விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

தாய்மொழி தவிர்க்கப்படுதல் கூடாது!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 22 பதவிகளுக்கான "தொகுதி 1' முதல் நிலைத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திறனறிவுத் தேர்வு முறைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:02 am

ஆசிரியர்

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.) நடத்தும் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 22 பதவிகளுக்கான "தொகுதி 1' முதல் நிலைத் தேர்வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள திறனறிவுத் தேர்வு முறைக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. குறிப்பாக, இந்தத் தேர்வை எழுதும் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் தில்லியில் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இளைஞர்களின் இந்தத் தொடர் போராட்டம் காரணமாக, இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஏற்கெனவே ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும், இந்தப் பிரச்னை குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு தனது அறிக்கையை மத்திய அரசிடம் அளித்துள்ளதாகத் தெரிகிறது. இதன் அடிப்படையில், இந்தப் பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என உள் துறை அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

தொகுதி 1 பதவிகளுக்கான இந்தத் தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மூன்று கட்டங்களைக் கொண்டதாகும். முதல்நிலைத் தேர்வில் கடந்த 2010 வரை பொது அறிவியல், விருப்பப் பாடம் என இரண்டு வகையான கேள்வித் தாள்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.

ஆனால், கடந்த 2011-இல் விருப்பப் பாடத்துக்குப் பதிலாக திறனறிவுத் தாள் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில், பொது அறிவியல் தாளில் 100 கேள்விகளுக்கு 200 மதிப்பெண்களும், திறனறிவுத் தேர்வில் 80 கேள்விகளுக்கு 200 மதிப்பெண்களும் என மொத்தம் 400 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. கொடுக்கப்படும் விடைகளில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்து குறியீடு செய்யும் விதத்திலேயே வினாக்கள் அமைந்திருக்கும்.

பொது அறிவியல் தாளில் அனைத்து அறிவியல் பாடங்கள், தொழில்நுட்பம், சமூக அறிவியல் ஆகியவற்றிலிருந்து கேள்விகள் கேட்கப்படுகின்றன. திறனறிவுத் தாளில் தர்க்கவாதம், அறிவுசார் திறமையைச் சோதிக்கும் வகையிலான கேள்விகள் கேட்கப்படுகின்றன. இந்த இரு கேள்வித் தாள்களும் ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே அமைந்திருக்கும்.

ஆனால், ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளை அப்படியே கணினியில் உள்ளீடு செய்து ஹிந்தியில் மொழி மாற்றம் செய்து கேள்வித் தாள் வழங்கப்படுவதாகவும், இந்த மொழி மாற்றம் புரிந்து கொள்ளும் விதத்தில் இல்லாததால் தவறாக விடையளிக்க நேருவதாகவும் ஹிந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த தேர்வெழுதும் இளைஞர்கள் புகார் கூறுகின்றனர். ஆனால், தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் ஆங்கிலத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குத்தான் விடை அளித்தாக வேண்டும்; இவர்களுக்கு தாய் மொழியில் கேள்வித் தாளைப் பெறும் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதையும் மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேலும், திறனறிவுத் தாளில் கேட்கப்படும் பெரும்பாலான கேள்விகள் ஆங்கிலத்தில் புலமை பெற்ற நகர்ப்புற மாணவர்கள் மட்டுமே பதிலளிக்கக் கூடிய விதத்தில் இருப்பதாகவும், இதனால் ஆங்கில மொழிப் புலமை குறைந்த கிராமப்புற மாணவர்கள் இந்தத் திறனறிவுத் தாளை எதிர்கொள்வதில் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது. அதோடு, முதல்நிலைத் தேர்வில் தவறான விடை அளித்தால் மதிப்பெண்ணைக் குறைத்துப் போடும் வழிமுறையும் பின்பற்றப்படுகிறது. அதாவது, மூன்று கேள்விகளுக்கு தவறான பதில் அளித்தால், சரியாக விடையளித்த ஒரு கேள்விக்கான மதிப்பெண்ணை இழக்க நேரிடும்.

இத்தகைய நடைமுறையானது ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட தலைசிறந்த தொழில் கல்வி நிறுவனங்களில் படித்து வெளியேறும் மாணவர்களுக்குச் சாதகமாகவும், கிராமப்புற பின்னணியைக் கொண்ட மாணவர்களுக்கு எதிராகவும் உள்ளது என்ற குற்றச்சாட்டும் பரவலாக முன்வைக்கப்படுகிறது.

பொதுவாக, ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்கள் அறிவாளிகள் என்ற மாயத் தோற்றம் நம்மில் பலருக்கும் உள்ளது. ஆனால், அறிவார்ந்த செயல்பாட்டுக்கும், மொழிப் புலமைக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை நாமும், நம்மை ஆள்பவர்களும் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

அதோடு, பல்வேறு மொழிகள் பேசும் மக்களைக் கொண்ட இந்தியாவில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட முக்கியப் பதவிகளுக்கான தொகுதி 1 தேர்வு வினாக்கள் ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே இருக்கும் என்பது எந்தவிதத்திலும் நியாயமாகாது. இந்தத் தேர்வு வினாக்கள் அட்டவணை மொழிகள் அனைத்திலும் தயாரிக்கப்பட வேண்டும். இதன்மூலமே, இந்தத் தேர்வை எழுதும் அனைத்துப் பகுதி இளைஞர்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும். திறமைசாலிகள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், திறமையைத் தீர்மானிப்பது ஒருவரது ஆங்கிலப் புலமையாக இருக்கக் கூடாது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.