தொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

பேரவலம்!

இதுவரை சந்தித்திராத அளவிலான பேரிடரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எதிர்கொள்கிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் இப்படியொரு மோசமான வெள்ளம் அந்த மாநிலத்தைத் தாக்கியதில்லை.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:43 am

ஆசிரியர்

இதுவரை சந்தித்திராத அளவிலான பேரிடரை, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எதிர்கொள்கிறது. கடந்த அறுபது ஆண்டுகளில் இப்படியொரு மோசமான வெள்ளம் அந்த மாநிலத்தைத் தாக்கியதில்லை. ஏறத்தாழ நான்கு லட்சம் பேர் வீட்டின் கூரையிலும் மொட்டை மாடியிலும் நிவாரணம் வராதா, தாங்கள் காப்பற்றப்பட மாட்டோமா என்று காத்துக் கிடக்கும் அவலநிலை நிலவுகிறது.

முதலில், தொடர்மழையால் ஜம்மு பகுதியில் சில பகுதிகள் மட்டும்தான் பாதிக்கப்பட்டன. இப்போது ஒட்டுமொத்த காஷ்மீர் பள்ளத்தாக்கும், எதிர்பாராத வெள்ளப்பெருக்கால் தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. பருவ மழையின் காரணத்தால் ஜீலம் நதி கரையை உடைத்துக் கொண்டு பெருகிப் பரவியதால், சில பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்புகளின் இரண்டாவது தளம்வரை தண்ணீரில் மூழ்கிக் கிடக்கிறது. மாநிலத்தின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகர் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கிறது.

வெள்ளத்தால் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் போதாதென்று, ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்படுவதால் நிலைமை மேலும் மோசமாகிவிட்டிருக்கிறது. விமான நிலையம், முக்கியமான ராணுவ, நிர்வாக அமைப்புகள், அலுவலகங்கள், மருத்துவமனைகள் எல்லாமே வெள்ளத்தால் சூழப்பட்டிருப்பதால், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவதுகூட இயலாத நிலை காணப்படுகிறது.

இந்தியாவில் வேறு எந்த மாநிலத் தலைநகரும் இதுபோல வெள்ளத்தால் இவ்வளவு மோசமாகப் பாதிக்கப்பட்டது இல்லை.

வெள்ளத்தின் சீற்றம் எல்லைகளைக் கடந்து காஷ்மீரத்தைத் தாக்கி இருக்கிறது. ஜம்மு-காஷ்மீரில் காணப்படுவதைவிட அதிகமான பாதிப்பு, பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்ப் பகுதிகளில் காணப்படுகிறது. பாகிஸ்தானிலுள்ள மேற்குப் பஞ்சாப் பகுதியும் இந்த வெள்ளச் சீற்றத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறது.

திடீர் வெள்ளப்பெருக்குதான் இந்தப் பேரழிவுக்குக் காரணம் என்றாலும், தட்பவெப்ப நிலையைத் துல்லியமாகத் தெரிவித்து எச்சரிக்கும் விண்வெளிக் கோள்கள் போன்ற தொழில்நுட்ப வசதிகள் இருந்தும், இப்படியொரு பேராபத்து ஏற்பட இருப்பது எப்படித் தெரியாமல் போயிற்று என்கிற கேள்வி எழாமல் இல்லை.

இமயமலையிலிருந்து உருவாகும் நதிகளில் அடிக்கடி இதுபோல வெள்ளப் பெருக்குகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து ஏற்பட்டு வரும் நிலையில், ஏன் முறையான எச்சரிக்கை அமைப்புகள் செயல்படுவதில்லை என்று தெரியவில்லை.

ஏறத்தாழ 2,500-க்கும் அதிகமான கிராமங்களும், பல நகரங்களும் முழுமையாக வெள்ளத்தில் மூழ்கி விட்டிருக்கின்றன. அழிந்து போய்விட்ட மானிட உயிர்களும், விலங்குகளும் எத்தனை, நாசமாகிவிட்ட பயிர்களும், உடைமைகளும் எவ்வளவு என்றெல்லாம் கணக்குப் பார்க்கும் நேரமல்ல இது. எப்படி நிவாரணத்தை முடுக்கிவிட்டு எஞ்சி இருப்பவர்களை காப்பாற்றிப் பாதுகாப்பான இடங்களுக்கு இட்டுச் செல்வது, ஏற்பட்டிருக்கும் பேரழிவை எப்படி ஈடுகட்டி அனைவருக்கும் மறுவாழ்வளிப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக இருக்கப் போகிறது. கட்டமைப்பு வசதிகள் முற்றிலுமாகத் தகர்ந்திருக்கும் நிலையில், பழைய நிலைக்கு ஜம்மு-காஷ்மீரை உருவாக்கப் பல லட்சம் கோடி ரூபாய்கள் தேவைப்படப் போகிறது.

இந்தப் பேரிடருக்கு நடுவிலும் ஒரு நம்பிக்கை துளிர்க்கிறது. நிவாரணப் பணிகள் முழுமையாகவும், விரைவாகவும், நேர்மையாகவும் நடைபெற்றால், காஷ்மீர் மக்களின் நம்பிக்கையை இந்தியா பெற முடியும். இயற்கைச் சீற்றத்திற்கு முன்னால், எல்லைகள் செயலற்றுப் போய்விடுகின்றன என்கிற உண்மையை அவர்கள் புரிந்து கொண்டால், அதுவேகூட மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். தங்களுக்கு ஏற்படும் பேரழிவை இந்தியா போன்ற பெரிய தேசத்தால் மட்டுமே எதிர்கொண்டு ஈடுகட்ட முடியும் என்பது புரிந்தால், பிரிவினை கோஷம் வலுவிழந்து விடும்.

அதேபோல, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் வெள்ளச் சீற்றத்தால் ஏற்பட்ட பேரிடரை எதிர்கொள்ள எல்லைகளைக் கடந்து உதவ முன்வந்திருப்பது வரவேற்புக்குரிய மாற்றம். 2005இல் இந்தியா அளித்த நிவாரணப் பொருள்களையும், 2010இல் இந்தியா அளித்த நிவாரண நிதியையும் நிராகரித்த பாகிஸ்தான், இப்போது நேசக்கரம் நீட்ட முன்வந்திருப்பதும், அனுதாபத்தைப் பங்கிட்டுக் கொள்ளத் தயாராகி இருப்பதும், வெள்ளச் சேதத்துக்கு இடையில் ஏற்படும் ஆறுதல்.

முன்பு உத்தரகண்டில் கங்கை. இப்போது காஷ்மீரத்தில் ஜீலம். நதிகள் பெருக்கெடுத்துப் பேரழிவை ஏற்படுத்துகின்றன என்பதல்ல உண்மை. இயற்கையை நாம் சீண்டி விளையாட முற்பட்டிருப்பதால், அது வெள்ளப் பெருக்காகச் சீற்றம் கொள்கிறது. இதைப் புரிந்து கொள்ளாமல் இருப்பதுதான் பேரவலம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.