சென்னையில் திங்களன்று "ஞாயிறு' எழுந்தபோது, நகரத்தில் மட்டுமல்ல, மக்கள் மனங்களிலும் சற்று வெளிச்சம் பரவியது.
சேதமடைந்த 10,000 குடிசைகளைக் கட்டித்தருவது மற்றும் நிவாரண உதவிகள் குறித்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பு, குடிசைவாழ் மக்களின் வேதனையைக் குறைக்கும்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னைவாசிகளுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு அமைப்புகள் சார்பில் நிதியும், நிவாரணப் பொருள்களும் வந்து கொண்டிருக்கின்றன. வெள்ளம் மூடிய நெடுஞ்சாலைகளும், தண்டவாளங்களும் இயல்புநிலைக்குத் திரும்பியதால் பேருந்துகள், ரயில்கள் ஓடத் தொடங்கிய நிலையில், நிவாரணப் பொருள்கள் பெருமளவு வந்து குவிகின்றன. மாமழை பொழிந்த பூமியில் மனிதநேயம் பொழிகிறது.
இந்த மழையினால் இழந்தவற்றைத் திரும்பப் பெற முடியாமல் பேரிழப்பைச் சந்திக்கிறவர்களாக இருப்பவர்கள் நடுத்தர வருவாய்க் குடும்பங்கள்தான்.
மழையினால் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதல்வர் அறிவித்த ரூபாய் நான்கு லட்சம், பிரதமர் மோடி அறிவித்த ரூபாய் இரண்டு லட்சம் கருணைத் தொகையை நடுத்தர வருவாய்ப் பிரிவினரும் பெற முடியும். காயமடைந்தோருக்கான கருணைத் தொகையும் கிடைக்கும் என்றாலும், இதில் மிகச் சிலரே நடுத்தர வருவாய்ப் பிரிவினராக இருப்பார்கள். மழையினால் வீடுகள் இடிந்து சேதமடைந்தால் இழப்பீடு பெறலாம். மழை, வெள்ளம் வீட்டுக்குள் புகுந்தது என்பதற்காக நிவாரணத் தொகை வழங்கப்படுவதில்லை. ஆகவே, நடுத்தர குடும்பங்கள் இந்த மழை, வெள்ளத்தால் இழந்தவை எத்தனை எத்தனையோ... அவற்றுக்கு இழப்பீடு கோர முடியாது.
வெள்ளம் வீடுகளில் புகத்தொடங்கியதும் பெரும்பாலான நடுத்தர வருவாய்க் குடும்பங்கள் வெளியேறி, சென்னைக்கு வெளியே உள்ள தங்கள் உறவினர் வீடுகளில் அடைக்கலமாகினர். இவர்கள் முகாம்களில் இல்லை. இவர்கள் மீண்டும் சென்னைக்குத் திரும்பி வரும்போது, அவர்கள் தங்கள் சேமிப்பில் பெரும்பகுதியை இந்த மழை வெள்ளத்தில் இழந்தவற்றை ஈடு செய்வதற்காக செலவிட நேரும்.
வீட்டுக்குள் மழை வெள்ளம் புகுந்ததால் பாதிக்கப்பட்ட சோபா செட்டுகள், மெத்தைகள், தலையணைகள் இப்போது வீதியில்! சமையலறையில் வெள்ளம் சாப்பிட்ட அரிசி, பருப்புக்கு அளவில்லை. இழந்த, பாழாகிப்போன துணிமணிகள் ஏராளம். உயிரைக் காப்பாற்றிக்கொள்ளும் வேகத்தில், பாதுகாக்க மறந்த தொலைக்காட்சிப் பெட்டிகள், இரு சக்கர வாகனங்கள் ஏன் கார்கள்கூட எண்ணிக்கையில் சொல்லி மாளாது. வீட்டில் இடமில்லாமல் வீதியில் நிறுத்தப்பட்டு, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, அடிபட்டு, சேதமடைந்த கார்கள் பல நூறு! ஆனால், இவை அனைத்தும் தனி நபர் ஏற்க வேண்டிய இழப்புகளாக கருதப்படுமே தவிர, இதனை அரசு ஈடு செய்வது இயலாது.
வெள்ள நிவாரணம் பெற முடியாத, ஆனால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இத்தகைய சென்னைவாசிகளுக்கு நேரடியாக நிவாரண உதவிகள் அளிப்பது சாத்தியமில்லை என்றாலும், அவர்களுக்குப் பல்வேறு சலுகைகள் அளிப்பதன் மூலம் அவர்களுக்கும் நியாயம் செய்ய இயலும். ஆனால், இதை அரசு மட்டுமே செய்துவிட முடியாது. இதில் உற்பத்தியாளர்கள், தொழில் துறை மற்றும் வியாபாரிகளின் ஈடுபாடும் அவசியம்.
மிக்ஸி, கிரைண்டர், தொலைக்காட்சிப் பெட்டி, இரு சக்கர வாகனங்கள், கார்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகள் இந்த மழையில் சேதமடைந்திருந்தால் அவற்றை இயலும்வரை, சிறு பழுதுகளை இலவசமாகவும், சேதம் அதிகம் என்றால் 50% தள்ளுபடியில் உதிரிபாகங்களை வழங்கி, தாங்களே சரி செய்து தரவும் முன்வருவார்களேயானால், அதைவிடப் பெரிதான நுகர்வோர் சேவையை இந்த உற்பத்தியாளர்கள் வழங்கிவிட முடியாது.
வெள்ளத்தில் அடித்துவரப்பட்டு, மரங்களில் சிக்கிக் கிடக்கும் நூற்றுக்கணக்கான சேலைகளை ஏழைகள் எடுத்துவந்து காயப்போடுவதைப் பார்க்கும்போது, எத்தனை நடுத்தரக் குடும்பங்களின் துணிமணிகள் வீணாகிப் போயிருக்கும் என்பதை உணர முடியும். சென்னை பெருவணிகத் துணிக் கடைகள், ஆயத்த ஆடை நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து துணிகள், ஆயத்த ஆடைகளின் விலையில் எந்த அளவுக்கு தள்ளுபடி தர முடியுமோ அந்த அளவுக்கு தள்ளுபடி தந்தால், புத்தாடைகளை வாங்கிட நடுத்தர வருவாய் பிரிவினருக்கு உதவியாக இருக்கும். ஒவ்வொரு துணிக்கடையும் ஒரு பள்ளியைத் தத்தெடுத்து, அந்த மாணவர்களுக்கு இரண்டு ஜோடி சீருடையை - கேட்கின்ற குழந்தைகளுக்கு மட்டுமாகிலும் - இலவசமாக தைத்து வழங்க முன்வரலாம்.
சென்னை வங்கிக் கிளைகளில் வாடிக்கையாளராக இருப்போர், வீட்டுப் பொருள்கள் வாங்குவதற்காக குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வழங்குவதும் சற்று ஆறுதல் தரும்.
இதுபோன்ற பேரிடர் நிகழ்வுகளில், எல்லோருடைய இழப்புகளையும் எந்த அரசாலும் ஈடுசெய்துவிட முடியாது. காப்பீட்டு நிறுவனங்களும் சரி, இயற்கை சீற்றங்களைக் குறிப்பிட்டுக் காப்பீடு செய்திருந்தால் மட்டுமே இழப்பை ஈடுகட்டும். ஏழைகளை அரசு பார்த்துக்கொள்ளும். பணக்காரர்கள் தங்கள் இழப்பை தாங்களே ஈடு செய்வார்கள். மாதச் சம்பளத்தை மட்டுமே நம்பியிருக்கும் நடுத்தர வருவாய்ப் பிரிவினருக்கு தொழில் துறையின் சலுகைகள்தான் நிவாரணம்.
நவம்பர் வரையிலான மழை பாதிப்பால் தொழில் துறைக்கு ரூ.15,000 கோடி இழப்பு என அசோசெம் மதிப்பிட்டு அறிவித்தது. டிசம்பர் முதல்வாரத்தில் இரண்டாவது மழைத் தாக்குதலுக்குப் பிறகு இந்த நட்டம் இரு மடங்காகியிருக்கும். இருப்பினும், தொழில் புரிவோர், வியாபாரிகள் இந்த நட்டத்திலிருந்து மேலெழந்து வருவதற்கு இயலும். ஆனால், நடுத்தர வர்க்கத்தினரின் இழப்பு நிரந்தரமானது, சோகமும்தான்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வேட்டுவம் வெளியீடு எப்போது?
பெட்ரோல் விலை கடுமையாக உயரும்: ராகுல் காந்தி
லுங்கி இங்கிடி நலமுடன் உள்ளார்: ஐபிஎல் நிர்வாகம் தகவல்

மது, சூதாட்ட விளம்பரங்களில் நடிக்க மாட்டேன்: ஜிவி பிரகாஷ்
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

