நேபாளம் - நம்பிக்கை துளிர்க்கிறது!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது மூன்று நாள் அதிகாரபூர்வ நேபாள சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி


இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தனது மூன்று நாள் அதிகாரபூர்வ நேபாள சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் மூன்று, நான்கு தேதிகளில் மேற்கொள்ள இருக்கும்
காத்மாண்டு விஜயத்திற்கு முன்னோடியாக அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் இந்த விஜயம் அமைந்திருக்கிறது.
"சார்க்' மாநாட்டில் கலந்து கொள்ள 2002-இல் அன்றைய பிரதமர் வாஜ்பாயி காத்மாண்டுக்கு விஜயம் செய்தார் என்றாலும், இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான அரசுமுறைப் பயணத்தைக் கடந்த 17 ஆண்டுகளாக இந்தியப் பிரதமர் யாரும் மேற்கொள்ளவில்லை. 1997-இல் அப்போதைய பிரதமர் இந்தர் குமார் குஜ்ரால் மேற்கொண்ட அரசு முறைப் பயணத்தைத் தொடர்ந்து, இந்தியா, நேபாளத்துடனான தனது நட்புறவை வலுப்படுத்தி இருக்குமானால், இப்போதைய நம்பிக்கையின்மை நேபாளத்துக்கு இந்தியாவிடம் இருந்திருக்காது.
பூடான், நேபாளம் ஆகிய இரண்டு நாடுகளுமே இந்தியாவைப் பொருத்தவரை, முக்கியத்துவம் வாய்ந்தவை. பூடான், சீனாவுடன் 470 கி.மீ. எல்லையுடையது என்றால், நேபாளமும் சீனாவும் 1,111 கி.மீ. நீளம் எல்லையில் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டிருக்கின்றன. இவை இரண்டுமே "சார்க்' அமைப்பின் உறுப்பு நாடுகள் என்றாலும், இரண்டு நாடுகளிலும் கடந்த 20 ஆண்டுகளாக சீனா தனது ஆதிக்கத்தையும், செயல்பாடுகளையும் அதிகரித்து வந்திருக்கிறது.
பூடானைவிட நேபாளத்தில் சீனாவின் முதலீடும், நேபாள நெருக்கமும் அதிகரித்து வந்திருக்கின்றன. நேபாளத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் சீனா கணிசமான பங்களிப்பை நல்கி வருகிறது. நேபாளத்தில் ஏராளமான நெடுஞ்சாலைத் திட்டங்கள் சீனாவின் உதவியுடன் அசுர வேகத்தில் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இதுபோன்ற சாலைப் பணிகள் நேபாள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதால், அவர்கள் சீனா தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதில் அக்கறை காட்டுவதாக நம்பத் தொடங்கி இருக்கிறார்கள்.
நேபாளத்தின் பொருளாதாரம், அந்த நாட்டு மக்கள் வெளிநாடுகளில் வேலை செய்து ஊருக்கு அனுப்பும் சேமிப்பை ஆதாரமாகக் கொண்டது. இதை நன்றாகப் புரிந்து கொண்டிருக்கும் சீனா, இளைஞர்களுக்கு உள்ளூரில் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதன் மூலம் அவர்களைக் கவர நினைக்கிறது. அதில் ஓரளவு வெற்றியும் அடைந்திருக்கிறது. ஆனால், சீனாவின் தொலைநோக்குத் திட்டத்தில் திபெத்தைப்போல நேபாளத்தையும் ஒரு கட்டத்தில் சீனாவுடன் இணைப்பது என்பதாக இருப்பதால், நேபாளத்தில் செய்யப்படும் முதலீட்டையும், அங்கு உருவாக்கும் கட்டமைப்பு வசதிகளையும் வருங்கால நன்மையாகவே கருதுகிறது.
மேலே குறிப்பிட்ட பின்னணியில்தான் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் நேபாள விஜயத்தையும், பிரதமர் மோடி மேற்கொள்ள இருக்கும் அரசு முறைப் பயணத்தையும் நாம் பார்க்க வேண்டும். பிரதமர் இந்திரா காந்திக்குப் பிறகு பதவிக்கு வந்த இந்தியப் பிரதமர் யாருமே நேபாளத்தை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும், இந்தியா "பெரியண்ணன்' கண்ணோட்டத்தில்தான் நேபாளத்தை பார்க்கிறது என்றும் நேபாள அரசியல் தலைவர்கள் கருதுகிறார்கள். இப்போது பிரதமர் மோடி நேபாளத்துக்குத் தரும் முன்னுரிமையும், முக்கியத்துவமும் இந்தக் கண்ணோட்டத்தை மாற்றக்கூடும்.
நேபாளத்தின் பொருளாதாரம் சீரழிந்து கிடக்கிறது. கடந்த ஆறு ஆண்டுகளில் நேபாளக் குடியரசு ஏழு பிரதமர்களைப் பார்த்துவிட்டது. கடந்த பத்து ஆண்டுகளில் பல முறை அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் அரசுமுறைப் பயணமாகச் சென்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஒருமுறைகூட நேபாளத்திற்கு விஜயம் செய்யவில்லை என்பதுடன், நேபாளத்தின் நீண்டநாள் கோரிக்கைகள் எதையும் இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்கிற கோபத்தில் இருக்கும் நேபாள ஆட்சியாளர்கள், பிரதமர் நரேந்திர மோடியின் அரசு முறைப் பயணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.
நீர் மேலாண்மை, மின்சாரம், வணிகம், எல்லைப்புறக் கட்டமைப்பு, தொழில்மயப்படுத்துதல் என்று எல்லா பிரச்னைகளுக்கும் நேபாளம் இந்தியாவையே எதிர்நோக்கி இருக்கிறது. இதுவரை இந்தியத் தலைவர்கள் நேபாளத்துக்குக் கொடுத்த உறுதிமொழி எதையும் காப்பாற்றவில்லை என்பதால், இந்தியா பற்றிய தவறான கண்ணோட்டம் நேபாளத்துக்கு இருக்கிறது. அதை பிரதமர் மோடியின் விஜயம் மாற்றக்கூடும் என்கிற நம்பிக்கையை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் பேச்சுவார்த்தைகள் ஏற்படுத்துகின்றன!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...