தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

அரசு வாளாவிருக்கலாகாது!

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆண்டுக்கு இரு முறை நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:45 am

ஆசிரியர்

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று இந்தியாவில் மருத்துவ ஆலோசனை, சிகிச்சை அளிக்க வேண்டுமானால், இந்திய மருத்துவக் கவுன்சில் ஆண்டுக்கு இரு முறை நடத்தும், வெளிநாட்டு மருத்துவ மாணவர்களுக்கான தகுதித் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, நியுஸிலாந்து ஆகிய ஐந்து நாடுகளில் மருத்துவக் கல்வியின் தரம் அதிகம் என்பதால் அங்கேயுள்ள அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவப் பட்டம் பெற்ற மருத்துவர்கள் இந்தத் தகுதித் தேர்வை எழுத வேண்டிய அவசியம் இல்லை.

ரஷியா, சீனா ஆகிய இரு நாடுகளில்தான் இந்திய மாணவர்கள் மிகக் குறைந்த செலவில் மருத்துவம் படிக்கும் வாய்ப்பு இருந்தது. தற்போது சீனாவில் மருத்துவம் பயில்வதைத்தான் அதிக மாணவர்கள் விரும்புகிறார்கள். சீனாவில் உள்ள மருத்துவப் பல்கலைக்கழகங்கள் அரசினால் நடத்தப்படுகின்றன. கற்பித்தல் மொழி ஆங்கிலமாக இருக்கிறது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக மருத்துவப் படிப்பை ரூ. 10 லட்சத்தில் முடித்துவிட முடிகிறது. ஆகவே, பிற நாடுகளைச் சேர்ந்த 6,000 மாணவர்கள் ஆண்டுதோறும் மருத்துவம் பயில சீனா செல்கிறார்கள். இவர்களில் கணிசமானோர் இந்திய மாணவர்கள்.

ஆனால், 2013-ஆம் ஆண்டு இந்திய மருத்துவக் கவுன்சில் நடத்திய தகுதித் தேர்வில் வெளிநாடுகளில் படித்துப் பட்டம் பெற்ற 20% மாணவர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். மேலோட்டமாகப் பார்க்கும்போது, சீனா உள்ளிட்ட நாடுகளின் மருத்துவக் கல்வியின் தரம் இந்தியாவுக்கு இணையாக இல்லை என்றாலும்கூட, அதுவே முழுமையான உண்மை அல்ல. இந்தத் தகுதித் தேர்வு நடத்துவதில் வெளிப்படைத் தன்மை இல்லை என்பது மிகப்பெரும் குற்றச்சாட்டாக முன்வைக்கப்படுகிறது.

2009-ஆம் ஆண்டு வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயின்று, இந்தியாவில் தகுதித் தேர்வு எழுதிய மாணவர்கள் 6,262 பேர்.

2012-ஆம் ஆண்டு தகுதித் தேர்வு எழுதியவர்கள் 14,476. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதிகமானோர் சீனாவுக்குச் சென்று ரூ.10 லட்சத்தில் மருத்துவர்களாக ஆகிவிடுவதை விரும்பாத தனியார் மருத்துவக் கல்லூரிகள் தரும் அழுத்தம் காரணமாகவே, இந்த மாணவர்களின் தேர்ச்சி தடுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2014, ஜூன் மாதம் நிலவரப்படி இந்தியாவில் 387 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. இதில் 205 தனியார் மருத்துவக் கல்லூரிகள். மொத்தமுள்ள 51,979 எம்பிபிஎஸ் இடங்களில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் 25,905. அதாவது, சரிபாதி இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் உள்ளன.

இந்தியாவில் ஒரு தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவக் கல்வி பயில வேண்டும் என்றால், நிர்வாக ஒதுக்கீட்டில் குறைந்தபட்சம் ரூ.50 லட்சம் நன்கொடை தந்தாக வேண்டும் என்கிற பரவலான கருத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மறுக்கக் கூடும். ஆனால், அவர்கள் நன்கொடை எதுவும் பெறாமல், தர்ம சிந்தனையுடன் மருத்துவம் கற்றுத் தருகிறார்கள் என்பதை குழந்தைகள்கூட நம்பாது.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.3 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரை வசூலிக்கப்படுகிறது. ஆக எம்பிபிஎஸ் படிப்புக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ரூ.15 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை கட்டணத்துக்கு மட்டுமே போய்

விடுகிறது. இந்நிலையில், சீனாவில் வெறும் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பை ஊக்குவித்தால், இவர்களுடைய

கல்விச் சந்தை பாதிக்கப்படும் என்பதால், அவர்கள் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு நெருக்கடி தருகிறார்கள் என்பது இந்த மாணவர்கள், பெற்றோர் தரப்பில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. இதில் தலையிட்டு நியாயம் வழங்க வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உண்டு.

அதிகமான, அதே நேரத்தில் தரமான மருத்துவர்களை உருவாக்க வேண்டிய அவசியம் நமக்கு இருக்கிறது. உலக சுகாதார நிறுவனப் பரிந்துரைப்படி, 1,100 பேருக்கு ஒரு மருத்துவர் தேவை. ஆனால், இந்தியாவில் 1,700 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற அளவில்தான் இருக்கிறார்கள். அவர்களும் பெரும்பாலும் பெரு நகரங்களில்தான் இருக்கிறார்கள் என்பதால், ஊரகப் பகுதிகளில் 5,000 பேருக்கு ஒரு மருத்துவர் என்கிற நிலை காணப்பட்டாலும்கூட வியப்பில்லை. இந்த நிலைமை மாற வேண்டுமானால், குறைந்த கட்டணத்தில் அதிக மருத்துவக் கல்லூரிகள் தரமான மருத்துவக் கல்வி பயிற்றுவிக்க வேண்டும்.

சீனாவில் ரூ.10 லட்சத்தில் மருத்துவக் கல்வி அளிக்க முடியும் என்றால் இந்தியாவில் ஏன் அது சாத்தியப்படாது?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.