2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பிடிவாதம் பெருமை சேர்க்காது!

நாடாளுமன்ற ஜனநாயகத்தில், விவாதங்களுக்கு வழிகோலு வதும் அவையை முறையாக நடத்துவதும் சட்டங்களை அவையின் ஒப்புதலுடன் நிறைவேற்றுவதும் அரசின் கடமையே தவிர, எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:48 am

ஆசிரியர்

நாடாளுமன்ற ஜனநாயகத்தில், விவாதங்களுக்கு வழிகோலு வதும் அவையை முறையாக நடத்துவதும் சட்டங்களை அவையின் ஒப்புதலுடன் நிறைவேற்றுவதும் அரசின் கடமையே தவிர, எதிர்க்கட்சிகளின் வேலை அல்ல. அமைச்சரவையில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் இடம் பெறுவதன் நோக்கமே, எதிர்க்கட்சிகளுடன் சுமுகமாக விவாதித்து, அவர்களது ஒத்துழைப்புடன் அவை நடத்தப்பட வேண்டும் என்பதுதான்.

நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட நிலம் கையகப்படுத்துதல் (திருத்தம்) சட்டம் உதவியிருக்கிறது. அவசரப்பட்டு இந்தச் சட்டத்தை அவசரச் சட்டமாகக் கொண்டுவராமல், எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி இருந்தால் பிரச்னையே ஏற்பட்டிருக்காது. தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் விதமாக, அரசு இப்போது எதிர்க்கட்சிகளின் ஆதரவைத் தேட முற்பட்டிருப்பது, ஆளும் கட்சியின் அனுபவமின்மையைத்தான் படம் பிடித்துக் காட்டுகிறது.

முந்தைய மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது 2013-இல் நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வும் மாற்றுக் குடியிருப்பும் வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டபோது, அந்தச் சட்டத்தை ஆதரித்த பாரதிய ஜனதா கட்சி இப்போது ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் நிலையில், அந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர முற்பட்டிருப்பது வேடிக்கைதான். இப்போது அரசு கூறும் காரணங்களை, எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோது பா.ஜ.க. ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போது, அந்த மாற்றங்கள் செய்யப்படாவிட்டால், கணிசமான முதலீடு கிடைக்காது என்பதும், புதிய தொழில்கள் தொடங்குவதில் சிக்கல் ஏற்படும் என்பதும் காலங்கடந்த சிந்தனையாகத் தெரிகிறது.

நிலம் கையகப்படுத்துதல் (திருத்தம்) சட்டம், குடியரசுத் தலைவரால் அவசரச் சட்டமாக்கப்பட்டிருக்கும் நிலையில், ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்றாக வேண்டும். மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டித்தான் ஒப்புதல் பெற்றாக வேண்டும் என்கிற நிலைமை காணப்படுகிறது.

கடந்த முறை போல அல்லாமல், பிரதமர் நரேந்திர மோடி இப்போதைய பட்ஜெட் கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைக் கோரியிருப்பதும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு, நேரில் போய் காங்கிரஸ் தலைவர் சோனியாவைச் சந்தித்து ஆதரவு கோரியிருப்பதும் வரவேற்கத்தக்க திருப்பங்கள். முலாயம் சிங் யாதவ் - லாலு பிரசாத் குடும்பத் திருமணத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று கலந்துகொண்டதேகூட, தனக்கும் பல்வேறு மாநிலக் கட்சித் தலைவர்களுக்கும் இடையே காணப்படும் பனித்திரையை விலக்குவதற்காகத்தான் என்பது தெளிவு.

ஆனால், இதனாலெல்லாம் எதிர்க்கட்சிகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக, அவசரச் சட்டம் பிறப்பிக்கும் மசோதாக்களை ஆதரிக்கும் என்றோ, பட்ஜெட் கூட்டத்தொடரில் பிரச்னை எதுவும் இல்லாமல் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்புடன் கூட்டத்தொடர் நடக்கும் என்றோ எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். அதேபோல, நிலம் கையகப்படுத்துதல் (திருத்தம்) சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவராமல் நிறைவேற்ற ஆளுங்கட்சி முற்படுவது என்பதும் சரியான அணுகுமுறை அல்ல.

முந்தைய மன்மோகன் சிங் அரசு நிறைவேற்றிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தில் இருக்கும் சில நிபந்தனைகள், குறிப்பிட்ட சில பயன்பாட்டுக்காகத் தளர்த்தப்பட வேண்டும் என்பதுதான் அவசரச் சட்டத்தின் நோக்கம். பாதிக்கப்படும் குடும்பங்களின் ஒப்புதல், சமூக ரீதியான பாதிப்பு பற்றிய கணிப்பு இவை இரண்டும் நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் அடிப்படை நிபந்தனைகள். ராணுவத் தளவாட உற்பத்தி, குறைந்த விலை வீட்டு வசதி, தொழில் வளாகங்கள், தொழிற் பேட்டைகள், தொழில் நகரங்கள் உருவாக்குதல், நெடுஞ்சாலை, துறைமுகம், விமான நிலையங்கள் போன்ற தனியார் - அரசு கூட்டு முயற்சிகள் ஆகியவற்றிற்கு இந்த நிபந்தனைகளைத் தளர்வு செய்வது என்பதுதான் அவசரச் சட்டத்தின் மூலம் கொண்டுவரப்படவிருக்கும் திருத்தங்கள்.

அரசு குறிப்பிடும் நிபந்தனைத் தளர்வுகள், ஒரு வகையில் நியாயம்தான் என்றாலும், இந்தக் காரணங்களின் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தும் சட்டமே அர்த்தமற்றதாகிவிடக்கூடிய அபாயமும் உண்டு. அதுமட்டுமல்ல, நிலம் கையகப்படுத்துதல் சட்டம் கொண்டுவரப்பட்ட நிலையில், குறைந்தது இரண்டு ஆண்டுகளாவது அந்தச் சட்டம் நடைமுறையில் எந்த அளவுக்கு பயனளிக்கிறது

என்பதை ஆராய்ந்த பிறகு சட்டத் திருத்தம் கொண்டு வருவதுதான் புத்திசாலித்தனமே தவிர, அவசரச் சட்டத்தின் மூலம் அதைத் திருத்த வேண்டிய அவசியமும் அவசரமும் தேவையில்லை என்றுதான் தோன்றுகிறது.

1894-இல் அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசால் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டம் போல அல்லாமல், 2013 சட்டப்படி விவசாயிகளுக்கு சந்தை நிலவரப்படி இழப்பீடு வழங்குதல் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது. நரேந்திர மோடி அரசு கொண்டு வரும் திருத்தங்கள் அவசியமற்றவை என்று தள்ளிவிடக் கூடியவையும் அல்ல. அரசு அவசரப்பட்டதுதான் தவறாகிவிட்டது.

அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதுதான் குறிக்கோள் என்று எதிர்க்கட்சிகள் செயல்படாமல், பிரதமர் நரேந்திர மோடி நீட்டியிருக்கும் நேசக்கரத்தை ஏற்றுக் கொள்வதுதான் அரசியல் நாகரிகம். பிடிவாதம் பிடிப்பது இரு தரப்பினருக்கும் மட்டுமல்ல, இந்திய ஜனநாயகத்துக்கும் பெருமை சேர்க்காது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.