சில நாள்களுக்கு முன்பு மத்தியப் புலனாய்வுத் துறையை "ஆட்சியாளர்களின் கூண்டுக் கிளி' என்று உச்சநீதிமன்றம் வர்ணித்தபோது நாடு தழுவிய அதிர்ச்சி அலை வீசியது. முக்கியமான வழக்குகளின், அதிலும் குறிப்பாக, ஆட்சியாளர்கள் தொடர்பான 2ஜி அலைக்கற்றை, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு போன்றவற்றில் நடந்த முறைகேடுகள் பற்றிய விசாரணை தொடர்பான வழக்குகளின் கோப்புகளை, நீதிமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன்பாகவே பிரதமர் அலுவலகத்திற்கும், சட்ட அமைச்சகத்திற்கும் மத்தியப் புலனாய்வுத் துறை (ம.பு.து.) அளித்தது தொடர்பாக உச்சநீதிமன்றம் தெரிவித்த கருத்து அது.
இப்போது அதைவிட அதிர்ச்சி அளிக்கும் செய்தி ஒன்று உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் பல முக்கியமான நபர்களை அந்த அமைப்பின் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தனது வீட்டில் சந்தித்திருக்கிறார் என்பது தான் அந்தக் குற்றச்சாட்டு. பொதுநல வழக்குகளுக்கான மையத்தின் சார்பில் வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கும், மத்தியப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் புதுதில்லி ஜன்பத் 2-ஆம் இலக்க இல்லத்தின் கடந்த மே 2, 2013 முதல் ஆகஸ்ட் 16, 2014 வரையிலேயே 300 பக்கங்களுக்கும் அதிகமான விருந்தினர்கள் வருகைப் பதிவு அதிர்ச்சி அளிக்கிறது.
மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை வளையத்தில் இருக்கும் நபர்களும், பரபரப்பான பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களும் மட்டுமல்ல, அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என்று பலரும் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை சந்தித்திருப்பதாக பிரசாந்த் பூஷணால் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் வருகையாளர்கள் பதிவேடு தெரிவிக்கிறது. மத்தியப் புலனாய்வுத் துறை இயக்குநரை, வழக்கில் தொடர்புடையவர்கள் அலுவலகத்தில் சந்திப்பது என்பதை ஏற்றுக் கொள்ளலாம். அவர்கள் இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவை அவரது இல்லத்தில், அதுவும் ஒரு முறையல்ல பல தடவை சந்திக்க வேண்டிய அவசியம் என்ன என்கிற கேள்வியை அது எழுப்புகிறது.
வழக்குரைஞர் பிரசாந்த் பூஷண் தாக்கல் செய்திருக்கும் வருகைப் பதிவேடே போலியானது என்றும், தனது இல்லத்தில் எந்தவித வருகைப் பதிவேடும் கிடையாது என்றும் இயக்குநர் ரஞ்சித் சின்ஹா தெரிவித்திருப்பதை ஏற்றுக் கொள்ளமுடியவில்லை. மத்திய புலனாய்வுத் துறையின் இயக்குநர் என்பதாலும் இந்திய - திபெத்திய எல்லைப்புற ராணுவத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர் என்பதாலும் அவரது இல்லத்துக்கு வரும் விருந்தினர்கள் நிச்சயமாகக் கண்காணிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைச் சொல்லியா தெரிய வேண்டும்?
சின்ஹா மத்தியப் புலனாய்வுத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றது முதல், முந்தைய அரசு, ஆட்சியாளர்கள் தொடர்புடைய வழக்குகளில் எல்லாம் உச்சநீதிமன்றம் தலையிட்ட பிறகுதான் மத்திய புலனாய்வுத் துறை இயங்கவே தொடங்கியது. உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய அறிக்கைகளை பிரதமர் அலுவலக அதிகாரிகளுக்கும், சட்ட அமைச்சருக்கும் காட்டி அவர்களது திருத்தங்களையும், ஒப்புதலையும் பெற்ற பெருமை இயக்குநர் சின்ஹா தலைமையிலான மத்திய புலனாய்வுத் துறைக்கு மட்டுமே உண்டு.
நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில், விசாரணையை முடுக்கி விடுவதற்குப் பதிலாக அதை முடக்குவதற்கு ஆவன செய்தவர் இயக்குநர் சின்ஹா என்கிற ஐயப்பாடு பரவலாகவே எழுந்திருக்கிறது. அதனால்தான், "பொதுப் பிரச்னை' என்கிற தன்னார்வத் தொண்டு நிறுவனம், நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான விசாரணையை முடக்கியதில் இயக்குநர் சின்ஹாவின் பங்கு பற்றி சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்திருக்கிறது.
தனது வீட்டிலிருந்து பெறப்பட்டதாகக் கூறப்படும் வருகைப் பட்டியலே போலி என்று கூறிய இயக்குநர் ரஞ்சித் சின்ஹா, அந்த வருகைப் பட்டியலில் காணப்படும் பெயர்களை ஊடகங்கள் வெளியிடுவதைத் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கையை உச்சநீதிமன்றத்தில் தனது வழக்குரைஞர் மூலம் வைத்தார். நீதிபதிகள் ஹெச்.எல். தத்து, எஸ்.ஏ. போப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு அவரது கோரிக்கையை நிராகரித்தது மட்டுமல்ல, ஊடகங்களின் செயல்பாடுகளில் தாங்கள் தலையிட முடியாது என்றும் மறுத்து விட்டது.
இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவின் செயல்பாடுகளால் மத்திய புலனாய்வுத் துறையின் மீது இருக்கும் கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தகர்கிறது. வருகைப் பதிவு உண்மை என்றால், குற்றம்சாட்டப்பட்டவர்களையும், விசாரணை வளையத்தில் உள்ளவர்களையும் வீட்டிற்கு அழைத்துக் குறைகேட்கும் பெரிய மனது படைத்த புலனாய்வுத் துறை அதிகாரி, உலகிலேயே இயக்குநர் ரஞ்சித் சின்ஹா ஒருவராகத்தான் இருக்க முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

