தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

கைகோக்கிறது கங்காரு!

ஏறத்தாழ 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்திய - ஆஸ்திரேலிய உறவில் மிகப்பெரிய திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

Updated On :11 செப்டம்பர் 2014, 7:53 pm

ஏறத்தாழ 60 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இந்திய - ஆஸ்திரேலிய உறவில் மிகப்பெரிய திடீர் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. 1955-இல் இந்தோனேஷியாவிலுள்ள பாண்டூங் நகரில் நடந்த ஆப்பிரிக்க - ஆசிய நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதில்லை என்று அப்போதைய ஆஸ்திரேலியப் பிரதமர் ராபர்ட் மென்சீஸ் எடுத்த முடிவு, பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு எரிச்சலையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அதுமுதல், ஆஸ்திரேலியாவுடனான தொடர்பை இந்தியா வலுப்படுத்திக் கொள்ளவோ, நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளவோ எந்தவித முயற்சியும் எடுக்கவில்லை என்பதுதான் உண்மை.

ஆஸ்திரேலியாவின் நிறவெறிக் கொள்கை, சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர், இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை, இந்திய அணு ஆயுத சோதனைக்கு ஆஸ்திரேலியாவின் எதிர்ப்பு, இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் போன்ற பல்வேறு நிகழ்வுகள், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் மாற்றம் ஏற்பட்டுவிடாமல் தடுத்து விட்டன.

இப்போது ஆஸ்திரேலியாவும் மாறிவிட்டது. இந்தியாவும் மாறி விட்டிருக்கிறது. நீர் மேலாண்மை; பேரிடர் தடுப்பு; மனித வள மேம்பாட்டு ஆராய்ச்சி; உயர்கல்வி; கடற்கொள்ளைத் தடுப்பு; இணையவழிக் குற்றங்கள் (சைபர் கிரைம்) தடுப்பு, பாதுகாப்பு; தீவிரவாத எதிர்ப்பு என்று இரு நாடுகளும் ஒன்றுபட்டு செயல்படப் பல பொதுப் பிரச்னைகள் இருக்கின்றன. இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகம் இப்போது 1,700 கோடி டாலர்கள். அது கணிசமாக அதிகரிப்பதற்கான வாய்ப்பு மிகமிக அதிகம்.

இந்தியா மீதான ஆஸ்திரேலியாவின் இப்போதைய அக்கறைக்குக் காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும், ஆஸ்திரேலிய உற்பத்தியாளர்களுக்கு இந்தியா அளிக்கக்கூடிய மிகப்பெரிய சந்தையும்தான் முக்கியமான காரணங்களாக இருக்கக்கூடும். புகுஷிமா அணு உலை விபத்துக்குப் பிறகு, உலகளாவிய அளவில் அணுசக்தி மின்சாரத் தயாரிப்பு குறைந்து விட்டிருப்பதால், யுரேனியத்திற்கான தேவையும் குறைந்துவிட்டிருக்கிறது. இது ஆஸ்திரேலிய கனிமவள உற்பத்தியாளர்களின் பார்வையை இந்தியாவை நோக்கித் திரும்பச் செய்திருக்கிறது.

தற்போது 20 சிறிய அணு உலைகள்தான் இந்தியாவில் செயல்படுகின்றன. நமது மொத்த மின்சார உற்பத்தியில் வெறும் 2 சதவீதம்தான் அணு உலை மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2032-க்குள் மேலும் 30 அணு உலைகள் நிறுவி 63,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வது என்கிற அரசின் இலக்கை எட்ட வேண்டுமானால், இந்தியாவுக்கும் யுரேனியத்தின் தேவை இருக்கிறது. அதனால், ஆஸ்திரேலியப் பிரதமர் இந்திய விஜயத்திற்கான முக்கியக் காரணம், அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாவதுதான் என்பதில் சந்தேகமே வேண்டாம்.

பிரதமர் டோனி அபோட்டின் விஜயத்திற்குப் பின்னால் வியாபார நோக்கம் மட்டுமல்லாமல் சர்வதேச அரசியலும் இருக்கிறது. சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி உலகிலுள்ள எல்லா நாடுகளையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. அமெரிக்கா உள்ளிட்ட அத்தனை நாடுகளும் பொருளாதார ரீதியாக சீனாவைப் பகைத்துக் கொள்ள முடியாத சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன. சீனாவுக்கு எதிராக இல்லாவிட்டாலும், சீனாவின் மேலாதிக்கம் ஏற்பட்டுவிடாமல் தடுக்கும் விதத்தில் ஆசியாவின் ஏனைய பொருளாதாரங்கள் ஒன்றுபட்டுச் செயல்பட வேண்டும் என்பது அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் அந்தரங்க விருப்பம்.

பிரதமர் நரேந்திர மோடியின் ஜப்பான் விஜயமும், ஆஸ்திரேலியப் பிரதமர் டோனி அபோட்டின் இந்திய விஜயமும் ஜப்பான் - இந்தியா - ஆஸ்திரேலியா என்கிற பலமான மூவர் கூட்டணிக்கு வழிகோலுமானால், அதுவேகூட சீனா மேலாதிக்கம் செலுத்தவிடாமல் தடுக்கக்கூடும் என்பது சர்வதேச எண்ணவோட்டமாக இருக்கிறது.

முன்னாள் ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டதுபோல, "தென் கொரியாவின் சோல், சீனாவின் ஷாங்காய், ஜப்பானின் டோக்கியோவைவிட, ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கும், இந்தியாவின் சென்னைக்கும் இடையேயான நட்புறவும், தொடர்பும், நெருக்கமும் அதிகம்' என்பது உண்மையான கூற்று.

மக்களாட்சி, ஆங்கில மொழிப் பயன்பாடு, வர்த்தகத் தொடர்பு, கல்வி நிலையங்களுக்கு இடையேயான தொடர்பு, எல்லாவற்றிற்கும் மேலாக கிரிக்கெட் விளையாட்டு என்று இரு நாடுகளும் பகிர்ந்து கொள்ளும் பரஸ்பர ஒற்றுமைகள் ஏராளம்.

ராஜீவ் காந்திக்குப் பிறகு, 28 ஆண்டுகள் கழித்துப் பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 உச்சி மாநாட்டிற்காக விரைவில் ஆஸ்திரேலியா செல்ல இருக்கிறார். அவரது விஜயம் இரு நாடுகளுக்கு இடையேயான உறவை மேலும் பலப்படுத்தும் என்று நம்பலாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.