அரசுமுறைப் பயணமாக முதலில் பயணிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி அண்டை நாடான, அதுவும் இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகவும் சிறிய நாடான பூடானைத் தேர்ந்தெடுத்திருப்பது, அவரது வெளியுறவுக் கொள்கையின் போக்கை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. புதிதாகப் பதவி ஏற்றிருக்கும் பிரதமரின் முதல் அரசுமுறைப் பயணத்தை உலகிலுள்ள ஏனைய நாடுகள் அனைத்துமே கூர்ந்து கவனிக்கும் என்பது தெரிந்து, திட்டமிட்டுதான் பூடானைப் பிரதமர் மோடி தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
1958ஆம் ஆண்டு அன்றைய பூடான் மன்னர் ஜிக்மே தோர்ஜி வாங்சுக் இந்தியப் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேருவுக்கு அழைப்பு விடுத்ததும், நேரு யாக் எருமையின் மீதமர்ந்து பூடான் தலைநகர் திம்புவுக்குச் சென்றதும் இப்போதும் சரித்திரமாகப் பேசப்படுகிறது. அப்போது பண்டித நேருவின் பூடான் விஜயம் ஏற்படுத்திய எதிர்பார்ப்புகளை, இப்போதைய பிரதமர் மோடியின் விஜயமும் ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளாகவே, இந்திய - பூடான் உறவு சுமுகமாக இருக்கவில்லை. கடந்த ஆண்டு குடியரசு தின விழாவில் பங்கேற்க இந்திய அரசு முதலில் ஓமான் சுல்தானுக்குத்தான் அழைப்பு விடுத்திருந்தது. கடைசி நேரத்தில் அவர் தனது பயணத்தை ரத்து செய்தபோது, அவசர அவசரமாகவும் வேண்டா வெறுப்பாகவும்
அப்போதைய மன்மோகன் சிங் அரசு பூடான் மன்னர் ஜிக்மே கேஸர் நாம்கியால் வாங்சுக்கை அழைத்துப் பங்கேற்கச் செய்ததை பூடானில் பலரும் தங்கள் தேசத்திற்கு இழைக்கப்பட்ட அவமானமாக கருதுகிறார்கள். இது இந்தியாவின் "பெரியண்ணன் போக்கு' என்கிற விமர்சனம் வெளிப்படையாகவே எழுந்தது.
பூடானின் முந்தைய பிரதமர் ஜிக்மே தின்லேயும் இந்திய அரசுடன் சுமுகமாக உறவை மேற்கொள்ளவில்லை. அவர் வெளிப்படையாகவே சீனாவுடன் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதில் அக்கறை காட்டினார். இதெல்லாம் போதாதென்று, பூடானில் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த நாட்டின் பொருளாதாரத்தை நிலைகுலையச் செய்யும் விதத்தில் இந்தியா பூடானுக்கு அளித்து வந்த பெட்ரோலிய எண்ணெய் மானியத்தை ரத்து செய்தது.
நல்லவேளையாக இந்தியாவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டிருப்பதைப் போல, பூடானிலும் மாற்றம் ஏற்பட்டு, இந்திய ஆதரவாளரான பிரதமர் ஷெரிங் தோப்கே ஆட்சியைப் பிடித்திருப்பது இந்திய - பூடான் உறவு பழைய நிலைபோல வலுவடைய வழிகோலும் என்று நம்பலாம். பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட சுவிட்சர்லாந்து போன்ற சிறிய நாடாக இருந்தாலும், பூடானின் நட்பு என்பது இந்தியாவுக்குப் பல வகைகளில் இன்றியமையாதது.
இந்தியாவைப் போலவே பூடானுக்கும் சீனாவுக்கும் இடையிலும் எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. ஏறத்தாழ இரண்டு நாடுகளுக்கும் இடையே 470 கி.மீ. நீள எல்லை நிலவுகிறது. 1949இல், "திபெத் என்கிற சீனாவின் உள்ளங்கையை ஒட்டி இருக்கும் விரல்கள்தான் லடாக், நேபாளம், சிக்கிம், பூடான், அருணாசலப்பிரதேசம் ஆகியவை' என்று மா சே துங் கூறியது முதலே, இந்த நாடுகள் சீனாவால் தங்களது சுதந்திரம் பறிபோகாமல் இருக்க அண்டை நாடான இந்தியாவை அண்டி பாதுகாப்புத் தேட முற்பட்டன.
பூடானின் எல்லைப் பகுதிகளை சீனா அத்துமீறி ஆக்கிரமித்துக் கொள்ளத் தொடங்கி இருக்கிறது. சும்பி பள்ளத்தாக்கை சீனா தனது கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக் கொண்டு விட்டால், பூடான், திபேத், சிக்கிம் இணையும் எல்லைப் பகுதிக்கும், வடகிழக்கு மாநிலங்களை இந்தியாவுடன் இணைக்கும் சிலிகுரி நிலப்பரப்பு இணைப்புக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக அது மாறிவிடும். அதனால் பூடானுடன் நட்புறவு என்பது இந்தியாவின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது.
பூடானில் நீர்மின்சக்தி உற்பத்திக்கான சாத்தியம் மேலதிகமாக இருக்கிறது. ஏற்கெனவே நான்கு நீர்மின்சக்தி நிலையங்கள் இந்திய உதவியுடன் நிறுவப்பட்டு அதிலிருந்து 1,416 மெகாவாட் மின்
சாரம் இந்தியாவுக்குத் தரப்படுகிறது. பிரதமர் மோடி புதிதாக ஒரு நீர்மின்நிலையத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். பூடானின் உதவியுடன் ஏறத்தாழ 24,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யத் திட்டங்கள் தயாராக இருக்கின்றன. இந்தியாவின் கிழக்கு மாநிலங்களின் மின் தேவையை அது கணிசமாகப் பூர்த்தி செய்யும்.
அண்டை நாடுகளுடன் சுமுகமான உறவை வலுப்படுத்திக் கொண்ட பிறகு, சர்வதேச அரசியல் பற்றி சிந்திக்கும் நரேந்திர மோடியின் புத்திசாலித்தனம் பாராட்டுக்குரியது. ஏற்கெனவே, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள்
சீனாவின் நட்பு நாடுகளாக இருக்கும் நிலையில் பூடானை மையப்படுத்தித் தனது காயை நகர்த்தி இருக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஆட்டம் இப்போதுதான் தொடங்கி இருக்கிறது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே தேர்தல் பணியில் இருந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரணம்

முதல்வர் வேட்பாளர்களின் தொகுதிகளில் வாக்கு சதவீதம் எவ்வளவு?

கோவை கணியூரில் வாக்களித்தவர்களுக்கு மரக்கன்றுகள்: மக்களிடையே பெரும் வரவேற்பு!

அந்தியூரில் விரலில் வைக்கப்பட்ட ‘ஸ்டாம்ப் பேடு’ மை!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

