே உயர்த்திக் கொள்ளப் பரிந்துரைக்கிறது நாடாளுமன்றக் குழு. "நமக்கு நாமே' திட்டம் பற்றிக் கேட்டிருக்கிறோம், "தங்களுக்குத் தாங்களே' ஊதிய உயர்வு இந்திய மக்களாட்சியில்தான் சாத்தியம்.
கடந்த 2010-இல்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தையும், சலுகைகளையும், ஓய்வூதியத்தையும் முந்தைய மன்மோகன் சிங் அரசு பல மடங்கு உயர்த்தியது. இப்போது நரேந்திர மோடி அரசு, நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரையை ஏற்று அதிகரிக்குமானால், அதைவிட அபத்தமான முடிவு இருக்க முடியாது.
இப்போதைய உறுப்பினர்களின் ஊதியமான மாதம் ரூ.50 ஆயிரத்தை இரட்டிப்பாக்குவது; முன்னாள் உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை 75% அதிகரிப்பது; தினசரிப் படியான ரூ.2 ஆயிரத்தையும் கூடுதலாக்குவது போன்றவை நாடாளுமன்றக் குழுவால் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இவையில்லாமல், இலவச பங்களா, 5,000 யூனிட் மின்சாரம், 50,000 இலவசத் தொலைபேசி அழைப்புகள், இலவச விமான, ரயில் பயண வசதிகள் என்று இதர சலுகைகளையும் அதிகரிக்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.
கூச்சலும், குழப்பமுமாக முறையாக நடத்தப்படாத நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்க இத்தனை சலுகைகள் என்றால், அதையும் அவர்களே அவர்களுக்கு நிர்ணயித்துக் கொள்வார்கள் என்றால், "விதியே, விதியே, நீ என் செய்ய நினைத்தாய் எங்கள் இந்திய ஜனநாயகத்தை?' என்று கதறுவதைத் தவிர, அப்பாவி இந்திய வாக்காளன் வேறு என்ன செய்துவிட முடியும்? ஆட்சிகள் மாறும், காட்சிகள் மாறாது என்றால், மக்களாட்சியால் என்ன பயன்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மாநிலங்களவை பெரும்பான்மைக்கு 17 பேர் மட்டும் தேவை: ஆம் ஆத்மி எம்.பி.க்களால் பலம்பெறும் தே.ஜ. கூட்டணி!
தமிழ்நாட்டில் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம் அறிவிப்பு

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

