கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியாமல்போன சரக்கு மற்றும் சேவை வரி வரைவு மசோதா தற்போதைய கூட்டத் தொடரில் நிச்சயமாக நிறைவேறும் என்ற நம்பிக்கை தொழில் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் உருவாகியுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், இப்போது ஐக்கிய ஜனதா தளமும் ஜி.எஸ்.டி. மசோதாவுக்கும், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதற்கும் தனது ஆதரவை வெளிப்படையாக அறிவித்துள்ளது. இத்தகைய ஆதரவான சூழ்நிலை காரணமாக மற்ற கட்சிகளும், குறிப்பாக காங்கிரஸ் கட்சி இணக்கம் தெரிவிக்க வேண்டிய நிலை உருவாகும். அல்லது எதிர்ப்பு இல்லாமல் அமைதி காத்து, ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற மறைமுகமாக உதவும் என்று அரசியல் நோக்கர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
சரக்கு மற்றும் சேவை வரி வரைவு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் 2011-இல் கொண்டுவரப்பட்டதுதான். ஒருவேளை, மீண்டும் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்திருந்தால் இந்நேரம் இந்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்திருக்கும். ஆனால், ஆட்சி மாற்றத்தின் காரணமாக, தான் கொண்டு வந்த அதே மசோதாவில், பல அம்சங்களைக் குறையாகச் சொல்லி காங்கிரஸ் தடைபோடுகிறது.
சரக்கு மற்றும் சேவை வரியை 18%-க்கும் அதிகமாக உயர்த்தக் கூடாது என்பதை சட்டப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் என்பதும், மாநிலங்களுக்கு இடையிலான விற்பனையில் 1% கூடுதல் வரிவிதிப்பு கூடாது என்பதும், ஜி.எஸ்.டி. வரி அளவை மாற்றி நிர்ணயிக்கும் குழுவில் ஆளும் கட்சியினர் மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் தற்போது இருப்பதை நான்கில் ஒரு பங்காக மாற்ற வேண்டும் என்பதும் காங்கிரஸின் நிபந்தனைகள். இந்த நிபந்தனைகளை பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் அன்றைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் இம்மசோதாவை அவையில் முன்வைத்தபோது காங்கிரஸ் எழுப்பவில்லை. காங்கிரஸ் தாக்கல் செய்த மசோதாவில் இல்லாத இந்த அம்சங்களைக் காங்கிரஸ் வலியுறுத்துவதற்கு அரசியல் மட்டுமே காரணம் என்பது வெளிப்படை.
சென்ற கூட்டத் தொடரில், சரக்கு, சேவை வரி மசோதா நிறைவேறாமல் கூட்டத் தொடர் முடிவுக்கு வந்தவுடனே சென்செக்ஸ் பங்கு வர்த்தகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. அன்னிய முதலீடு வருகையில் மந்தமான சூழல் உருவானது. அதே நிலை தொடர்வது இந்தியாவின் வளர்ச்சிக்கு நன்மை சேர்க்காது. இந்த மசோதா தற்போது அவையில் நிறைவேறி, அடுத்த ஆண்டு முதல் சரக்கு சேவை வரி அமலுக்கு வருவது இன்றியமையாத ஒன்று.
இந்த சரக்கு, சேவை வரி, ஏன் மனிதர் அருந்தும் மது வகைகளுக்கு மட்டும் இல்லை என்பது மிகப் பெரிய நெருடல். மது விற்பனைக்கான வரி தனியாக, மிகவும் அதிக அளவில் நிர்ணயிப்பதற்காக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று நம்புவோம்.
சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வரும்போது, ஒரே நாடு ஒரே விதமான வரி என்கிற உலகளாவிய நடைமுறை இந்தியாவிலும் ஏற்படும். இதனால், பல்வேறு விதமான வரிவிதிப்புகள் நீக்கப்பட்டு விடும். இதனால் பொருள்களின் விலை குறையவும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய மூலப்பொருள் மீதான வரி, மதிப்புக் கூட்டு வரி, சேவை வரி, மாநில வரிகள் என அனைத்தாலும் பொருளின் விலை கூடிக்கொண்டே போகிறது. ஒரே விதமான வரி விதிப்பின் மூலம் பொருளின் விலை குறைவதுடன், அரசுக்கு கிடைக்கும் வரி வருவாய் அளவுக்கும், மொத்த உற்பத்தி மதிப்புக்கும் (ஜி.டி.பி.) இடையிலான விகிதம் கணிசமாக உயரும்.
சரக்கு, சேவை வரி விதிப்பில் மாநில அரசுகளுக்குப் பங்கு உண்டு. இருப்பினும், உடனடியாக ஏற்படும் இழப்புகளுக்காக மாநில அரசுகள் ஆட்சேபணை தெரிவித்தன. இந்த ஆட்சேபணைகளைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற நிலைக்குழு இதற்கான பரிந்துரையில், மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பில் 100% முதல் மூன்று ஆண்டுகளுக்கு மத்திய அரசு ஈடு செய்யும், நான்காவது ஆண்டில் 75%, ஐந்தாவது ஆண்டில் 50% ஈடு செய்யும். அதன் பிறகு, மாநில அரசுகளுக்குக் கிடைக்க வேண்டிய பங்கு மட்டும் கிடைக்கத் தொடங்கும் என வரையறுத்துள்ளது. இதற்கு முதலில் சில மாநில அரசுகள் தயக்கம் காட்டினாலும், மெல்ல ஒவ்வொரு மாநிலமாக இதனைப் புரிந்துகொண்டு ஏற்கத் தொடங்கிவிட்டன.
மேலும், சரக்கு, சேவை வரி மசோதாவுக்கு அரசியல் கட்சிகள், மாநில ஆளும் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துவந்த போதிலும், தொடக்கம் முதலாகவே தொழில்துறையும், தொழில்துறை அமைப்புகளும் இதனை வரவேற்கவே செய்தன. இப்போதும் இதனை வரவேற்கின்றன.
காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து நின்று சரக்கு, சேவை வரி மசோதாவை எதிர்த்த கட்சிகளே இப்போது ஒவ்வொன்றாக ஆதரவு அளிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இனியும் காங்கிரஸ் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதில் அர்த்தமில்லை. ஆகவே, வேறு வழியின்றி இந்த மசோதா நிறைவேறுவதை அனுமதிப்பார்கள்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோரைப் பிரதமர் நரேந்திர மோடி தனது இல்லத்திற்கு அழைத்து தேநீர் கொடுத்த நாளிலேயே இந்தத் தடை நீங்கியது என்ற நம்பிக்கை விதைக்கப்பட்டுவிட்டது. தேசத்தின் பொருளாதாரம், வளர்ச்சி தொடர்பான பிரச்னைகளில் அரசியல் முட்டுக்கட்டை போடும் அநாகரிகத்திற்கு நாம் முடிவு கண்டாக வேண்டும்.