நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

இப்படியும் செய்யலாமே!

நாடாளுமன்றத்தில் மிகவும் சூடான விவாதங்களை திசைமாற்றும் விவகாரங்களில் ஒன்றாக அமைந்தது அண்மையில் நவோதயா வித்யாலய சமிதி சார்பில் வெளியான சுற்றறிக்கை. ஹ

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:42 am

ஆசிரியர்

நாடாளுமன்றத்தில் மிகவும் சூடான விவாதங்களை திசைமாற்றும் விவகாரங்களில் ஒன்றாக அமைந்தது அண்மையில் நவோதயா வித்யாலய சமிதி சார்பில் வெளியான சுற்றறிக்கை. ஹ

இந்தச் சுற்றறிக்கையின் உள்நோக்கம் என்ன, இந்தச் சுற்றறிக்கை இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்துமா, இதுநாள்வரை பள்ளிகளில் உள்ள நடைமுறை என்ன என்பதையெல்லாம் பற்றி சிந்திக்காமலே, எதிர்த்துப்பேச ஒரு விஷயம் கிடைத்துவிட்டது என்ற சந்தோஷ மனநிலையில்தான் எதிர்க்கட்சிகள் இந்த எதிர்விவாதத்தில் பங்கு கொண்டன.

"முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை சிறந்த நிர்வாகத் திறன் நாளாகக் கொண்டாட இருப்பதால், டிசம்பர் 24, 25 தேதிகளில் இதைக் கொண்டாடுவதை பள்ளிகள் உறுதி செய்ய வேண்டும்; சி.பி.எஸ்.இ. சார்பில் கட்டுரைப் போட்டிகள் நடத்தப்படும்' என்ற இந்த அறிக்கையில், கிறிஸ்துமஸ் பற்றியோ, டிசம்பர் 25-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்பது பற்றியோ எந்தக் குறிப்பும் இல்லை.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கிறிஸ்துமஸ் நாளில் பிறந்தவர். அவரது பிறந்த நாளை அவரின் வழிவந்த பாஜக அரசு கொண்டாட முற்படுவதில் வியப்பில்லை. பாஜக அரசு அந்த நாளை சிறந்த நிர்வாகத் திறன் தினமாகக் கொண்டாடுவதைக் குறை சொல்லவும் முடியாது. ஆனாலும், அன்றைய தினம் - அதாவது கிறிஸ்துமஸ் - ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட விடுமுறை நாளாகும். ஆகவே அரசு அலுவலகங்கள், மத்திய அரசின் கீழ் செயல்படும் பள்ளிகள் திறக்கப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட விடுமுறை தினங்களில் ஒன்றுதான் கிறிஸ்துமஸ்.

மேலும், ராஜீவ் காந்தி பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையில் அமைந்தால், வெள்ளிக்கிழமையே பயங்கரவாத எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்று கடமையை கடமைக்குச் செய்வதைப் போல, டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த தினம் ஞாயிற்றுக்கிழமை அமைந்தால், வெள்ளிக்கிழமை முன்னதாக அல்லது திங்கள்கிழமை ஒருநாள் தள்ளி, ஆசிரியர் தினம் கொண்டாடுவதைப் போலத்தான், நவோதயப் பள்ளிகளும் வாஜ்பாய் பிறந்த நாளைக் கொண்டாடும் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தச் சுற்றறிக்கையே மிகத் தெளிவாக, டிசம்பர் 24, 25 என்று குறிப்பிட்டிருக்கிறது.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை நவோதயப் பள்ளிகளே இல்லை. ஆனாலும், தமிழ்நாட்டில் பாஜகவைத் தவிர அனைத்துக் கட்சிகளுமே இந்த விவகாரத்தைப் பேசின. பாஜகவின் விஷமம் என்று அறிக்கை வெளியிட்டன. ஆனாலும், யாருமே சிறிதளவுகூட யோசிக்கவில்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஏன் இந்தியா முழுவதிலுமே அனைத்துப் பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் 20-க்குள் முடிக்கப்பட்டு, கிறிஸ்துமஸ் முதல் புத்தாண்டு தினம் வரை அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. அப்படி இருக்கும்போது, கிறிஸ்துமஸ் தினத்தன்று மட்டும் பள்ளியைத் திறப்பது எப்படி சாத்தியமாகும்!

கட்டுரைப் போட்டி என்பது மாணவர்களின் விருப்பம் சார்ந்தது. காலாண்டு, அரையாண்டு, இறுதித்தேர்வு விடுமுறைக் காலங்களில் பல்வேறு அமைப்புகள் நடத்தும் ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டிகளுக்கு ஒப்பானது. இதில் அனைத்து மாணவர்களும் பங்கேற்க வேண்டிய அவசியமில்லை. அத்துடன் இந்தப் போட்டிகள் இணையத்தில் நடத்தப்படும் என்று விளக்கமும் தரப்பட்டுள்ளது.

இவ்வளவுக்குப் பிறகும் கிறிஸ்துமஸ் நாளில் பள்ளியை நடத்துவதா என்று அனைத்து அரசியல் கட்சிகளும் களம் இறங்கக் காரணம், பாஜக மதச்சார்புள்ள கட்சி என்று ஏனைய கட்சிகளால் முத்திரை குத்தப்பட்டிருப்பதுதான். எதிர்க்கட்சிகள் தங்களை மதச்சார்பற்றவர்கள் என்பதை நிரூபிக்கவும், தாங்கள் சிறுபான்மையினருக்கு பாதுகாவலர்கள் என்று காட்டிக் கொள்ளவுமே இவ்வளவு அவசரத்துடன் களம் இறங்கின. இந்தியாவில் உள்ள அனைத்துப் பள்ளிகளும் கிறிஸ்துமஸ் நாளில் திறக்கப்பட்டிருக்கும் என்பதைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தின.

இந்தப் பிரச்னை எதேச்சையான நிகழ்வா அல்லது திட்டமிட்டு உருவானதா என்பதை மறந்துவிட்டு, சிறுபான்மையினருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் அனைத்துக் கட்சிகளும், சிறுபான்மையினரால் நடத்தப்படும் பள்ளிகளும் செய்ய வேண்டியது என்ன?

மாவட்ட நிர்வாகம் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கும் நாளில் (கார்த்திகை தீபம் அல்லது உள்ளூர் திருவிழா), இந்து மதத்தைச் சேர்ந்த மாணவ - மாணவியர் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று சொல்லாமல், மாற்று மத உணர்வுக்கு மதிப்பளித்து அன்று பள்ளிக்கு விடுமுறை அளிப்பதை உறுதிப்படுத்துவது. சிறுபான்மையினருக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பெரும்பான்மையினருக்கு செய்யும் உதவி அதுவாகத்தான் இருக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.