கல்வியும் கடனும்...
இன்றைய உயர் கல்விக் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், நடுத்தரக் குடும்பங்கள் மட்டுமன்றி அனைவருமே வங்கிகள் வழங்கும் கல்விக் கடனையே நம்பியுள்ளனர்.


இன்றைய உயர் கல்விக் கட்டணங்கள் மிக அதிகமாக இருப்பதால், நடுத்தரக் குடும்பங்கள் மட்டுமன்றி அனைவருமே வங்கிகள் வழங்கும் கல்விக் கடனையே நம்பியுள்ளனர். ஆனால், வங்கிகளோ, இந்தக் கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படாமலே போகக்கூடும் என்ற அச்சத்தால் கடன் வழங்கத் தயங்குகின்றன.
வங்கிகளின் அச்சத்தில் நியாயம் இருக்கவே செய்கிறது. வங்கிகளில் கல்விக் கடன் பெற்றவர்களில் 75 விழுக்காட்டினர் திரும்பச் செலுத்துவதே இல்லை. சுமார் 20 விழுக்காட்டினர் மாதம்தோறும் அதற்கான வட்டியை மட்டுமே செலுத்துகிறார்கள். இளைஞர்களைக் கவரும் வகையில், கல்விக் கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்ற தீர்மானம் போடப்படுகிறது. இது கடனுக்கான வட்டியைச் செலுத்தும் பெற்றோர்களிடம் தவறான எண்ணத்தை ஏற்படுத்தி, வட்டியைக்கூட கட்டாமல் இருக்கச் செய்கிறது.
அரசு உத்தரவின்படி, ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு எந்தப் பிணையும் இல்லாமல் நேரடியாக மாணவருக்குக் கடன் வழங்கப்பட வேண்டும். எந்தப் பிணையும் இல்லாமல் வழங்கப்படும் கடன் திரும்ப வருவது மிக மிக அரிது என்பதே வங்கிகளின் நடைமுறை அனுபவம். வீட்டுக் கடன் என்றால், அதைக் கட்டத் தவறினாலும் வீட்டை விற்று வங்கி தனது அசலை மீட்க முடியும். ஆனால், எந்தப் பிணையும் இல்லாத நிலையில், நான்கு ஆண்டுகள் கழித்து அந்த மாணவர் அதே முகவரியிலேயே வசிப்பார் என்கின்ற குறைந்தபட்ச உத்தரவாதம்கூட சாத்தியமில்லை. ஆகவேதான் வங்கிகள் தயங்குகின்றன.
டிசம்பர் 31, 2013 வரை இந்தியா முழுவதிலும், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள் மூலமாக மட்டும், 25.7 லட்சம் மாணவர்களுக்கு ரூ.57,700 கோடி கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, தனியார் வங்கிகளும் கல்விக் கடன் வழங்கியுள்ளன என்றாலும், அவற்றின் பங்களிப்பு அதிகபட்சமாக ரூ.3,000 கோடியாக மட்டுமே இருக்கலாம் என்று தெரிகிறது. இவ்வளவு கடன்களையும் ரத்து செய்ய முடியுமா? கல்விக் கடனையும் அரசியலாக்குவது சரியா என்கின்ற வாதங்கள் ஒருபுறம் இருந்தாலும், இந்தக் கல்விக் கடன் ரத்து விஷயத்திலும், விவசாயக் கடன் ரத்து போல, இதன் பயனாளிகள் பலரும் வசதி படைத்தவர்களாகவே இருப்பார்கள். ஏழைகள் மிகவும் குறைவாகவே பயன் பெறுவார்கள்.
கல்விக் கடன் வழங்குவதில் சில நெறிமுறைகளை உருவாக்குவதன் மூலம் வங்கிகளின் அச்சத்தைப் போக்க முடியும். அத்துடன் மாணவர்களுக்கு பொறுப்புணர்வையும் உண்டாக்க முடியும்.
முதலாவதாக, பெற்றோரின் சம்பளம், சொத்து எவ்வளவு இருந்தாலும் எல்லா மாணவர்களுக்கும் பிணை இல்லாமல் கல்விக் கடன் வழங்கப்பட வேண்டும். அதேநேரத்தில், அவர்களது சான்றுகள் அனைத்தும், கடன் செலுத்தி முடியும் வரை வங்கியின் மேற்பார்வை அல்லது கட்டுப்பாட்டுக்கு உள்பட்டதாகவே இருக்கும் வகையில் நிபந்தனைகள் சேர்க்கப்பட வேண்டும். இதனால் அந்த மாணவர் படிப்பை முடித்தாரா இல்லையா, எங்கே வேலைக்கு செல்கிறார் என்கின்ற அடிப்படை விவரங்கள் வங்கிக்கு தெரிய வரும். இதற்குப் பொருள், அவரது சான்றுகள் வங்கிகளிடம், வீட்டுப் பத்திரங்கள் போல ஒப்படைக்கப்பட வேண்டும் என்பதல்ல.
வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் படிப்பு விவரங்கள் வங்கியில் இருப்பதும், அவர்கள் எங்கே வேலைக்குச் சென்றாலும், அல்லது சுயதொழில் தொடங்க கடன் வாங்கினாலும், கல்விக் கடன் பெற்ற வங்கியில் ஓர் ஒப்பளிப்பு பெறுவது கட்டாயமாக்கப்படும். இந்த நடைமுறை இல்லாவிட்டால், நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு பட்டம் பெற்ற மாணவர், எங்கே சென்றார் என்று வங்கி தேடுவது இயலாது.
இரண்டாவதாக, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தலித், பழங்குடியின மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டிருந்தால், அந்த மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகையை ஆதிதிராவிடர் நலத் துறை அல்லது பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை வழங்கும்போது நேரடியாக மாணவர்களின் கல்விக் கடன் கணக்கில் செலுத்தப்பட வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் தங்கள் கல்வித் திறனால் பெறும் நிதிநல்கைகளை வங்கிக் கணக்கில் செலுத்த வகை செய்யலாம்.
மூன்றாவதாக, வட்டி விகிதத்தில் தளர்வுகள் செய்யப்பட வேண்டும். தற்போதைய நடைமுறையில், ஒரு மாணவர் முதலாண்டு பொறியியல் படிப்புக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கியிருந்தால், மாதம்தோறும் ரூ.900 வட்டி சேர்ந்து கொண்டே வரும். அடுத்த ஆண்டு மேலும் ரூ.1 லட்சம் கடன் வாங்கினால், அடுத்த ஆண்டு முதலாக குறைந்தது ரூ.2,000 வட்டி மாதம்தோறும் சேர்ந்துகொண்டே வரும். சில வங்கிகள் இந்த வட்டியை தொடர்ந்து கட்டும்படி கட்டாயப்படுத்துகின்றன. தவறினால், மறு ஆண்டு கடன் வழங்க மறுக்கின்றன. இந்த நிலை மாற வேண்டும் என்றால், படிக்கின்ற காலத்தில் வட்டி 4% அளவுக்கும், படிப்பை முடித்த ஆண்டிலிருந்து வழக்கமான வட்டி விகிதமும் எல்லா மாணவர்களுக்கும் அமைய வேண்டும். இதற்கு வருமான வரம்பு தேவையில்லை.
நான்காவதாக, ஒரு மாணவர் ஏதோ ஒரு காரணத்துக்காக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டாலோ அல்லது அந்த மாணவர் வருகைப் பதிவு இல்லாததால் தேர்வு எழுத அனுமதிக்கப்படாத நிலையிலோ, அந்த மாணவர் ஒரு பருவத் தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாத நிலையிலோ அந்த மாணவருக்கு தொடர்ந்து கடன் வழங்குவதை நிறுத்தி வைக்கும் உரிமையை வங்கிகளுக்கு அரசு வழங்க வேண்டும்.
இவற்றைச் செய்ய முடிந்தால், அனைவருக்கும் கல்விக் கடன் கிடைக்கும். அதோடு, கல்விக் கடன் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்ற குறைபாடும் இருக்காது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...