நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

சிகரம் சரிந்தது!

பாலசந்தர் என்ற உன்னத செல்லூலாய்ட் சிற்பி நூறாண்டு வாழ்வார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. காலன் அவசரப்பட்டுவிட்டான்.

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:45 am

ஆசிரியர்

பாலசந்தர் என்ற உன்னத செல்லூலாய்ட் சிற்பி நூறாண்டு வாழ்வார் என்கிற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது. காலன் அவசரப்பட்டுவிட்டான். "இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தர் அகவை எண்பத்தி மூன்றுடன் தனது வாழ்க்கைப் பயணத்தை முடித்துக்கொண்டு அமரராகி விட்டார். இந்திய சினிமாவின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளின் பட்டியல் எடுக்கப்பட்டால், அதில் முதல் பத்து பேர்களில் கே.பாலசந்தர் ஒருவர். தமிழ் சினிமா பிரமுகர்களின் பட்டியலில் அவர் முதல்வர்.

தமிழ் சினிமா சரித்திரம் எழுதப்படும்போதெல்லாம் அதில் "பாலசந்தர் சகாப்தம்' என்றுதான் கடந்த நூற்றாண்டின் கடைசி முப்பது ஆண்டுகளைக் குறிப்பிட்டாக வேண்டும். அந்த முப்பது ஆண்டுகளில் எத்தனையோ அற்புதக் கலைஞர்களும், இமயம் தொட்ட இயக்குநர்களும் இருந்திருந்தாலும் அவர்களை எல்லாம்விட உயர்ந்து நின்றவரும், அவர்களுக்கெல்லாம் முன்னோடியாகவும், முன்மாதிரியாகவும் இருந்தவர் கே.பாலசந்தர்.

பாலசந்தரின் திரையுலக வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கும். நாடக மேடையிலிருந்து வசனகர்த்தாவாக எம்.ஜி.ஆரின் "தெய்வத்தாய்' திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அடுத்த சில ஆண்டுகளிலேயே, நீர்க்குமிழி, மேஜர் சந்திரகாந்த், நாணல் என்று படங்களை எழுதி, இயக்கிக் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவராக அவர் வலம் வரத் தொடங்கி விட்டிருந்தார். அடுத்த 10 ஆண்டுகளில் "பாலசந்தர்' என்கிற பெயர் தமிழில் மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று அகில இந்திய அளவில் பேசப்படும், பாராட்டப்படும் திரையுலக பிரமிப்பாக மாறிவிட்டிருந்தது.

கருப்பு - வெள்ளையிலிருந்து திரையுலகம் வண்ணப்படங்களுக்கு மாறிக் கொண்டிருந்த நிலையில், முதலில் "நான்கு சுவர்கள்' மூலம் அவர் செய்து பார்த்த பரிசோதனை தோல்வி அடைந்தது. வண்ணப்படங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து கருப்பு - வெள்ளை திரைப்படங்களை இயக்கி வெற்றிபெற முடியும் என்பதை அவரால் மட்டுமே நிரூபித்துத் தாக்குப்பிடிக்க முடிந்தது. ஜாம்பவான்களான கே.எஸ்.கோபாலகிருஷ்ணனும், பி.மாதவனும்கூடத் தாக்குப்பிடிக்க முடியாமல் போனபோது, கே.பாலசந்தரால் மட்டும் வெற்றி பவனிவர முடிந்தது என்றால், அதற்குக் காரணம், அவரிடமிருந்த தன்னம்பிக்கையும், காலத்தைக் கடந்து சிந்தித்த புத்திசாலித்தனமும்தான்.

"அரங்கேற்றம்' திரைப்படம் இயக்குநர் கே.பாலசந்தருக்கு மட்டுமல்ல, தமிழகத் திரைப்பட வரலாற்றிலேயே திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம். கமல்ஹாசன் என்கிற அற்புதக் கலைஞனைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய திரைப்படமும்கூட. அரங்கேற்றத்திற்குப் பிறகு கே.பாலசந்தர் முற்றிலும் மாறுபட்ட ஒரு பரிமாணத்துக்கு மாறினார்.

"மன்மத லீலை', "நினைத்தாலே இனிக்கும்', "வறுமையின் நிறம் சிவப்பு' என்று அடுத்த கட்ட வளர்ச்சிக்கும் அவரால் இயல்பாக நகர முடிந்தது. ஆங்கிலத்திலும் தமிழிலுமாக மாறி மாறி வசனம் பேசும் "நாடக மேடைத் தனமாக இருக்கிறது' பாலசந்தரின் திரைப்படங்கள் என்கிற ஆரம்பகாலக் குற்றச்சாட்டுகளை எல்லாம் பொய்யாக்கி, எழுத்தின் வலிமைக்கு எள்ளளவும் குறையாத ஒளிப்பதிவு வளமையையும் அவரால் படைக்க முடிந்தது. அவரது "ஏக் துஜே கேலியே...'யும், "புன்னகை மன்னனும்' பாலசந்தர் என்கிற இயக்குநருக்கு இருந்த சினிமா என்கிற ஊடகத்தைப் பற்றிய புரிதலுக்கு சாட்சி.

"இரு கோடுகள்', "கண்ணா நலமா', "வெள்ளி விழா', "புன்னகை', "அரங்கேற்றம்', "அவள் ஒரு தொடர்கதை', "நிழல் நிஜமாகிறது', "தப்புத் தாளங்கள்', "தண்ணீர் தண்ணீர்', "அச்சமில்லை அச்சமில்லை', "புதுப்புது அர்த்தங்கள்', "மனதில் உறுதி வேண்டும்', "கல்கி' என்று பட்டியலிட்டால் திரையுலகில் மட்டுமல்ல, திரைப்படங்கள் மூலம் பாலசந்தர் தமிழ்ச் சமூகத்துக்கு உணர்த்த முற்பட்ட சமுதாயப் பிரக்ஞையையும் புரிந்துகொள்ள முடியும்.

நாடக இயக்குநராக, திரைப்பட வசனகர்த்தாவாக, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என்று முழுநேரத் திரைப்பட இயக்குநராக, தயாரிப்பாளராக, நடிகராக, சின்னத்திரை இயக்குநராக என்று கே.பாலசந்தர் எடுத்த சினிமா அவதாரங்கள் பல. அவரால் அறிமுகப்படுத்தப்பட்ட நடிக, நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், நரசிம்மன், ஏ.ஆர்.ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் என்று பார்த்தால் எண்ணிலடங்காது.

அரை நூற்றாண்டு காலம் தமிழ்த் திரையுலகின் தனிப்பெரும் ஆளுமையாக, நூறு திரைப்படங்களைத் தந்து, நூற்றுக்கணக்கானகலைஞர்களை அறிமுகப்படுத்திய "இயக்குநர் சிகரம்' கே.பாலசந்தரின் மறைவு என்பது தமிழ் சினிமாவில் ஒரு சகாப்தத்தின் முடிவு. இனியொருவன் நிகரில்லை உனக்கு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.