நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

அரசியலாக்குகிறார் கேஜரிவால்!

சில ஊடகங்களும், தில்லி முதல்வர் கேஜரிவாலும் கூறுவதைப்போல, தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வரின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் ஐ.ஏ.எஸ். அறையில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது முன்னறியாப் புதுவழக்கம் என்றாலும், இது லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பானது. லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தலைமைச் செயலக அலுவலகத்துக்குள் நுழைந்து, லஞ்சம் பெற்ற ஊழியரை மறைந்திருந்து கையும் களவுமாக கைது செய்யும் நடவடிக்கைகள் புதிதல்ல. பலநூறு முறை நடந்திருக்கிறது.

News image
Updated On :9 ஜனவரி 2024, 7:49 am

ஆசிரியர்

இதுநாள்வரையிலும், ஒரு தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முதன்மைச் செயலர் அறைக்குள் நுழைந்து சி.பி.ஐ. சோதனை நடத்தப்பட்டதில்லை என்பது உண்மையே. ஆனால், அவ்வாறு சோதனை நடத்த சட்டப்படி எந்தத் தடையும் இல்லை என்பதும் உண்மை.
 சில ஊடகங்களும், தில்லி முதல்வர் கேஜரிவாலும் கூறுவதைப்போல, தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வரின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் ஐ.ஏ.எஸ். அறையில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது முன்னறியாப் புதுவழக்கம் என்றாலும், இது லஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பானது. லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தலைமைச் செயலக அலுவலகத்துக்குள் நுழைந்து, லஞ்சம் பெற்ற ஊழியரை மறைந்திருந்து கையும் களவுமாக கைது செய்யும் நடவடிக்கைகள் புதிதல்ல. பலநூறு முறை நடந்திருக்கிறது.
 இத்தகைய நடவடிக்கைகளில், முதலமைச்சரிடமோ அல்லது உயர் அதிகாரிகளிடமோ தகவல் தெரிவித்துவிட்டு உள்ளே நுழைய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையை யாரும் நிர்பந்தித்ததில்லை. தற்போது அந்த ஊழியர் ஓர் ஐ.ஓ.எஸ். அதிகாரி என்பதும், எதிர்க்கட்சி மாநில முதல்வரின் முதன்மைச் செயலர் என்பதும் மட்டுமே புதிது.
 சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரு முதல்வருடன் தொடர்புடைய ஐ.ஏ.எஸ். அதிகாரியின் அறையை சோதனையிட சட்டத்தில் இடம் இருக்கிறதா? என்றால், இருக்கிறது. ஓர் அதிகாரியின் அலுவலகத்தை, வீட்டை, தொடர்புடைய நபர்களின் நிறுவனங்களை சோதனையிட வேண்டும் என்று நீதிமன்ற "வாரண்ட்' பெற்றிருந்தால், எந்த இடத்தில் வேண்டுமானாலும் இத்தகைய சோதனையை நடத்தலாம், எதையும் பறிமுதல் செய்யலாம். இதனை சட்டம் அனுமதிக்கிறது. அந்த ஊழியர் அல்லது அந்த நபர் எத்தகைய உயர்ந்த அதிகாரியாக இருந்தாலும், அது ஊழல் தொடர்பான வழக்கு என்றால், சி.பி.ஐ. எந்தவித தயக்கமும் இல்லாமல் சோதனை நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்று நீதிமன்றம் ஏற்கெனவே வரையறுத்துள்ளது.
 ஆகவே, தில்லி முதல்வர் கேஜரிவால் தனது சுட்டுரையில் குறிப்பிடுவதுபோல, "என்னிடம் சொல்லிவிட்டு இந்த நடவடிக்கையை எடுத்திருக்கலாமே' என்ற கேள்விக்கு இடமே இல்லை. இந்த விவகாரத்திலும்கூட, முன்கூட்டியே உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டியதில்லை; அவர் மூலம் தகவல் கசிந்து, ஆவணங்கள் அழிக்கப்படும் நிலை உருவாகலாம் என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.
 சி.பி.ஐ. அதிகாரிகள் அளித்த பேட்டியில், மிகத் தெளிவாக இந்த வழக்கு கேஜரிவால் அரசு தொடர்பானது அல்ல என்பதையும், முதல்வரின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் எனும் ஐ.ஏ.எஸ். அதிகாரி 2007 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில், அரசுத் தரப்பு ஒப்பந்தங்களை ஒரு குறிப்பிட்ட நிறுவனத்துக்கு (சுமார் ரூபாய் ஒன்பது கோடி வரை) முறைகேடாக வழங்கிடக் காரணமாக இருந்திருக்கிறார் என்ற புகாரின் அடிப்படையில், நான்கு மாத விசாரணைக்குப் பிறகு, நீதிமன்ற உத்தரவு பெற்று நடத்தப்பட்ட சோதனை என்று விளக்கிய பின்னரும், முதல்வர் கேஜரிவால் தனது சுட்டுரையில், எனக்கு எதிரான சான்றுகளைத் தேடி என் கோப்புகளை குறிவைத்து நடத்தப்பட்ட சோதனை என்று தெரிவித்திருப்பது அவர் பிரச்னையை அரசியலாக்க விரும்புகிறார் என்பதைத்தான் காட்டுகிறது.
 இந்த விவகாரத்தில் தில்லி முதல்வர் கேஜரிவால் மிகவும் பதற்றமடையக் காரணம், தன் அலுவலகத்தில் சி.பி.ஐ. நுழைந்ததன் மூலம் தன் கறைபடியாத தோற்றத்தின் மீது மத்திய அரசு சேறுபூச முயலுவதாக கருதுகிறார். ராஜேந்திர குமார் வருமான வரித் துறையில் கேஜரிவாலின் சக ஊழியர், நண்பர் என்பதுதான் அவரது கோபத்துக்குக் காரணம். அவரது முதன்மைச் செயலர் ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரி மட்டுமே என்பதை மறந்துவிட்டு, அவர் மீதான நடவடிக்கையைத் தன்மீதான நடவடிக்கையாகக் கருதுகிறார்.
 அருண் ஜேட்லி, தில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்த காலத்தில் நடைபெற்ற ஊழல் குறித்து நீதி விசாரணை நடத்துவேன் என்று பதிலுக்கு கேஜரிவால் அறிவித்திருப்பதும், பிரதமர் மோடியை மனநோயாளி (சைக்கோபத்) என்று விமர்சனம் செய்திருப்பதும் ஒரு முதல்வரின் பதவியில் இருந்துகொண்டு பேசக்கூடிய வார்த்தைகள் அல்ல. இதன்மூலம் விளம்பரம் தேடிக்கொள்வதும், எதிர்க்கட்சி முதல்வர்களின் ஆதரவைப் பெறுவதும்தான் கேஜரிவாலின் நோக்கமாக இருந்தால், எதுவும் சொல்வதற்கில்லை.
 முதல்வர் கேஜரிவால் எதிர்ப்பு தெரிவிக்கும் முன்பாக, இது சட்டப்படி சரியான நடவடிக்கையா என்று அரசு வழக்குரைஞர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அதன் பிறகு அரசை விமர்சனம் செய்திருக்க வேண்டும். தனது அறையை, தன் இல்லத்தை சோதனையிட்டது போன்ற தோற்றத்தைக் கொடுத்த கேஜரிவாலின் நடவடிக்கை - மிகைக் குரல்!
 ஓர் ஊழல்வாதிமீது நடத்தப்பட்ட சோதனை என்பது போய், எதிர்க்கட்சி அரசு மீது தொடுக்கப்பட்ட வரம்புமீறலாக பிரச்னை மாற்றப்பட்டிருக்கிறதே அதுதான் மிகப்பெரிய சோகம். பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், காங்கிரஸின் எண்ணப்படி நாடாளுமன்றம் முடக்கப்பட்டு எந்தவித மசோதாவும் நிறைவேறாமல் பார்த்துக் கொள்ளவும் மத்திய புலனாய்வுத் துறையினரின் நடவடிக்கை பயன்படுத்தப்படும் என்பது நிச்சயம். நாடாளுமன்றம் நடக்கும்போது மத்திய புலனாய்வுத் துறை இந்த நடவடிக்கையைத் தவிர்த்திருக்கலாம்.
 மத்திய அரசுடனான தில்லி அரசின் மோதலால் அரசியல் லாபம் கிடைக்கலாம். ஆனால், மக்களுக்கு அதனால் எந்த நன்மையும் விளையப்போவதில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.