சாலை விபத்தில் ஒருவருக்கு மரணத்தை ஏற்படுத்திய வழக்கில் நடிகர் சல்மான் கான் பெற்ற ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையை மும்பை உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது. சல்மான் கான் தனது டயோட்டா காரை ஓட்டினார் என்பதையோ, விபத்து நேரிட்ட வேளையில் அவர் மதுவின்பிடியில் இருந்தார் என்பதையோ நிரூபிக்கும் சாட்சியங்கள் வலுவானதாக இல்லை. அரசுத் தரப்பு சாட்சியங்களும் சந்தேகத்துக்கு இடமளிக்காதவையாக இல்லை. அதனால், சல்மான் கானுக்கு மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தள்ளுபடி செய்வதாக நீதிபதி ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் அரசுத் தரப்பிலான சாட்சியங்கள், ஆவணங்கள் எந்தெந்த வகையில் பிழையானவை அல்லது நீதிமன்ற நடைமுறைக்கு ஏற்பில்லாதவை அல்லது கவனக் குறைவாக அளிக்கப்பட்டன என்று நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது:
விபத்து நடந்த இடத்திலிருந்து வெளியே வந்த சல்மான் கான் இரண்டு முறை கீழே விழுந்தார் என்கிற சாட்சியத்தை வைத்து, அவர் குடிபோதையில் இருந்தார் என்பதாகக் கருத முடியாது. அவருடைய ரத்த மாதிரி 6 மி.லி. எடுக்கப்பட்டு, இரண்டு குப்பிகளில் தலா 3 மி.லி. வீதம் நிரப்பப்பட்டு, ஆல்கஹால் சோதனைக்கு அனுப்பப்பட்டதில், ஒரு குப்பியில் 4 மி.லி. ரத்தம் இருந்துள்ளது. ரத்தம் எடுக்கப்பட்ட மருத்துவமனையின் வெளிநோயாளிப் பிரிவில் அவருடைய கையொப்பம் அல்லது கைநாட்டுப் பதிவு இல்லை. அவர் குடித்ததாக சொல்லப்படும் ஓட்டல் ரசீதில் வாடிக்கையாளரின் பெயர் இல்லை. ஆகவே, அந்த பில் அவருக்கு உரியது என்பதாகக் கருத முடியாது. அந்த ரசீது செப்டம்பர் 27-ஆம் தேதிக்கு உரியது. ஆனால், விபத்து செப்டம்பர் 28-ஆம் தேதி நடந்துள்ளது.
இந்த வழக்கில் ஓட்டல் ரசீதை மது அருந்தியதற்கான ஆவணமாக ஏற்பதா என்பது குறித்து விசாரணை நீதிமன்றம் உரிய கவனம் செலுத்தவில்லை. காயமடைந்தவர்கள் அளித்த சாட்சியங்கள் அவர் ஓட்டுநர் பக்கம் கதவைத் திறந்து வந்தார் என்பதை உறுதிபட தெரிவிக்கவில்லை. மாறுபட்ட சாட்சியங்களை அளித்துள்ளனர். சந்தேகத்தின் பலனை சல்மான் கானுக்கு வழங்கி அவர் மீதான ஐந்து ஆண்டு சிறைத்தண்டனையை உயர்நீதிமன்றம் ரத்து செய்கிறது.....
சல்மான் கான் விடுதலை ஆனதிலும், 13 ஆண்டு கால வழக்கு முடிவுக்கு வந்ததிலும் மகிழ்ச்சியே என்றாலும், எத்தகைய பாமரனுக்கும் எழக்கூடிய சில கேள்விகள் இருக்கவேச் செய்கின்றன. இவ்வாறு போதையில் வண்டியோட்டி உயிரிழப்பு ஏற்படுத்திய வழக்குகளில் பிரபலமானவராக இல்லாமல், சாதாரண நபராக இருந்திருந்தால் இந்த அளவுக்கு நுட்பமாக, நடைமுறைச் சிக்கல்களை நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்து, விடுதலை பெறுவது சாத்தியமா என்பதுதான் அந்த சந்தேகம்.
இந்த வழக்கை 13 ஆண்டுகளாக நடத்தியதால் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு, இந்த செய்திக்கு ஊடகங்கள் அளித்த முக்கியத்துவம், மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றம் சல்மான் கானுக்கு தண்டனை அளித்தபோது மும்பையில் அவரது ரசிகர்கள் அடைந்த துயரம், திரைப்படத் துறையின் தயாரிப்பாளர்களின் அதிர்ச்சி என எல்லாத் தரப்பிலும் ஏற்பட்ட எதிர்வினைகள் அனைத்தும் ஒன்றுமில்லாத விவகாரமாக மாறியதற்கு அரசுத் தரப்பினரே காரணம். தவறான, சரியில்லாத, உறுதிப்படுத்தாத ஆவணங்களை விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அரசுத் தரப்பு அதிகாரிகள், காவல் துறையினருக்கு என்ன தண்டனை?
இத்தகைய வழக்குகளில் இன்றைய நடைமுறைக்கு ஏற்ப, சாலை விபத்துகளில் ஏற்கத் தக்க ஆவணங்கள் எவையெவை, எத்தகைய நடைமுறைகள் தொடக்க நிலையிலேயே சரியாக பின்பற்றப்பட வேண்டும் என்பதை மும்பை உயர்நீதிமன்றம் ஒரு வழிகாட்டுதலாக அறிவுறுத்தியிருக்கலாம்.
13 ஆண்டுகளுக்கு முன்பு தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி மக்களைச் சென்றடைந்திருக்கவில்லை. இன்று தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, ஏழைகளிடம்கூட ஆண்ட்ராய்டு செல்லிடப்பேசி உள்ளது. இத்தகைய விபத்துகளை செல்லிடப்பேசியில் படம் எடுத்துக் கொடுத்தால் அதை ஓர் ஆவணமாக ஏற்கலாமா, வேண்டாமா, அதன் உண்மைத் தன்மையை அறிய மாவட்ட அளவிலான நீதிமன்றங்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை என்ன என்பதை நீதிபதி விளக்கியிருக்கலாம்.
கடந்த ஜூன் மாதம், சென்னையில் ஒரே மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த மூன்று வளரிளம் பருவத்தினர், கட்டுப்பாட்டை இழந்து பிராட்வே அருகே நடைபாதையில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் மூன்று பேர் இறந்தனர். இந்த மூவரும் வாகனத்துடன் தப்பி, ஸ்டான்லி மருத்துவமனையில் தங்களுக்கு ஏற்பட்ட சிறு காயங்களுக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தபோது இவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் உள்ள ஒரே ஆவணம், விபத்து நடந்த இடத்தில் காவல் துறையினர் கண்டெடுத்த செல்லிடப்பேசி, இந்த மூவரில் ஒருவருக்குச் சொந்தமானது என்பது மட்டுமே.
சல்மான் கான் வழக்கில் நீதிமன்றம் எழுப்பிய நுட்பமான சந்தேகங்களைப் பார்க்கும்போது, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மூன்று வளரிளம் பருவத்தினர் தப்பிப்பது மிகமிக எளிதாக இருக்கும் போலிருக்கிறதே...÷
சல்மான் கான் விடுதலை குறித்துக் கேலியாக ஒரு முகநூல் பதிவு: நடைபாதை நடப்பதற்கு மட்டுமே. தூங்குவதற்கு யாருக்கும் உரிமை இல்லை. ஆகவே நடைபாதையில் நேரிட்ட விபத்துக்கு சல்மான் கானை பொறுப்பாக்குதல் கூடாது.
சல்மான் வழக்கில் சட்டம் தனது கடமையைச் செய்தது, அந்தச் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளின் அடிப்படையில் நீதித் துறை சல்மானை விடுதலை செய்தது. ஏழையாகப் பிறப்பது மகா பாவம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஸ்ரீநகர் - லே தேசிய நெடுஞ்சாலையில் பனிச்சரிவு
சூர்யவன்ஷி 3-ஆவது அதிவேக சதம்! ஹைதராபாத் அணிக்கு இமாலய இலக்கு!

தன் 7-வது படத்தின் படப்பிடிப்புக்குத் தயாராகும் சூரி!
நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

