இரண்டாண்டுகளுக்குப் பிறகு தில்லியில் மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்திருக்கிறது. இந்த முறை வாடகை ஊர்தி ஓட்டுநர் ஒருவர், தனது வண்டியில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருப்பது பரவலான கண்டனத்தையும், நாடு தழுவிய அளவில் அதிர்வலைகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. சம்பவம் நடந்த டிசம்பர் 5-ஆம் தேதி உபேர் இணையதள வாகன சேவை நிறுவனத்தின் மூலமாக அனுப்பப்பட்ட வாகனத்தின் ஓட்டுநர் ஏற்கெனவே பாலியல் வழக்கில் தொடர்புடையவர் என்பது இப்போது தெரியவந்திருக்கிறது.
சமீபகாலமாகவே, அதிலும் குறிப்பாக ஆண்ட்ராய்ட் கைப்பேசிகள் பரவலாகப் பயன்படுத்தப்படத் தொடங்கியது முதல், இணையதளம் வழி வர்த்தகம்போல, இணையதளம் வழி வாடகைக் கார் சேவையும் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. உபேர், ஓலா, டாக்சி பார் ஷுவர் தொடங்கி பன்னாட்டு இணையதள வாகன சேவை நிறுவனங்களைப்போல, சில இந்திய நிறுவனங்களும் இந்தச் சேவையில் இறங்கி இருக்கின்றன. இந்த நிறுவனங்களுக்குச் சொந்தமாக ஊர்திகளே கிடையாது. தனியார் வாகன உரிமையாளர்கள், சுற்றுலா நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, அவர்களுக்கும் பயணிக்க விரும்புவோருக்கும் இணைப்புப் பாலமாகச் செயல்படுகின்றன உபேர், ஓலா போன்ற நிறுவனங்கள்.
ஜி.பி.எஸ். பொருத்தப்பட்ட வாகனங்களை இந்த நிறுவனங்கள் எந்த நேரத்திலும் அனுப்பித் தரும் என்பதால், இணையதளம் மூலம் பதிவு செய்து வாடகை ஊர்திகள் பெறுவது பாதுகாப்பானது என்கிற கருத்து வேலை பார்க்கும் பெண்கள் மத்தியில் பரவலாக இருந்து வருகிறது. பன்னாட்டு நிறுவனங்கள் மூலம் வாடகை ஊர்தி பெறுவதால், அந்த நிறுவனங்கள் ஓட்டுநர்கள் பற்றிய முழுமையான தகவல்கள் பெற்றுத்தான் அவர்களை வேலைக்கு அமர்த்தி இருக்கும் என்கிற தப்பபிப்பிராயமும் பரவலாகவே இருந்து வந்தது.
உபேர், ஓலா, டாக்சி பார் ஷுவர் போன்ற இணையதள வாடகை வாகன நிறுவனங்கள் ஓட்டுநர்களின் அனுபவம், கடந்த காலச் சம்பவங்கள் போன்ற தகவல்களை முழுமையாகப் பரிசோதித்து, அவர்களின் ஆவணங்கள், பின்னணி சரியாக இருக்கின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதில்லை. இதே நிறுவனங்கள் அமெரிக்காவிலும் இயங்குகின்றன. ஆனால், அங்கே அவர்கள் மூன்றடுக்கு சோதனைக்குப் பிறகுதான் ஓட்டுநர்களை ஏற்றுக் கொள்கிறார்கள். இந்தியாவில் கேள்வி கேட்க ஆளில்லை என்பதால், கவனமான சோதனைகளும் ஆவணப் பரிசோதனைகளும் செய்யப்படுவதில்லை.
உரிமம் பெற்ற வாடகை கார்களுடன் நியாயமற்ற முறையில் தனியார் ஓட்டுநர்கள் மூலம் வாடகை கார்களை அனுப்பி போட்டியில் இறங்குகிறது என்பதால், ஸ்பெயின் நாட்டில் உபேர் நிறுவனம் தடை செய்யப்பட்டிருக்கிறது. தாய்லாந்திலும்கூட இதுதான் நிலை. டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் உபேர் தடை செய்யப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்ட உபேர் இணையதள வாடகை வாகன சேவை நிறுவனத்தைத் தில்லி அரசும் இப்போதும் தடை செய்திருக்கிறது. சொந்தமாக வாகனம் இல்லாத, தனது வாகனத்திலோ, தன்னால் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஓட்டுநர் மூலமாகவோ, பாதிக்கப்பட்டவர் பயணிக்காதபோது அந்த நிறுவனத்தின் மீதான தடை சட்டப்படி செல்லுமா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.
தில்லி போக்குவரத்துத் துறை உபேர் வாடகை ஊர்தி நிறுவனம் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறிச் செயல்பட்டது என்றும் அதனால் தடை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறுகிறது. இந்த நிறுவனம் இத்தனை மாதங்களாகச் செயல்பட்டு வந்ததே, அத்தனை பத்திரிகைகளிலும் விளம்பரங்கள் செய்து கொண்டிருந்ததே அப்போதெல்லாம் போக்குவரத்துத் துறை தூங்கிக் கொண்டா இருந்தது? அதுபற்றிக் கேள்வி கேட்க யாருமே இல்லை.
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இதுபோன்ற இணையதள சேவை வழங்கும் வாடகை ஊர்தி நிறுவனங்களைத் தடை செய்ய மாநிலங்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அது எப்படி சாத்தியம் என்று புரியவில்லை. இணையதள வர்த்தகம் என்கிற பூதத்தைத் திறந்து விட்டாயிற்று. இனி அதை எப்படி முறைப்படுத்துவது, அதனால் ஏற்படும் பிரச்னைகளையும் ஆபத்துகளையும் எப்படிக் கட்டுப்படுத்துவது என்று யோசிப்பதுதான் புத்திசாலித்தனமே தவிர, தடை செய்வது என்பது சாத்தியமல்ல.
பெண்களுக்கு ஒரு வேண்டுகோள். அரசையும், காவல் துறையையும் மட்டுமே நம்பி நடமாடாதீர்கள். உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்வதுதான் புத்திசாலித்தனம். அசட்டு தைரியம் ஆபத்தில் முடியும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

