சிலையும், கவலையும்
ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி ஆபோட் நல்லிணக்க அடையாளமாக, தமிழகத்திலிருந்து களவுபோன இரண்டு கலைப் பொக்கிஷங்களை இந்தியப் பிரதமரிடம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது.


ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி ஆபோட் நல்லிணக்க அடையாளமாக, தமிழகத்திலிருந்து களவுபோன இரண்டு கலைப் பொக்கிஷங்களை இந்தியப் பிரதமரிடம் அளித்திருப்பது பாராட்டுக்குரியது. சோழர் கால நடராஜரின் வெண்கலச் சிலையும், அர்த்தநாரீஸ்வரரின் கற்சிலையும், சர்வதேச அளவில் கலைப் பொருள்
களைக் கடத்தி விற்பனை செய்யும் சுபாஷ் கபூர் என்பவரால் 2004-க்கும் 2009-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் கடத்தப்பட்டு பல கோடி ரூபாய்க்கு ஆஸ்திரேலிய தேசியக் காட்சியகத்துக்கு விற்கப்பட்டவை.
சோழர் கால நடராஜர் வெண்கலச் சிலை அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் ஆலயத்திலிருந்தும், அர்த்த நாரீஸ்வரர் கற்சிலை விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் ஆலயத்திலிருந்தும் திருடிக் கடத்தப்பட்டவை. ஏற்கெனவே சிவபுரம் நடராஜர் சிலை அமெரிக்காவிலிருந்தும், 1990}இல் பத்தூர் நடராஜர் சிலை, லண்டனிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்திலிருந்தும் மீட்கப்பட்டன.
பத்தூர் நடராஜர் சிலை இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதையும், அது களவாடப்பட்ட கலைப் பொருள் என்பதையும் நிரூபிப்பதற்கு அன்றைய தொல்லியல் துறை இயக்குநர் நாகசாமியும், தமிழகக் காவல் துறையினரும் எடுத்துக் கொண்ட பிரயத்னங்களைச் சொல்லி மாளாது. சிலையில் காணப்பட்ட சில மண் துகள்கள்தான், அது பதூர் கிராமத்தைச் சேர்ந்தது என்பதை உறுதி செய்தது.
பத்தூர் நடராஜர் சிலையும், ஏனைய சிலைகளும் திருட்டுப் போனது போன்றதல்ல விருத்தகிரீஸ்வரர் ஆலயத்தில் இருந்த அர்த்த நாரீஸ்வர் சிலை கடத்தப்பட்ட சம்பவம். 1974-ஆம் ஆண்டு புதுவை பிரெஞ்சு இன்ஸ்ட்டிட்யூட் இந்தச் சிலையைப் பற்றிய தெளிவான பதிவுகளைச் செய்திருக்கிறது. ஆனால், அர்த்தநாரீஸ்
வரர் சிலை திருட்டுப் போனது பற்றியோ, அதற்குப் பதிலாக ஒரு போலி சிலை அதே இடத்தில் நிறுவப்பட்டிருப்பது பற்றியோ எதுவுமே தெரியாமல் இந்து சமய அறநிலையத் துறை இருந்திருக்கிறது என்பதுதான் தலைகுனிவான செயல்.
சிலைக் கடத்தல்காரர் சுபாஷ் கபூர் தமிழகத்திலிருந்து நூற்றுக்கணக்கான கலைப் பொருள்களைக் களவாடிச் சென்று வெளிநாடுகளில் விற்றிருக்கிறார். சுத்தமல்லியிலுள்ள வரதராஜ பெருமாள் கோயிலிலிருந்து 18 சிலைகளையும், அரியலூர் மாவட்டம் ஸ்ரீபுரந்தான் கிராமத்திலுள்ள பிரகதீஸ்வரர் கோயிலிலிருந்து பல சிலைகளையும் கடத்திய குற்றத்திற்காக ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் இவருக்கு எதிரான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
சுபாஷ் கபூர் நூற்றுக்கணக்கான சிலைகளைக் கடத்திச் சென்று, வரவேற்பறைக் காட்சிப் பொருளாக வெளிநாடுகளில் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்று வந்திருக்கிறார். இதுபற்றிக் கண்டுபிடித்ததுகூடத் தமிழகக் காவல் துறையோ, இந்திய அரசின் புலனாய்வுத் துறையோ அல்ல. அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகப்பட்டு, 2012-இல் நியூயார்க்கிலுள்ள சுபாஷ் கபூரின் கலைப்பொருள் விற்பனை நிலையத்தைச் சோதனையிட்டபோதுதான், அந்த சர்வதேசக் கடத்தல்காரர் பற்றிய தகவலே நம்மவர்களுக்குத் தெரியவந்தது.
அவரது விற்பனை நிலையத்திலிருந்து கைப்பற்றிய விக்ரகங்கள் 150 என்றால், அவரால் கடத்தி விற்கப்பட்டவை எத்தனை எத்தனையோ, யார் அறிவார்? இவர் போல இன்னும் எத்தனை பேர் செயல்படுகிறார்களோ, யாருக்குத் தெரியும்?
தமிழகத்தைச் சேர்ந்த பல கலைப் பொருள்கள் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்பட இருக்கின்றன. அமெரிக்காவின் ஒஹயோ மாநிலத்திலுள்ள டொலடோ அருங்காட்சியகத்தில் ஒரு விநாயகர் சிலையும், அமெரிக்க உள்துறைப் பாதுகாப்புப் புலனாய்வுத் துறையிடம் நான்கு சிலைகளும், சிங்கப்பூரில் ஓர் உமாமகேஸ்வரி சிலையும் மீட்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன.
கலைப் பொருள்களைப் புகைப்படத்துடன் ஆவணப்படுத்துவது, பத்திரமாகப் பாதுகாப்பது என்பனவற்றில் கவனமே செலுத்தாமல் இருக்கிறோம். ஊருக்கு ஊர் கோயில், தெருவுக்குத் தெரு சிலைகள் என்றிருப்பதால் அவற்றின் மதிப்பு நமக்குத் தெரியவில்லை. இதுபோன்ற அற்புதமான கலைச் செல்வங்களை உலகில் வேறு எங்குமே காண முடியாது என்பது மட்டுமல்ல, நாமே நினைத்தாலும் அதுபோல உருவாக்க முடியாது.
ஆஸ்திரேலியப் பிரதமர் நம்மிடம் ஒப்படைத்திருக்கும் சிலைகளைப் பாதுகாக்க அரியலூர் மாவட்டத்தில் பாதுகாப்புக் கிடங்கு இல்லை. கடலூர் மாவட்டத்தில் பாதுகாப்புக் கிடங்குக்குப் போதிய காவலர்கள் இல்லை. 32 மாவட்டங்களில் 19 மாவட்டத் தலைநகரங்களில்தான் பாதுகாப்பு வசதி காணப்படுகிறது. இந்த நிலைமை எப்போது மாறப் போகிறது?
இப்படியே போனால் அடுத்த நூற்றாண்டில் தமிழனின் பெருமை பற்றிப் பேசக் கூட ஆதாரமே இல்லாத நிலைமை ஏற்பட்டுவிடுமோ என்று பயமாக இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...