2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

புலியின் வலி...!

ஆள்கொல்லிப் புலியைக் கொல்வதில் தவறில்லை என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டாலும், கூடலூர் அருகே இரு நாள்களுக்கு முன்பு ஒரு புலி சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி, கானுயிர் ஆர்வலர்களுக்கு நிச்சயம் வேதனையளித்திருக்கும்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:47 am

ஆசிரியர்

ஆள்கொல்லிப் புலியைக் கொல்வதில் தவறில்லை என்றொரு வாதம் முன்வைக்கப்பட்டாலும், கூடலூர் அருகே இரு நாள்களுக்கு முன்பு ஒரு புலி சுட்டு வீழ்த்தப்பட்ட செய்தி, கானுயிர் ஆர்வலர்களுக்கு நிச்சயம் வேதனையளித்திருக்கும்.

"தின்ன வரும் புலி தன்னையும் அன்பொடு சிந்தையில் போற்றிடுவாய்' என்று பாரதி கவிதை புனைந்தாலும், சாதாரண மனிதர்களால் ஓர் ஆள்கொல்லி புலியை அவ்வாறாகப் பார்க்க முடியாது என்று சொல்லும் அறிவார்ந்த உலகத்துக்குப் புலியைப் போற்ற வேண்டும் என்கிற கட்டாயமில்லை. இருப்பினும், புலிக்குத் தேவையானது மாமிசம் மட்டும்தான், மனிதர்கள் அல்லர் என்பதைப் புரிந்துகொண்டாலும் போதும், கொல்லப்பட்ட புலி மீது இரக்கம் ஏற்படும்.

மனித ரத்தத்தைச் சுவைத்து ருசி கண்டுவிட்ட புலி, மற்ற மாமிசங்களை உண்ணாது. ஆகவே, அதைக் கொல்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்கிற வாதத்திலும் உண்மையில்லை. மனிதன் மட்டுமே ருசிக்காக புசிப்பவன். புலி பசித்தால்தான் இரை தேடும்.

இந்தியாவில் புலிகளின் எண்ணிக்கை 30% அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2,226 புலிகள் இருந்தன. 2010-ஆம் ஆண்டில் 1,706 புலிகளும், 2006-ஆம் ஆண்டில் 1,411 புலிகளும் இருந்த நிலைமை ஆண்டுதோறும் உயர்ந்து வருவது புலிகள் பாதுகாப்புத் திட்டத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி என்று கடந்த ஜனவரி மாதம்தான் நமக்கு நாமே பாராட்டிக் கொண்டோம். அதற்காக, ஒன்று குறைந்தால் பரவாயில்லை என்ற எண்ணத்தில் இவ்வாறாக சுட்டுக்கொன்றிருக்க வேண்டாம். உயிருடன் பிடித்து வன உயிரினப் பூங்காவில் விட்டிருக்கலாம்.

காலில் அடிபட்டுள்ள இந்தப் புலி, பசிக்கு எளிய இலக்குகளாக மனிதர்களைத் தாக்கத் தொடங்கியது என்று சொல்லும் வனத் துறைக்கு, புலியை மயக்க மருந்து செலுத்தி உயிருடன் பிடிக்கும் வாய்ப்பு நிச்சயம் இருந்திருக்கும்.

120 பேர் ஐந்து குழுக்களாகச் சென்று தேடியதாகவும், இந்த ஆள்கொல்லி புலி குறித்து தகவல் கிடைத்தவுடன் அதன் மீது மயக்க மருந்து ஊசியைச் சுட முயன்றும் அது முடியாத காரணத்தால், 20 ரவுண்டுகள் துப்பாக்கிச்சூடு நடத்தி மடக்கிப் பிடித்துவிட்டதாக வனத் துறை மற்றும் அதிரடிப் படையினர் கூறினாலும், இத்தகைய ஆத்திரமான முடிவுக்குக் காரணம், ஏற்கெனவே மனக்கொதிப்பில் உள்ள கூடலூர் பகுதி மக்களைத் திருப்திப்படுத்தவே என்று சொல்வதற்கு இடமுண்டு.

பந்தலூர் வட்டம், பாட்டவயல் பகுதியில் தோட்டத் தொழிலாளி மகாலட்சுமியை புலி அடித்துக் கொன்றது. அதன் பின்னர் மக்கள் நடத்திய சாலை மறியலும், ஆள்கொல்லி புலியைக் கொன்று உயிர் அச்சத்தைப் போக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுப்பெற்றன. இதனிடையே, சில வனத் துறை அலுவலர்களை மக்கள் தாக்கியதோடு, மூன்று வனத் துறை ஜீப்புகளையும் எரித்தனர். மக்களின் ஆத்திரம் தணியும் பொருட்டுதான், இந்தப் புலி கொல்லப்பட்டு, ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

மகாலட்சுமியையும் பாலக்காடு பகுதியில் ஓர் ஆணையும் தாக்கிய அதே புலிதான் இது என்பதை உறுதி செய்ய முடிகிறது. மயக்க ஊசி செலுத்த முடியவில்லை, ஆனால், குண்டு மழை பொழிய முடிகிறது என்பதைப் பார்க்கும்போது, மக்கள் தங்கள் மீது காட்டிய கோபத்தை, வனத் துறையினர் புலியின் மீது காட்டியிருக்கிறார்கள் என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

கடந்த ஜனவரி 21 முதல், தற்போது கூடலூர் சம்பவம் வரை 10 புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளன. இந்த நிலைமைக்குக் காரணம் மக்கள் புலிகள் வாழும் பகுதிக்குப் போனதுதானே தவிர, புலிகள் மக்களைத் தேடி வந்தது அல்ல. இன்னமும், முதுமலை புலிகள் பாதுகாப்புப் பகுதியில் வசிக்கும் சுமார் 800 குடும்பங்கள் தங்களை வேறு இடத்தில் குடியமர்த்துமாறு வேண்டிக்கொண்ட போதும் இதுவரை அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்யவில்லை. ஆள்கொல்லிப் புலிகளை உருவாக்குவது யார் என்பதைப் புரிந்துகொள்வதில் சிக்கல் இல்லை.

ஒரு காட்டில் ஒரு புலி இருக்குமேயானால், 25,000 ஏக்கர் வனப் பகுதியை பாதுகாக்க முடியும் என்கிறது உலகக் கானுயிர் நிதியம் (ர.ர.ஊ.). வனப் பாதுகாப்பு பிரமிடில் புலி உச்சத்தில் உள்ள ஓர் உயிர். ஆகவேதான், புலிகள் கொல்லப்படும்போது கானுயிர் ஆர்வலர்கள் வேதனைப்படுகிறார்கள். புலிகளைப் பாதுகாக்கத் தேவையானவை இரை, சுற்றித்திரிய இடம், வேட்டையாடும் மனிதர்கள் இல்லாத நிலைமை. இவை இருந்தால் புலிகள் எண்ணிக்கை தானே பெருகும்.

2022-ஆம் ஆண்டுக்குள் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க வேண்டும் என்கிற திட்டத்தில் உலகக் கானுயிர் நிதியம் மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், புலிகள் பாதுகாப்புத் திட்டப் பகுதியில் உள்ள பழங்குடியினரை அதே வனப் பகுதியில் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றுதல் இன்றியமையாதது. இந்திய அரசும் இதற்கான நிதியை அளித்து வருகிறது. சில இடங்களில் பழங்குடியினர் இதற்கு இசைவு தெரிவித்திருக்கிறார்கள். சில இடங்களில் அரசியல்வாதிகள் புகுந்து எதிர்ப்புத் தெரிவிக்க வைக்கிறார்கள். நீலகிரி மாவட்டத்தைப் பொருத்தவரை, புலிகள் காப்பகத்தின் பல பகுதிகளில் தேயிலைத் தோட்டங்கள் பரவிக் கிடக்கின்றன. இவ்வாறாக புலிகளின் வாழிடத்தை மனிதர்கள் ஆக்கிரமிக்கும்போது, மக்கள் வசிப்பிடத்துக்கு புலிகள் வரவே செய்யும். தாக்குதல் நடக்கவே செய்யும்.

ஒவ்வொரு மனித உயிரிழப்பின்போதும் ஓர் ஆள்கொல்லி புலியை சுட்டு வீழ்த்துவது என்பது சரியான அணுகுமுறை அல்ல. பாதுகாப்புத் தேவைப்படுவது புலிகளுக்குத்தான், மனிதர்களுக்கல்ல!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.