காங்கிரஸ் உறுப்பினர்களின் அமளி காரணமாக நேற்று மக்களவை, மாநிலங்களவை இரண்டுமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரு அவைகளும் அமளியால் பாதிக்கப்படுவதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு இரண்டு கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது என்று 2011-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அன்றைய தினம் அவையில் அறிவித்ததை அவர்கள் மறந்திருக்க வழியில்லை. இந்த அமளிக்குக் காரணம் ஏதாவது மக்கள் பிரச்னையோ, மத்திய அரசுக்கு எதிரான ஊழல் முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டோ அல்ல.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், துணைத் தலைவர் ராகுல் காந்தியும், நேஷனல் ஹெரால்டு சொத்து வழக்கில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதுதான் நாடாளுமன்ற முடக்கத்துக்குக் காரணம். இது நீதிமன்ற நடவடிக்கை, இதற்கும் அரசியல் பழிவாங்கலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்த பின்னரும் அமளி தொடர்ந்தது.
சோனியா காந்தி தனது சுட்டுரையில், இந்த வழக்குக்காக நான் அஞ்ச மாட்டேன். நான் இந்திரா காந்தியின் மருமகள் என்று கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மக்கள் தொடர்பாளர் அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், இந்த வழக்குக்குச் சொந்தக் காலில் நிற்கும் வலு இல்லை, இதைச் சட்டப்படி சந்திப்போம் என்கிறார். அச்சமில்லை என்றால், சட்டப்படி சந்திக்கத் தயார் என்றால் ஏன் நாடாளுமன்றத்தை முடக்க வேண்டும்?
சுமார் 60 ஆண்டுகள் ஆட்சி நடத்திய காங்கிரஸ் கட்சி, அரசியல் பழிவாங்கல்தான் இந்த சம்மன் என்கிற வாதத்தை முன்வைத்து நாடாளுமன்றத்தை முடக்கினால் நீதிமன்றம் அரசின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்று ஆகிவிடாதா? இதைவிட நீதித் துறையின் மீது காங்கிரஸ் கட்சித் தலைமை சுமத்தக்கூடிய பழி வேறு என்னவாக இருக்க முடியும்? உச்சநீதிமன்றத்துக்கும் நரேந்திர மோடி அரசுக்கும் இடையே நீதிபதிகள் நியமனம் தொடர்பான மசோதாவால் பனிப்போர் நடந்து கொண்டிருக்கிறது என்பது உலகுக்கே தெரியும். இந்த நிலையில், நீதித்துறை மீது செல்வாக்கு செலுத்தும் வலிமை மோடி அரசுக்குக் கிடையாது என்பது சோனியா காந்திக்குத் தெரியாதா என்ன?
இந்த வழக்கை அரசியல் பழிவாங்கல் என்று காங்கிரஸ் சொல்லக் காரணம், வழக்கைத் தொடுத்தவர் பா.ஜ.க.வில் இருக்கும் சுப்பிரமணியன் சுவாமி. நீதிமன்றத்தில் தங்கள் நியாயத்தை நிரூபிக்கும் வாய்ப்பும், சுப்பிரமணியன் சுவாமியின் வாதம் பொய் என்று நிரூபிக்கவும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற இரு அவைகளின் நடவடிக்கைகளையும் முடக்குவதன் மூலம், இந்த விவகாரத்தில் எத்தகைய விதிமுறைத் தளர்வை நீதிமன்றம் அனுமதிக்கும் என்று சோனியா காந்தி எதிர்பார்க்கிறார் என்று தெரியவில்லை. நாடாளுமன்றத்தை முடக்குவதற்கு இதை ஒரு சாக்காகக் காங்கிரஸ் பயன்படுத்துகிறது அவ்வளவே!
தற்போது, தில்லி உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் டிசம்பர் 8-ஆம் தேதி நேரில் வரவேண்டிய சோனியா காந்தி, ராகுல் காந்தி இருவரும் வராதபோதிலும்கூட, அவர்களது மனுக்களை ஏற்று விசாரணையை டிசம்பர் 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் நேரில் ஆஜர் ஆகும்படி கூறியுள்ளது. இதற்கிடையில், உச்சநீதிமன்றத்தில் இந்த ஆணைக்குத் தடையுத்தரவு பெறக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றன. இத்தகைய வாய்ப்புகளைப் பயன்படுத்தாமல் சோனியா காந்திக்கும், காங்கிரஸுக்கும் ஏன் இந்த கோபம்? ஏன் இந்த அச்சம்?
ஜவாஹர்லால் நேரு 1938-இல் தொடங்கிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை அசோஸியேட் ஜர்னல் என்ற நிறுவனம் நடத்தியது. அந்த நிறுவனத்தின் சொத்து மதிப்பு ஏறத்தாழ ரூ.2,000 கோடி. இந்த நிறுவனத்தின் வருவாய்க்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. அசோசியேட் ஜர்னல் நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சி பெருந்தொகையைக் கடனாக வழங்கி இருந்தது.
இன்னொருபுறம், "யங் இந்தியா' என்கிற நிறுவனம் தொடங்கப்படுகிறது. சோனியா காந்தி ராகுல் காந்தி தவிர, அவர்களின் குடும்பத்துக்கு நெருக்கமான சுமன் துபே, சாம் பித்ரோடா, மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்ணான்டஸ் ஆகியோர் அதன் பங்குதாரர்கள். அந்த நிறுவனத்தின் பங்குகளை "யங் இந்தியா' நிறுவனம் வாங்குகிறது. சுமன் துபேவும், சாம் பித்ரோடாவும் தங்கள் பங்குகளை சோனியா காந்திக்கும், ஆஸ்கர் பெர்ணான்டஸுக்கும் அதன் அடிப்படை மதிப்பில் (சந்தை மதிப்பில் அல்ல!) விற்கிறார்கள்.
வருமான வரி இலாகாவின் ஆவணங்களின்படி, "யங் இந்தியா' நிறுவனத்தில் 83.3% பங்குகளை சோனியாவும் ராகுலும் வைத்திருக்கிறார்கள். 15.5% மோதிலால் வோராவும், 1.2% ஆஸ்கர் பெர்ணான்டஸும் வைத்திருக்கிறார்கள். "யங் இந்தியா' நிறுவனத்தின் கையில் அசோசியேட் ஜர்னல் நிறுவனம் போனவுடன் காங்கிரஸ் கட்சி அதற்குக் கொடுத்திருந்த கடனைத் தள்ளுபடி செய்கிறது. இதற்குப் பின்னால் மிகப்பெரிய முறைகேடு உள்ளது என்றும், பங்குகளைப் பரிமாற்றம் செய்ததில் வரி ஏய்ப்பு நடந்திருக்கிறது என்பதும்தான் சுப்பிரமணியன் சுவாமியின் குற்றச்சாட்டு.
காங்கிரஸ் கட்சியின் சொத்தை சுற்றிவளைத்து மறைமுகமாக சோனியா காந்தி அபகரிக்கப் பார்க்கிறார் என்பதுதான் குற்றச்சாட்டின் நோக்கம். காங்கிரஸ் இதைச் சட்டப்படி எதிர்கொள்வதை விட்டுவிட்டு, நாடாளுமன்றத்தை முடக்கிப் பிரச்னையாக்குவதிலிருந்து, ஒன்று மட்டும் வெட்டவெளிச்சமாகிறது. இதற்குப் பின்னால் ஏதோ குளறுபடி காணப்படுகிறது என்பதுதான் அது.