மனோகர் பாரிக்கரை முழுநேர ராணுவ அமைச்சராக்கி இருப்பதன் மூலம், இந்தியப் பாதுகாப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி எந்த அளவுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறார் என்பது தெரிகிறது. பாதுகாப்பு அமைச்சராக ராணுவத் துறையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது முதல் சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கியிருக்கிறார் அமைச்சர் மனோகர் பாரிக்கர்.
ராணுவத் தளவாட உற்பத்தியில் தனியார் முதலீட்டுக்கும், அன்னிய நேரடி முதலீட்டுக்கும் வழிகோலி இருப்பது சற்று நெருடலாக இருந்தாலும், மாறி விட்டிருக்கும் உலகச் சூழலில், ராணுவத் தளவாடங்கள் பற்றிய தொழில்நுட்பங்களைப் பெறுவதற்கு அதைவிடச் சுலபமான சிறந்த வழியில்லை என்பதால் ஏற்றுக் கொண்டாக வேண்டிய நிர்பந்தம். மேலும், உள்நாட்டில் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது என்பதை மோடி அரசு கொள்கையாகவே வகுத்துக் கொண்டிருப்பதால், அதுபற்றி விமர்சிப்பதில் அர்த்தமும் இல்லை.
எல்லையோரப் பாதுகாப்பு, காலாட் படையின் எண்ணிக்கையையும், ஆயுத பலத்தையும் கணிசமாக அதிகரிப்பது போன்றவை எந்த அளவுக்கு முக்கியமோ அதைப் போலவே இந்தியக் கடற்படையை பலப்படுத்தவும், நவீனப்படுத்தவும் வேண்டியதும் அவசியம்
என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. குறிப்பாக, வங்க தேசம், இலங்கை, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் சீனாவின் துறைமுக நிர்மாணம், போர்க் கப்பல்கள் வந்து போவது ஆகியவை அதிகரித்திருக்கும் நிலையில், நாம் இதில் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியக் கடற்படை தொடர்ந்து விபத்துகளை சந்தித்துக் கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னால் விசாகப்பட்டினம் கடல் பகுதியில், இந்தியக் கடற்படையின் மீட்புக் கப்பல் ஒன்று மூழ்கியது. ஒரு கடற்படை வீரர் இறந்திருக்கிறார். நான்கு பேர் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த விபத்து எப்படி, ஏன் நிகழ்ந்தது என்பது தெரியவில்லை. இதே விசாகப்பட்டினத்தில் சிறிது நாள்களுக்கு முன்னால் ஐ.என்.எஸ். கோரா என்கிற ஏவுகணைக் கப்பல், சரக்குக் கப்பலால் மோதப்பட்டு சற்று சேதமடைந்தது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்தியக் கடற்படையில் தொடர்ந்து விபத்துகள். மும்பையில் ஐ.என்.எஸ். சிந்து ரக்ஷக் என்கிற நீர்மூழ்கிக் கப்பல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 14 அன்று வெடித்துச் சிதறியது. அதைத் தொடர்ந்து இதுவரை 15 விபத்துகள் நேர்ந்திருக்கின்றன. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஐ.என்.எஸ். சிந்து ரத்னா என்கிற நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானபோது, தார்மிகப் பொறுப்பேற்று அப்போதைய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் டி.கே. ஜோஷி பதவி விலகினார்.
புதிதாகப் பொறுப்பேற்ற தலைமைத் தளபதி ஆர்.கே. தோவான் விசாரணைக்கு உத்தரவிட்டு, விபத்துக்கான காரணங்களை அலசி ஆராய பணித்தார். அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. ஆயினும், அதனால் எந்தவித மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கின்றன.
நீர்மூழ்கிக் கப்பல்கள் என்றில்லை, எல்லா வகையிலான போர்க் கப்பல்களிலும் ஏதாவது பிரச்னை இருந்த வண்ணம் இருக்கிறது. முந்தைய தலைமைத் தளபதி அட்மிரல் ஜோஷியின் கூற்றுப்படி, கடற்படைக்குத் தேவையான உதிரிப் பாகங்களையும், தளவாடங்களையும் வாங்குவதற்கும், அன்றாடப் பராமரிப்பு வேலைகளை மேற்கொள்வதற்கும்கூட அவரால் முடியாத நிலைமை இருந்தது என்று தெரிகிறது. இதற்குக் காரணம், பாதுகாப்பு அமைச்சகத்தில் இருக்கும் அதிகாரிகள், ராணுவத்தினரின் கரங்களைக் கட்டிப் போடுவதுதான். போதிய நிதியுதவியைத் தக்க நேரத்தில் வழங்காமல் போனதால் ஏற்படும் பிரச்னைகள்தான் இவை என்று தெரிகிறது.
ஏறத்தாழ பெரிதும் சிறிதுமாகவும், நல்ல தொழில்நுட்பத்துடனும், பழைய தயாரிப்பாகவும் 180 போர்க் கப்பல்கள் இந்தியக் கடற்படையில் இருக்கின்றன. இவற்றுக்கான உதிரிப் பாகங்கள் பெறுவதிலும், பராமரிப்பை உறுதிப்படுத்துவதிலும்கூடச் சிக்கல் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்து மகா சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்தும், செலுத்த வேண்டிய இந்தியக் கடற்படை பலவீனப்பட்டு வருவது ஆபத்து.
இந்தியக் கடற்படையை, பல சிறிய நாடுகள் வழிகாட்டியாகவும் பயிற்சிக்கு முன்னுதாரணமாகவும் கொண்டிருக்கின்றன. தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற விபத்துகள் இந்தியக் கடற்படையின் மரியாதையைக் குலைப்பதுடன், இந்தியாவையே பலவீனமாக ஏனைய நாடுகள் எடை போட வைத்துவிடும். குறிப்பாக, இலங்கையில் சீன நீர்மூழ்கிக் கப்பல் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில், கடற்படையை வலுப்படுத்துவதும், அதன் மரியாதையைக் காப்பாற்றுவதும் பாதுகாப்பு அமைச்சரின் தலையாய பணியாக இருத்தல் வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

