அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது, நிரந்தரப் பகைவர்களும் கிடையாது என்பார்கள். ஆனால், இரு நாடுகளுக்கு இடையேயான ராஜதந்திரத்திற்கும் இதையே கூறிவிட முடியாது. நிரந்தரப் பகைவர்கள் இல்லாமல் இருப்பது எவ்வளவு நல்லதோ, அதைவிட இன்றியமையாதது நிரந்தர நண்பர்கள் இருக்க வேண்டியது. ரஷிய - பாகிஸ்தான் உறவில் காணப்படும் திடீர் நெருக்கம், இந்தியாவை நிமிர்ந்து உட்கார வைத்தாக வேண்டும்.
இந்த மாதம் அரசுமுறைப் பயணமாக ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வர இருக்கிறார். ஆனால், கடந்த மாதம் ரஷியப் பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோப்ரூ பாகிஸ்தானுக்கு விஜயம் செய்திருப்பது மட்டுமல்ல, பல ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தங்களிலும் இரு நாடுகளும் கையெழுத்திட்டிருக்கின்றன. சோவியத் யூனியன் பிரிந்து, ரஷியா தனி நாடாக அறிவிக்கப்பட்ட பிறகு பாகிஸ்தானுக்கு ரஷியப் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் விஜயம் செய்திருப்பது இதுதான் முதல்முறை என்பதால், இந்த விஜயம் சர்வதேச அரசியல் நோக்கர்களால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.
இந்திய - ரஷிய உறவு என்பது இரண்டு நாடுகளாலும் சுலபமாகத் தவிர்க்க முடியாத அளவுக்கு நெருக்கமானது. சர்வதேசப் பிரச்னைகளில் இந்தியாவுடன் பெரிய அளவில் கருத்து வேறுபடாத உலக வல்லரசுகளில் ரஷியாதான் முதன்மையானது. அமெரிக்க - சோவியத் யூனியன் இடையேயான பனிப்போர் காலத்திலிருந்து இன்றுவரை காஷ்மீர் பிரச்னையில் ரஷியா இந்தியாவை ஆதரித்து வருகிறது. ஆப்கானிஸ்தான், பயங்கரவாதம், ஈரான் தொடங்கி சமீபத்திய உக்ரைன் பிரச்னை வரை ரஷியாவும், இந்தியாவும் ஒருமித்த கருத்துடையனவாகத்தான் இருந்து வருகின்றன. இந்தியா தற்போது அமெரிக்கா, பிரான்ஸ், சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஜெர்மனி என்று உலகின் பல்வேறு வல்லரசு சக்திகளுடனும் நெருக்கமான உறவும், பொருளாதார ஒப்பந்தங்களும் செய்து கொண்டாலும், ராணுவத் தளவாடங்கள், அணு மின்சக்தி உள்ளிட்ட எல்லா முக்கியமான துறைகளிலும் ரஷியாதான் இந்தியாவின் மிகப்பெரிய கூட்டாளியாகத் தொடர்கிறது.
உக்ரைன் தொடர்பான பொருளாதாரத் தடையால் ஆண்டொன்றுக்கு 40 பில்லியன் டாலரும், கச்சா எண்ணெய் விலைச் சரிவால் 100 பில்லியன் டாலரும், அன்னிய முதலீடுகளைத் திருப்பி எடுத்துக்கொண்டு செல்லத்தான் மேலும் 130 பில்லியன் டாலரும் ரஷியாவுக்கு இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்த நாட்டு நிதியமைச்சரே சமீபத்தில் தெரிவித்திருக்கிறார். அதனால், தனது பொருளாதார பலத்தைப் பெருக்கிக்கொள்ள ரஷியா முயற்சிகள் எடுத்து வருகிறது.
ஒருபுறம், ரஷியா சீனாவுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கிறது. இன்னொருபுறம், கடந்த சில ஆண்டுகளாகவே ரஷியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ ஒத்துழைப்பு அதிகரித்திருக்கிறது. இரண்டு நாடுகளிலிருந்தும் உயர் ராணுவ அதிகாரிகளும், அமைச்சர்களும் விஜயம் செய்தவண்ணம் இருக்கிறார்கள். இந்தியா கவலைப்பட வேண்டியது இந்த விஷயத்தில்தான்.
கடந்த பத்தாண்டுகளாக பாகிஸ்தானுக்கு ராணுவத் தளவாடங்கள் விற்பதற்கு விதித்திருந்த தடையை ரஷியா கடந்த ஜூன் மாதம் அகற்றியது. இதைத் தொடர்ந்து, எம்.ஐ - 35 என்கிற ராணுவத் தாக்குதலுக்குப் பயன்படுத்தும் ஹெலிகாப்டர்களை பாகிஸ்தான் ரஷியாவிடமிருந்து வாங்கி இருக்கிறது. முழுமையான விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும் ரஷியாவுடன் பாகிஸ்தான் இப்போது செய்து கொண்டிருக்கும் ராணுவ ஒத்துழைப்பு ஒப்பந்தம், இரண்டு நாடுகளுக்கு இடையே அதிகரித்த ராணுவப் பயிற்சிக்கும், தளவாட விற்பனைக்கும் வழிகோலும் என்று நம்பலாம்.
ஏற்கெனவே, அமெரிக்காவுடனும், சீனாவுடனும் ராணுவ ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் பாகிஸ்தான், இப்போது ரஷியாவுடனும் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்து கொண்டிருப்பது, பாகிஸ்தானின் ராஜதந்திரத்திற்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய வெற்றி என்பதில் ஐயமே இல்லை. இதன்மூலம், அமெரிக்காவை மட்டுமே இதுவரை சார்ந்திருந்த பாகிஸ்தான், ரஷியாவையும் சீனாவையும் தனக்கு நெருக்கமாக்கிக் கொண்டிருப்பது இந்தியாவை மட்டுமல்ல, அமெரிக்காவையும்கூட சிந்திக்க வைக்கும்.
ரஷியாவுடனான நமது நெருக்கம் குறைந்து வருவது நல்லதல்ல. தொலைவில் இருக்கும் அமெரிக்க நண்பனைவிட, அருகில் இருக்கும் நீண்டநாள் ரஷியத் தோழன்தான் முக்கியம் என்பதை இந்திய அரசு உணர வேண்டும். விரைவில் இந்தியா வர இருக்கும் ரஷிய அதிபர் புதினின் அரசுமுறைப் பயணத்தைப் பயன்படுத்தி இந்திய - ரஷிய உறவைப் பழைய நெருக்கத்துக்குக் கொண்டு செல்வதுதான், நரேந்திர மோடி அரசின் ராஜதந்திரமாக இருக்க வேண்டும்!
நிரந்தரப் பகைவர்கள் கூடாது; அதைவிட முக்கியம், நிரந்தர நண்பர்கள் கட்டாயம் வேண்டும்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,330.8 கோடி டாலராக உயர்வு!

மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?

லாரன்ஸ் பிஷ்னோய் குறித்த வெப் சீரிஸை வெளியிட வேண்டாம்! - ஓடிடி நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

