/

வேண்டாம், வேண்டவே வேண்டாம்!

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய உருப்படியான சட்டங்களில் ஒன்று நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளித்தல், மறு குடியிருத்தல் ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையையும், முறையான இழப்பீட்டையும் உரிமையாக்கும் சட்டம்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:41 am

ஆசிரியர்

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிறைவேற்றிய உருப்படியான சட்டங்களில் ஒன்று நிலம் கையகப்படுத்தல், மறுவாழ்வளித்தல், மறு குடியிருத்தல் ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையையும், முறையான இழப்பீட்டையும் உரிமையாக்கும் சட்டம். நீண்ட விவாதத்திற்குப் பிறகும், காலதாமத்திற்குப் பிறகும் 1894இல் இயற்றப்பட்ட நிலம் கையகப்படுத்தும் சட்டம் மாற்றப்பட்டு இந்த மாற்றுச் சட்டம் 2013 செப்டம்பரில் நிறைவேற்றப்பட்டது. 2014 ஜனவரியில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, முந்தைய பிரிட்டிஷ் காலனிய அரசும், சுதந்திர இந்தியாவில் அமைந்த வெவ்வேறு அரசுகளும் நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1894இன் அடிப்படையில், அரசின் தேவைக்கு என்கிற போர்வையில் வலுக்கட்டாயமாக தனியாரிடம் இருந்து நிலங்களை அபகரித்துக் கொண்டன. பொது நன்மைக்காக என்கிற பேரில் கையகப்படுத்தப்பட்ட பல ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் முறையாக பயன்படுத்தப்பட்டனவா என்பதே சந்தேகம். அப்படி கையகப்படுத்தப்பட்டு, பயன்படுத்தாமல் தரிசாகப் போடப்பட்ட இடங்கள் புறம்போக்கு நிலங்களாகி, ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆளான சம்பவங்களும் ஏராளம் ஏராளம்.

நியாயமான வளர்ச்சிப் பணிகளுக்கு அரசால் நிலம் கையகப்படுத்தப்படுவதில் யாருக்கும் எதிர்ப்பு இருக்க முடியாது. ஆனால், வளர்ச்சிப் பணிக்கு என்று குறைந்த இழப்பீட்டை வழங்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடித்துப் பெறப்படும் நிலங்கள், தனியார் தொழில் நிறுவனங்களுக்கும், குடியிருப்புக் கட்டுமான நிறுவனங்களுக்கும் வழங்கப்படுவதைத்தான் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதன் காரணமாகத்தான் நிலம் கையப்படுத்துதல் தொடர்பாக, விவசாயிகளுக்கும், சொத்தின் உடமையாளர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் இழப்பீடும், வாழ்வாதார உறுதியும் அளிக்கும் விதத்தில் புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

2014 ஜனவரியில் நடைமுறைக்கு வந்த இச்சட்டத்தின்படி, அதிகரித்த இழப்பீடு உரிமையாளருக்கு வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டது. இதிலும் கூட, பரிந்துரைக்கப்பட்ட நிலத்தின் மதிப்பில் ஆறு மடங்கு இழப்பீடு என்பது மூன்று மடங்காகக் குறைக்கப்பட்டது. பாசன வசதியுடன் கூடிய விளைநிலங்களைக் கையகப்படுத்தக் கூடாது என்கிற நிபந்தனையும் உள்படுத்தப்படவில்லை. அதேபோல, விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும்போது, அவை

அரசின் சொந்த பயன்பாட்டுக்காக அல்லாமல் தனியார் தொழில் நிறுவனங்களுக்கோ, குடியிருப்புக் கட்டுமான நிறுவனங்களுக்கோ தரப்படக்கூடாது என்கிற கோரிக்கையும் அதில் சேர்க்கப்படவில்லை.

இப்படிப்பட்ட நிலையில்தான் கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை கடந்த ஜனவரியில் நிறைவேற்றியது என்றால், இப்போது பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு, இந்தச் சட்டத்திலுள்ள பல வரைமுறைகளை மேலும் தளர்த்த நெருக்கடி தரப்படுவதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன.

இந்தியாவில் வனப் பகுதியின் அளவு சுருங்கி வருகிறது. அதேபோலத்தான் விளைநிலங்களின் பரப்பளவும். கடைசியாகப் பெறப்பட்ட புள்ளிவிவரத்தின்படி, 2007 முதல் 2011 வரையிலான நான்கு ஆண்டுகளில் மட்டும் ஏறத்தாழ 20 மாநிலங்களில் 7,90,000 ஹெக்டேர் விளைநிலங்கள் குடியிருப்புகளாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறியுள்ளன. இதனால் இந்தியாவின் உணவு உற்பத்தி உடனடியாக பாதிக்கப்படாமல் போனாலும், காலப்போக்கில் இந்தியா மிகப்பெரிய உணவுப் பொருள் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடும்.

அரசு, நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அது தொழிற்சாலைக்கானாலும், குடியிருப்புகள் கட்டுவதற்கானாலும் எதுவாக இருந்தாலும், பல குடும்பங்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழக்க நேரிடுகின்றன. அவர்கள் குடியேற மாற்று ஏற்பாடு செய்யப்படுவதும், அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படுவதும், நிரந்தரமாக அவர்கள் பறி கொடுக்கும் பூமிக்குக் கணிசமான இழப்பீடு வழங்குவதும் இன்றியமையாதது. அதை விட்டுவிட்டு, நிலத்தை நிரந்தரமாகத் தங்கள் வசம் எடுத்துக் கொள்ள இருக்கும் தனியார் நிறுவனங்களுக்கு, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்து அந் நிலங்களைப் பெற்றுத் தருவது நல்லரசின் அடையாளமாக இருக்காது.

ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால், தொழில்துறையினரும், தனியார் குடியிருப்பு வசதி நிறுவனங்களும் 2014 ஜனவரியில் நடை

முறைக்கு வந்திருக்கும் நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை நரேந்திர மோடி அரசுக்கு நெருக்கடி அளித்து நீர்த்துப் போக வைக்கத் துடிக்கின்றனர். குறைந்த விலையில் நிலங்களைக் கையகப்படுத்தி, நிறைய லாபம் அடைய நினைக்கும் அவர்களின் பேராசைக்கு மத்திய அரசு துணை போய்விடக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.