ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றி பெறுவார் என்பது அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் பதவி விலகிய நாளிலேயே அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஒவ்வோர் அரசியல் கட்சியும் நாங்கள் போட்டியிடவில்லை என்று நழுவிக் கொண்டபோதே, ஜெயலலிதாவின் வெற்றி உறுதியாகிவிட்டது.
சி.பி.ஐ., சி.பி.எம். இரு கட்சிகளும் இணைந்து பொது வேட்பாளராக, இதுவரை தேர்தலில் போட்டியிட்டிராத சி. மகேந்திரனை நிறுத்தின. இடதுசாரிகள் செய்த மிகப்பெரும் தவறு இந்த இடைத்தேர்தலில் போட்டியிட்டதுதான். நீச்சல் தெரிந்தவர்கள் எல்லாம் வெள்ளத்தில் குதித்து ஜனநாயகத்தைக் காப்பாற்றாமல் கூச்சல் போட்டுக் கொண்டிருக்க, நீச்சல் தெரிந்தாலும் வலுவில்லாதவன் வெள்ளத்தில் குதித்தக் கதையாக ஜனநாயகத்தைக் காக்கிறேன் என்று இடதுசாரிகள் தேர்தல் களத்தில் இறங்கினார்கள்.
அனைத்துக் கட்சிகளும் ஆதரித்தால் போட்டியிடுகிறோம்; ஜெயலலிதா வெற்றி பெற வேண்டும் என்பதுதான் உங்கள் உள்நோக்கம் என்றால், அதற்கு நாங்கள் மட்டும் விதிவிலக்கா? என்று அறிக்கை விட்டு வேட்பு மனுவை வாபஸ் வாங்கியிருந்தால், எதிர்க்கட்சிகள் அனைவரையும் முகத்தில் அடித்ததுபோலச் செய்திருக்க முடியும்.
ஜெயலலிதா 1.6 லட்சம் வாக்குகள் பெற, சி. மகேந்திரன் பெற்றவை வெறும் 9,690 வாக்குகள். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பெற்றதைவிட அதிகம் என்பதில் என்ன பெருமை? ஒரு டிராபிக் ராமசாமிக்கு கிடைத்ததைவிட இரண்டு மடங்கு வாக்குதான், அரைநூற்றாண்டாக அரசியல் நடத்தும் இடதுசாரிகளுக்கு கிடைத்தது என்றால், அது எத்தகைய அவமானம்?
இந்தத் தேர்தலே திணிக்கப்பட்ட தேர்தல். ஓர் அரசு ஊழியர் நிரபராதி என்றால் மீண்டும் பணி வழங்கப்படுகிறது. ஆனால், குற்றச்சாட்டில் தண்டனை பெற்று பதவியை இழக்கும் அரசியல்வாதி, அவர் வெற்றி பெற்ற சட்டப்பேரவை நீடித்திருக்கிற நிலையில், அவரது தண்டனை ரத்தானாலும் மீண்டும் தேர்தலில் வென்றுதான் சட்டமன்றத்துக்கு வர வேண்டும் என்பதே ஒரு ஜனநாயக முரண். புதிய நடைமுறையால் வந்திருக்கும் சிக்கல். ஓர் இடைத்தேர்தலுக்கு அரசு ரூ.60 லட்சம் செலவிடுகிறது. மக்கள் இயல்பு வாழ்க்கையும் அத்தொகுதியில் மட்டும் பாதிக்கப்படுகிறது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலும், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் மக்கள் மீது திணிக்கப்பட்ட தேர்தல்கள். தேர்தல் ஆணையம் காலத்துக்கு ஏற்ப தன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்ய தவறியதால் ஏற்பட்ட இழப்புகள் இவை.
எந்தக் கட்சியும் போட்டியிடாநிலையில் தாங்கள் வென்று விடுவோம் என்ற எதிர்பார்ப்பு இடதுசாரிகளிடம் இல்லை என்பது உறுதி. பிறகு ஏன் போட்டியிட வேண்டும்? இப்போது தோற்றுவிட்டால் விரைவில் வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கூட்டணியில் இடங்களைப் பேரம் பேச முடியாது என்று ஒதுங்குகின்றன. இடதுசாரிகளுக்கு மட்டும் என்ன வந்தது? எந்த நாளிலும் பேரம் பேச முடிந்ததில்லையே. பிறகு ஏன் இந்தப் போட்டி?
இடதுசாரிகள் தங்களைத் தவறாக அடையாளம் காண்பதுதான் இத்தகைய பிழையான முடிவுகளுக்குக் காரணம். மாற்று அரசியலை நாம்தான் முன்வைக்க முடியும் என்று நம்புகிறார்கள். அது சரியே. ஆனால், மாற்று அரசியலை முன்வைக்க கேஜரிவாலுக்குக் கிடைத்ததைப்போல மக்கள் ஆதரவு வேண்டும்.
இன்றைய மக்களின் மிகப்பெரும் பிரச்னை, குறைந்த செலவில் கல்வி, மருத்துவம் இவை இரண்டு மட்டுமே. ஆனால், இவற்றை இலவசமாக வழங்க வேண்டிய அரசுப் பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் சீரழிந்து கிடக்கின்றன. ஏன்? இவை அரசியல்வாதிகளின் ஊழலால் என்று உடனே சொல்லலாம். அதுமட்டுமே அல்ல. அரசுப் பள்ளி ஆசிரியர்கள், அரசு மருத்துவமனை செவிலியர்கள், ஊழியர்கள், மருத்துவர்கள் ஆகியோரின் அலட்சியமும், மெத்தனமும், கையூட்டும் மிக மிக்கிய காரணம்.
எப்போதும் ஆளும்கட்சியை மட்டுமே எதிர்க்கும் இடதுசாரிகள், இந்த ஊழியர்களை, பணியாளர்களை, அரசுப் பள்ளி ஆசிரியர்களை குறை காண்பதில்லை. இவர்களில் சிலர் சில தவறுக்காக சிக்கினாலும் காப்பாற்றவே முயலுகிறது. ÷
பேருந்துக் கட்டணம், மின் கட்டணத்தை உயர்த்தக் கூடாது. ஆனால், அரசுப் போக்குவரத்துக் கழக, மின் வாரிய ஊழியர்களின் சம்பளத்தை மட்டும் உயர்த்த வேண்டும் என போராடுகிறார்கள். இந்த இரு நிறுவனங்களின் நட்டத்துக்கு காரணம் அரசியல்வாதிகள் மட்டுமே!. இதன் ஊழியர்கள், அதிகாரிகளுக்கு நட்டத்தில் பொறுப்பே இல்லையா? மக்கள் நலனுக்காக போராடும் இடதுசாரிகள், கடைசியில் அங்கத்தினர் நலனுக்கே முன்னுரிமை தருவதாக ஆகிவிடுகிறது. ஆகவேதான் தனியார் மயத்தை எதிர்க்கும் இவர்களுக்கு மக்கள் ஆதரவு கிடைப்பதில்லை.
ஆர்.கே.நகர் தொகுதியில் சிபிஐ, சிபிஎம் கட்சி சார்ந்த தொழிற்சங்கம், அரசு ஊழியர் சங்க அங்கத்தினர்கள் குறைந்தது ஐம்பதினாயிரம் பேர் வாக்காளர்களாக இருந்தாலும், அவர்கள் ஏன் இடதுசாரி வேட்பாளருக்கு வாக்களிக்கவில்லை? அவர்களைப் பொருத்தவரை இடதுசாரிகள் என்பவர்கள், கொடுக்கும் சந்தாவுக்கு குரல் கொடுப்பவர்கள். அவ்வளவுதான். மக்களுக்காகக் குரல் கொடுத்தால், மக்கள் வாக்குகளைக் கொடுப்பார்கள். சங்க உறுப்பினர்கள் நலனுக்காகக் குரல் கொடுத்தால் அவர்கள் சந்தா மட்டும்தான் கொடுப்பார்கள். வாக்குகள் அல்ல.
தேர்தல் களத்தில் நிற்க வேண்டுமானால் வாக்குகள்தான் முக்கியம். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இடதுசாரிகள் சிந்தித்தாக வேண்டும். 1952-இல் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தவர்கள் இடதுசாரிகள். திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக இருந்திருக்க வேண்டியவர்கள், இப்போது மக்களின், ஏனைய கட்சிகளின் ஏளனத்துக்கும் கேலிக்கும் ஆளாகி இருப்பது தமிழகத்தின் துரதிர்ஷ்டம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை ஜி.டி. நாயுடு மேம்பாலத்தில் 2 நாள்களுக்கு இரவு நேர போக்குவரத்துக்குத் தடை!

தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலை?

தோ்தல் பணியின்போது திமுக தொண்டா் மாரடைப்பால் மரணம்; அதிர்ச்சியில் தாயும் உயிரிழப்பு: சேலத்தில் சோகம்

யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

