2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
/

பாலிலுமா கலப்படம்?

ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையும், சட்டப்பேரவைகளும் இருக்கும் நாட்டில், எந்தவொரு முக்கியமான பிரச்னைக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டி இருப்பதும், நீதிமன்ற வழிகாட்டுதல், கண்காணிப்பு, உத்தரவு ஆகியவற்றின் மூலமே தீர்வு காண்பது என்பதும் விரும்பத்தகாத நடைமுறைகள்.

News image
Updated On :9 ஜனவரி 2024, 4:45 am

ஆசிரியர்

ஒரு சுதந்திர ஜனநாயக நாட்டில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மக்களவையும், சட்டப்பேரவைகளும் இருக்கும் நாட்டில், எந்தவொரு முக்கியமான பிரச்னைக்கும் நீதிமன்றத்தை அணுக வேண்டி இருப்பதும், நீதிமன்ற வழிகாட்டுதல், கண்காணிப்பு, உத்தரவு ஆகியவற்றின் மூலமே தீர்வு காண்பது என்பதும் விரும்பத்தகாத நடைமுறைகள். நியாயமாகப் பார்த்தால் இதை நீதித் துறையின் வரம்புமீறல் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் அதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் என்றால் அதற்குக் காரணம் நிர்வாகம் முறையாகச் செயல்படுவதில்லை என்பதுதான்.

மிகப்பெரிய முறைகேடு, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரசியல் சட்டப் பிரச்னைகள் போன்றவற்றில் நீதித் துறையின் தலையீடு தேவைப்படுவதில் தவறில்லை. ஆனால், அன்றாட நிர்வாக முடிவுகளுக்குக்கூட சாதாரணக் குடிமகன் நீதிமன்றத்தை அணுகியே தீர்வையோ, நியாயத்தையோ பெற வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறதே, அதுதான் சகிக்கவே முடியாத கொடுமை.

மனிதன் பேராசை பிடித்தவன்தான். வியாபாரிகள் எப்படியெல்லாம் சம்பாதிக்க முடியுமோ அப்படியெல்லாம் சம்பாதிக்கத் தலைப்படுவார்கள் என்பதும் புதிதொன்றுமல்ல. இதையெல்லாம் கட்டுப்படுத்தவும், யாரும் கொள்ளை லாபம் அடைந்துவிடாமல் தடுக்கவும், முறைகேடான வியாபாரங்களை சட்டத்தின் துணையோடு தண்டிக்கவும்தான் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும், நிர்வாகமும் இருக்கின்றன. அப்படி இருந்தும், சாப்பிடும் உணவிலும், ஏன், குழந்தைகளுக்கான பாலிலும்கூடக் கலப்படம் நடைபெறுகிறது என்றால் நிர்வாக இயந்திரம் இருந்தாலென்ன, இல்லாமல் போனால்தான் என்ன?

தாய்ப்பாலைத் தவிர உலகிலுள்ள எல்லாப் பொருள்களிலும் கலப்படம் செய்ய முடியும் என்கிற கூற்று உண்மைதான் போலிருக்கிறது. சமுதாய ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து கோடிக்கணக்கான குழந்தைகளின் அடிப்படை உணவாக இருந்து வருவது பால். அதிகப் புரதச் சத்துள்ள உணவுகளை வழங்க முடியாத பெற்றோர்கூட தங்கள் குழந்தைகளுக்கு வழங்கும் அடிப்படை உணவாக இருப்பது பால்தான். அப்படிப்பட்ட பாலில் தண்ணீர் கலக்கிறரார்கள் என்றால்கூடப் பரவாயில்லை, நச்சுக் கலந்த ரசாயனங்களைச் சேர்க்கிறார்கள் என்றால் அதைவிட ஆபத்து ஏதாவது இருக்க முடியுமா?

இந்தியாவில் பாலில் கலப்படம் என்பது எல்லா இடங்களிலும் பரவலாகக் காணப்படுவதால், இதனால் ஏற்படும் பாதிப்பு எவ்வளவு என்பதைக் கணக்கிடுவதேகூட மிக மிகக் கடினம். மற்ற பொருள்களில் இல்லாவிட்டாலும்கூட, பாலில் கலப்படம் செய்வோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டாலொழிய இது தடுக்கப்படாது என்பது மட்டும் நிச்சயம். இந்தச் சூழலில்தான் உச்சநீதிமன்றம் பாலில் கலப்படம் செய்வோருக்கு ஆயுள் சிறைத் தண்டனை வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆலோசனை கூறியிருக்கிறது.

நாடு தழுவிய அளவில் பல்வேறு மாநிலங்களின் நகர்ப்புறங்களிலும், சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் நடத்திய சோதனைகளில் பாலில் இன்னதைத்தான் கலப்பது என்கிற வரைமுறையே இல்லாமல் போய்விட்டது தெரிகிறது. பல பகுதிகளிலிருந்து எடுக்கப்பட்ட பாலை சோதித்தபோது, "ஸ்டார்ச்', "ஃபார்மாலின்',

"டிடர்ஜண்ட்', "ஹைடிரஜன் பர் ஆக்சைடு' போன்ற பலவற்றால் பால் கலப்படம் செய்யப்படுவது தெரிய வந்திருக்கிறது. சோதனையின்போது, பிரபல நிறுவனங்களின் இலச்சினையுடன் விற்கப்படும் பால் பாக்கெட்டுகளில் இந்தக் கலப்படங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதுதான் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள 90 பால் பண்ணைகளின் மீது பாலில் கலப்படம் செய்ததற்காக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தொண்ணூறு பால் பண்ணைகளில் சில, பிரபல இலச்சினைகளைக் கொண்ட நிறுவனங்களின் பால்பண்ணைகள் என்பதுதான் மிக முக்கியமான தகவல். இந்த இலச்சினைகளை வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனங்களின் நற்பெயருக்காக நம்புகிறார்கள் எனும்போது, அதில் கலப்படம் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அந்த நிறுவனங்களுக்கு இருக்க வேண்டாமா?

தங்களது பண்ணைகளில் இதுபோன்று கலப்படம் செய்யப்படவில்லை என்றும், அதை விநியோகம் செய்யும் வணிக உரிமம் பெற்றவர்கள்தான் அந்தக் கலப்படத்துக்குக் காரணம் என்றும் அந்த நிறுவனங்கள் கூறுகின்றன. தங்களது நிறுவனத்தையும், இலச்சினையையும் நம்பும் வாடிக்கையாளர்களுக்குக் கலப்படம் இல்லாத பாலைக் கொண்டு சேர்க்கும் பொறுப்பும், விநியோகஸ்தர்களாக நியமிக்கப்படுபவர்கள் கலப்படம் செய்யாமல் இருப்பதைக் கண்காணிக்கும் பொறுப்பும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு இருத்தல் வேண்டாமா?

இப்போது இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றத்தை எட்டியிருக்கிறது. பல நுகர்வோர் அமைப்புகள் தங்களையும் இந்த வழக்கில் மனுதாரர்களாக இணைத்துக் கொண்டிருக்கின்றன. அதனால், அதிர்ஷ்டவசமாக, நீதிமன்றம் இப்போது நுகர்வோரின் சார்பில் இந்தப் பிரச்னையை அரசிடம் எடுத்துக் சென்றிருக்கிறது.

இப்போது இருக்கும் சட்டதிட்டத்தின்படியும், கண்காணிப்பு அலுவலர்களின் மெத்தனப் போக்கினாலும் துணிந்து பாலில் கலப்படம் செய்யப்படுவதால், கோடிக்கணக்கான மக்களின், குறிப்பாக, குழந்தைகளின், உடல்நலம் கடுமையான பாதிப்புக்கு ஆளாக நேரிடும் என்பது நிச்சயம். பசுவின் பாலில் ரசாயனங்கள் கலப்பது மட்டுமல்லாமல், மாட்டுத் தீவனங்களில் ரசாயனங்கள் கலப்பதும் தடுக்கப்பட்டாக வேண்டும். அதற்கு ஒரே வழி, பாலில் கலப்படம் செய்வோருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்துவதுபோல ஆயுள் சிறைத் தண்டனை என்கிற சட்டத் திருத்தம் கொண்டு வருவதுதான்.

சுத்தமான பாலை இந்தியர்கள் பருக அது மட்டுமே வழி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.