பாடம் படிக்கவில்லை!
கடந்த 2004, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணம், ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி பலியான துயரச் சம்பவ வழக்கின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது.


கடந்த 2004, ஜூலை 16-ஆம் தேதி கும்பகோணம், ஸ்ரீ கிருஷ்ணா தொடக்கப் பள்ளியில் நடந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் கருகி பலியான துயரச் சம்பவ வழக்கின் தீர்ப்பு வெளியாகி இருக்கிறது. இத்தனை பேர், அதிலும் பிஞ்சுக் குழந்தைகள் கருகிப் பலியான ஒரு வழக்கில், தீர்ப்பு வழங்கப் பத்தாண்டு தாமதமா என்கிற எரிச்சலும் கோபமும் வராமல் இல்லை. ஆனாலும், 2014 ஜூலை 30-ஆம் தேதி அளிக்கப்பட்டிருக்கும் தீர்ப்பு, தீயினால் இறந்த குழந்தைகளுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நியாயம் வழங்கியிருக்கிறது என்பது சற்று ஆறுதல் அளிக்கிறது.
குற்றம் சாட்டப்பட்ட 21 பேரில், பள்ளி ஆசிரியைகள் உள்ளிட்ட 11 பேரை விடுவித்தும், பள்ளி நிறுவனருக்கு ஆயுள் தண்டனையும், தாளாளர் மற்றும் அன்றைய தேதியில் கல்வித் துறை அதிகாரிகள், சத்துணவுப் பணியாளர் உள்ளிட்ட 8 பேருக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கு 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், பொதுமக்களின் உணர்ச்சிக் கொந்தளிப்புகளுக்கு முக்கியத்துவம் தராமல், நீதிமன்றம் சட்டப்படியான தண்டனை வழங்கியிருப்பது பாராட்டுக்குரியது. 94 குழந்தைகளின் மரணத்துக்குக் காரணமான 21 பேரையும் தண்டிக்க வேண்டும் என்றும், இன்னும் கடுமையான தண்டனை அனைவருக்கும் விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கருத்து சொல்வது அர்த்தமற்றது. நீதிமன்றம் தனது கடமையைச் சிறப்பாகவே செய்துள்ளது.
கும்பகோணம் பள்ளித் தீ விபத்தும் 94 குழந்தைகளின் மரணமும் தமிழகத்தில் ஏற்படுத்திய அதிர்வு அளப்பரியது. ஆனால், அந்த அதிர்ச்சி ஆண்டுதோறும் குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியாக மெல்லமெல்ல வலுவிழந்துபோனது என்பதுதான் துரதிருஷ்டம். இந்தத் தீ விபத்தும் மரணங்களும் ஏற்பட்டதற்கான காரணங்களைத் தமிழகம் உள்வாங்கிக் கொள்ளவே இல்லை.
கும்பகோணம் தீ விபத்து உணர்த்திய உண்மைகள் இவைதான்:
1. மாடி வகுப்பறைக்கு கீற்றுக்கொட்டகை போட்டிருந்தனர். அதையொட்டிய பகுதியிலேயே சத்துணவுக் கூடம் செயல்பட்டது. உணவு தயாரிப்பின்போது வெளிப்பட்ட தீப்பொறி கூரையை எரித்தது. 2. மிகக் குறுகலான இடம். மாணவர்கள் வெளியேற முடியாதபடி குறுகலான படிக்கட்டுகள். 3. இறந்த குழந்தைகளில் பெரும்பான்மையோர் சுற்றுவட்டாரக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அந்தக் குழந்தைகள் பள்ளி வந்துச்செல்ல இலவசமாகப் பள்ளி வாகனத்தை இயக்கினார்கள் என்பதால்தான், இடவசதி இல்லாத அந்தப் பள்ளிக்குத் தங்கள் குழந்தைகளைப் பெற்றோர் அனுப்பினர்.
பத்து ஆண்டுகள் கடந்தும்கூட இந்த மூன்று விஷயங்களிலும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பதுதான் வேதனையானது.
கீற்றுக்கொட்டகைகள் பள்ளிகளில் இல்லாதபடி செய்துவிட்டோம் அல்லது எரியாக் கூரையாக மாற்றிவிட்டோம் என்று அரசுத் தரப்பு கூறுவது உண்மைதான். ஆனால், இன்றைய பேரபாயம் அரசுப் பள்ளிகளின் கட்டடங்கள்தான். மிகவும் பலவீனமாக இருக்கின்றன. அனைத்துப் பள்ளிகளும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பொதுப்பணித் துறையிடம் கட்டடத்தின் உறுதிப்பாடு குறித்து சான்று பெறும் நடைமுறையை அரசு ஏன் உருவாக்கவில்லை?
தனியார் பள்ளிகள் பல மாடிக் கட்டடங்களாகவும் மாணவர்கள் எட்டிப்பார்த்து விழாதபடியிலான இரும்புக்கம்பிகளால் அடைக்கப்பட்டும் உள்ளன. ஆனால், அத்தனை குழந்தைகளும் 2 நிமிடத்தில் கட்டடத்தைவிட்டு வெளியேறும் வகையில் படிக்கட்டுகள் அகன்றதாக இருக்கிறதா என்றால், 90 சதவீதம் பள்ளிகளில் இல்லையே, அதுபற்றி யாராவது கவலைப்பட்டிருக்கிறார்களா?
தங்கள் கிராமத்தில் இருக்கும் அரசுப் பள்ளியில் சேர்க்காமல், இடவசதியே இல்லாத, ஆடுமாடுகள் போல அடைக்கப்பட்ட ஒரு பள்ளிக்கு கும்பகோணத்தைச் சுற்றியுள்ள ஊர்களிலிருந்து பெற்றோர்கள் ஏன் குழந்தைகளை அனுப்பினார்கள்? பள்ளிப் பேருந்து இலவசம் என்பது மட்டும் காரணமல்ல. தங்கள் கிராமத்து பள்ளிக்கூடத்துக்கு ஆசிரியர்கள் தினமும் வருவதில்லை, அர்ப்பணிப்புடன் பாடம் நடத்துவதில்லை என்று கண்ணீர் மல்கப் பல தாய்மார்கள் விபத்துக்குப் பிறகு பேட்டியில் கூறியது பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு மறந்திருக்கும், நமக்கு மறக்கவில்லை.
ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளுக்கு ஒழுங்காக வராமல் இருப்பதற்குக் காரணம், அவர்களைக் கேள்வி கேட்க சம்பந்தப்பட்ட உள்ளாட்சிக்கு அதிகாரம் இல்லை என்பதுதான். அரசு தொடக்கப் பள்ளிகள் பஞ்சாயத்துக் கட்டுப்பாட்டிலிருந்து எடுக்கப்பட்டுவிட்டன.
இறந்த குழந்தைகளுக்காக குரல் கொடுத்தோம். நிதி கொடுத்தோம். நினைவுச்சின்னம் அமைத்து ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தினோம். தீர்ப்பும் பெற்றோம். ஆனாலும் கும்பகோணம் பள்ளித் தீ விபத்திலிருந்து நாம் பாடம் படிக்கவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...