உச்சநீதிமன்ற நீதிபதியாகத் தமிழர் ஒருவர் நியமிக்கப்படும்போது மகிழ்ச்சியும், தமிழர் ஒருவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும்போது பெருமகிழ்ச்சியும் அடையும் நாம், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த, ஒட்டுமொத்தத் தமிழகத்தின் பெருமதிப்புக்கும், மரியாதைக்கும் உரிய ஒருவர், மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையைக் கிளப்பி, தேசிய அளவிலான விவாதமாக்கப்பட்டிருப்பதில் வருத்தமும், வேதனையும் அடைகிறோம்.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம் கேரள ஆளுநராக இன்று பதவி ஏற்க இருக்கிறார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எட்டு மாதம் பதவி வகித்து, கடந்த ஏப்ரல் மாதம் பதவி ஓய்வு பெற்ற நீதிபதி பி. சதாசிவம் பல வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார். அதேநேரத்தில், தனது பதவிக்காலம் முடிவடையப் போகும் நேரத்தில், இப்போதைய பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு எதிரான ஷோரபுதீன் ஷேக் போலி என்கவுன்ட்டர் வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டாவது முதல் தகவல் அறிக்கையையும், குற்றப்பத்திரிகையையும், தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வுதான் ரத்து செய்தது எனும்போது, இந்த நியமனத்திற்குப் பின்னால் அரசியலும் பேரமும் நடந்திருக்கக் கூடும் என்கிற ஐயப்பாடு எழுந்திருப்பதில் வியப்படைய ஒன்றுமில்லை.
உச்சநீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவத்தின் நியமனம் இரண்டு முக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. பொறுப்பான பதவி வகித்த ஒருவர் ஓய்வு பெற்று ஆறு மாதங்களுக்குள் இன்னொரு அரசியல் சட்ட அங்கீகாரமுள்ள பதவியில் "நியமிக்கப்படுவது' சரியா என்பது முதலாவது கேள்வி. மத்திய, மாநில உறவுகள் பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நீதிபதி சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைக்கு மாறாக, மாநில அரசைக் கலந்தாலோசிக்காமல் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படுவது சரியா என்பது இரண்டாவது கேள்வி.
ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகளை ஆளுநராக நியமிப்பது என்பது, மறைமுகமாக நீதித் துறையில் அரசியல் தலையீட்டுக்கு வழிகோலும் என்பதால், சுதந்திரம் அடைந்தது முதலே அது தவிர்க்கப்படுகிறது. இதற்கு முன்னால் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் ஒரே ஓர் உச்சநீதிமன்ற நீதிபதி, தமிழகத்தின் ஆளுநராக இருந்த பாத்திமா பீவி மட்டுமே. அவரும்கூடப் பதவி ஓய்வு பெற்று ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகுதான் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதிகளான நீதிபதி வி.என். காரே, நீதிபதி ஒ.எம். அஹமதி, நீதிபதி ஜி.பி. பட்நாயக் ஆகியோர், நீதிபதி பி. சதாசிவத்தை ஆளுநராக மத்திய அரசு நியமித்திருப்பதைக் கண்டித்திருப்பது, இது மரபு மீறல் என்பதால் மட்டுமல்ல,
இப்படிப்பட்ட நியமனங்கள் தார்மிகத் தவறு என்பதாலும், வருங்காலத்தில் ஆட்சியாளர்களுக்கு சாதகமாகத் தீர்ப்புகளைப் பெற இதுபோன்ற நியமனங்கள் வழிகோலும் என்பதாலும்தான்.
குடியரசுத் தலைவருக்குப் பதவி பிரமாணம் செய்து வைக்கும் உயரிய அரசியல் சட்டப் பதவி, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியுடையது. அப்படிப்பட்ட பதவியை வகித்த ஒருவர் குடியரசுத் தலைவராகவோ, குடியரசுத் துணைத் தலைவராகவோ தேர்ந்தெடுக்கப்படுவதில் தவறில்லை. தேர்தலில் நின்று வெற்றி பெற்று பிரதமராகவோ, முதல்வராகவோ பதவி வகிப்பதிலும் தவறில்லை. ஆனால், ஆளுநர், அயல்நாட்டுத் தூதர் போன்ற "நியமன' பதவிகளை
வகிப்பது என்பது தார்மிக ரீதியாகத் தவறு என்பதால்தான், நீதிபதி பி. சதாசிவத்தின் நியமனம் விமர்சிக்கப்படுகிறது.
1988-இல் தாக்கல் செய்யப்பட்ட மத்திய - மாநில உறவு பற்றிய சர்க்காரியா கமிஷன் அறிக்கை, மாநில அரசின் கலந்தாலோசனை அல்லது ஒப்புதலுடன்தான் மத்திய அரசால் ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. நீதிபதி சதாசிவத்தின் ஆளுநர் நியமனம் மாநில அரசின் ஒப்புதலையோ, கலந்தாலோசனையையோ பெற்று அறிவிக்கப்பட்டதல்ல.
நியமனப் பதவிகளை ஏற்றுக் கொள்பவர்கள், அந்த நியமனம் சர்ச்சை ஏற்படுத்துவதாக அமையாமல் பார்த்துக் கொள்வதும், பதவி வகிக்கும்போது சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளாமல் காத்துக் கொள்வதும் அவசியம். இதெல்லாம் நன்றாகவே தெரிந்து தெளிந்த, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவம், எப்படி, எதற்காக ஆளுநர் பதவியை ஏற்றுக் கொண்டார் என்பது புதிராக இருக்கிறது. நீதிபதியின் முடிவு என்பதால் அதற்கு ஏதாவது காரணம் இல்லாமலா இருக்கும்?
ஆளுநராகப் பதவி இறக்கம் அடைந்திருந்தாலும்கூட, தமிழர் என்கிற ஒரே காரணத்துக்காக உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பி. சதாசிவத்துக்கு நமது வாழ்த்துகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் எப்போது?

சுவாமி மலையில் சித்திரைத் திருவிழா! கொடியேற்றத்துடன் துவக்கம்!
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வெளியீட்டுத் தேதி இதுவா?
தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

