விஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

கட்ஜு எழுப்பும் கேள்வி!

ஒரு குற்றச்சாட்டு காலந்தாழ்த்தி எழுப்பப்படுகிறது என்பதனாலேயே, அந்தக் குற்றச்சாட்டு பரிசீலனைக்கு தகுதியற்றதாகி விடாது.

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:57 am

ஆசிரியர்

ஒரு குற்றச்சாட்டு காலந்தாழ்த்தி எழுப்பப்படுகிறது என்பதனாலேயே, அந்தக் குற்றச்சாட்டு பரிசீலனைக்கு தகுதியற்றதாகி விடாது. அதேபோல, ஒரு குற்றச்சாட்டுக்கு, தனிப்பட்ட உள்நோக்கம் இருக்கிறது என்பதாலேயே, அந்தக் குற்றச்சாட்டு அர்த்தமற்றதாகி விடாது. இதுபோன்ற அளவுகோல்கள் கையாளப்பட்டால், எல்லாத் தவறுகளையும் நியாயப்படுத்தி விடலாம்.

சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகவும், உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் பணியாற்றி இப்போது பத்திரிகை செயல்பாட்டுக் கண்காணிப்புக் குழுவின் (பிரஸ் கவுன்சில்) தலைவராக இருக்கும் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு எழுப்பியிருக்கும் குற்றச்சாட்டு, மேலே குறிப்பிட்டதுபோல, காலம் கடந்த விவாதம் என்றோ, உள்நோக்கம் கொண்ட குற்றச்சாட்டு என்றோ ஒதுக்கிவிடக்கூடியது அல்ல. இந்தக் குற்றச்சாட்டின் பின்னணியில், தேசிய அளவிலான விவாதம் நடந்து, நல்லதொரு முடிவு ஏற்படுவதுதான் நீதித் துறைக்கும், இந்திய ஜனநாயகத்திற்கும் நன்மை பயக்கும்.

ஓய்வு பெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தனது முகநூல் பதிவில், தான் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பணியாற்றியபோது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். அந்தப் பதிவில், சென்னை உயர்நீதிமன்றத்திற்குக்

கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஒருவரது செயல்பாடுகள் குறித்த உளவு அறிக்கை அவருக்கு எதிரான தகவல்களை வழங்கி இருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

உளவு அறிக்கையில் அந்தக் கூடுதல் நீதிபதிக்கு எதிரான தகவல்கள் இடம் பெற்றிருந்ததால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் தலைமையிலான நீதிபதிகள் சபர்வால், ரூமா பால் ஆகியோர் அடங்கிய தேர்வுக் குழு, கூடுதல் நீதிபதிக்குப் பணி நீட்டிப்பு வழங்க வேண்டாம் என்று குறிப்பிட்டிருந்ததாக, நீதிபதி மார்க்கண்டேய

கட்ஜு கூறுகிறார். இத்தனைக்கும் பிறகு, மத்திய அரசின் வற்புறுத்தலின் பேரில், ஊழல் புகாருக்கு ஆளான அந்தக் கூடுதல் நீதிபதிக்கு, தலைமை நீதிபதி லஹோதி தேர்வுக் குழுவின் ஏனைய நீதிபதி

களைக் கலந்தாலோசிக்காமல், பணி நீட்டிப்பு வழங்கப் பரிந்துரை செய்தார் என்பதுதான் நீதிபதி கட்ஜுவின் குற்றச்சாட்டு.

நீதிபதி கட்ஜுவின் கூற்றுப்படி, அப்போது மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த கூட்டணிக் கட்சி ஒன்றின் வற்புறுத்தலின் பேரில்தான், அந்தக் கூடுதல் நீதிபதிக்கு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது என்பது மட்டுமல்ல, அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார்.

2001-இல், மேம்பால ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியைக் கைது செய்தபோது, தலைமை மாவட்ட அமர்வு நீதிபதியாக இருந்த அசோக்குமார் அவரைப் பிணையில் விடுவித்தார் என்பதும், அதற்கு நன்றிக் கடனாக அவர் 2003-இல் அன்றைய வாஜ்பாயி அரசில் அங்கம் வகித்த தி.மு.க.வின் பரிந்துரையின் பேரில், சென்னை உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார் என்பதும் அனைவருக்குமே தெரிந்த ஒன்று.

இந்தப் பிரச்னை மக்களவையில் எழுப்பப்பட்டபோது, "நீதிபதி அசோக்குமார் 2003-இல் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அவரது பணி நியமனம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள்

தேர்வுக் குழுவுக்குத் தயக்கம் இருந்தது உண்மை. இந்நிலையில், அந்த நபரை ஏன் நீதிபதியாக நியமிக்கக் கூடாது என்று 2006-இல் பிரதமர் அலுவலகம் மத்திய சட்டத்துறை மூலம் நீதிபதிகள் தேர்வுக் குழுவிடம் விளக்கம் கேட்டது. அதன் பிறகும் அவர்மீது ஊழல்

குற்றச்சாட்டுகள் இருந்ததால் அவரை நீதிபதியாக நியமிக்க வேண்டாம் என்று தேர்வுக் குழு முடிவு எடுத்தது. மத்திய சட்டத் துறையிடமிருந்து அவரை நீதிபதியாக நியமிக்காமல் இருப்பது பற்றி மீண்டும் வற்புறுத்தல்கள் எழுந்ததால், அதன் அடிப்படையில், தேர்வுக்குழு அவருக்கு பணி நீட்டிப்பை வழங்கித் தொடர்ந்து நிரந்தர நீதிபதியாகவும் நியமனம் செய்தது' என்று சட்ட அமைச்சரான ரவிசங்கர் பிரசாத் பதிலளித்திருக்கிறார்.

நீதிபதி அசோக்குமார் நியமனத்தில் வாஜ்பாயி மற்றும் அவரைத் தொடர்ந்து பதவிக்கு வந்த மன்மோகன் சிங் ஆகியோரின் தலைமையிலான கூட்டணி அரசுகளில் அங்கம் வகித்த தி.மு.க. தலைமையின் தலையீடு இருந்திருக்கக்கூடும் என்பதில் சந்தேகம் இல்லை. நேர்மையான நபர்கள் நியமிக்கப்படுவதற்காக அரசியல் தலைமை நீதித் துறையிடம் வற்புறுத்துவது ஆரோக்கியமான தலையீடு என்று கருதலாம். ஆனால், தவறானவர்களுக்காகத் தலையிடும்போது அதனால் ஏற்படும் இழப்பு அளப்பரியது.

ஆட்சியாளர்களின் தலையீடு இல்லாமல் நீதிபதிகளே நீதிபதிகளை நியமித்துக் கொள்வதும் பல தவறுகளுக்கு வழிவகுக்கக்கூடும். அதனால், நீதிபதிகள் நியமனம் பற்றிய தெளிவான கொள்கை வகுக்கப்பட்டாக வேண்டும் என்பதைத்தான் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் குற்றச்சாட்டு உணர்த்துகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.