நிழல் தேடும் நகரங்கள்!
மந்தியக் காடுகள் கணக்கெடுப்பு 2013 அறிக்கையின்படி, 2011-13 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 5,871 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு கூடியுள்ளது.


மந்தியக் காடுகள் கணக்கெடுப்பு 2013 அறிக்கையின்படி, 2011-13 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 5,871 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு கூடியுள்ளது. இதில் மகிழ்ச்சி தரும் தகவல் என்னவெனில், வனப்பகுதியில் கூடியுள்ள பசுமைப் பரப்பு 2 விழுக்காடு மட்டுமே. வனப்பகுதிக்கு வெளியேதான் 5,739 சதுர கிலோமீட்டர் வனப்பரப்பு கூடியுள்ளது. இந்த மாற்றத்தில் நகரங்களின் மரம் வளர்ப்புக்குக் கணிசமான இடம் இருக்கிறது.
நகர மேம்பாடு, நகர விரிவாக்கம், சுற்றுச் சாலைகள், புதிய குடியிருப்புகள் போன்ற தேவைக்காக மரங்கள் அடியோடு வெட்டப்படுகின்றன. எந்தவிதமான முன்யோசனை, திட்டம் எதுவுமில்லாமல், இந்தியாவில் மரங்கள் வெட்டித் தள்ளுவதுபோல வேறு எங்காகிலும் நடந்திருக்குமா என்பது சந்தேகமே.
இருப்பினும், தொடர்ந்து மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வும், மரங்களால் ஏற்படும் நன்மைகளை எடுத்துச்சொல்லியும், தொடர்ச்சியாக நகர மக்களின் மனதில் ஏற்படுத்தப்பட்ட சலனங்களின் விளைவுதான், இவ்வாறான நகர்ப்புற மரங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், நகர்ப்புற பசுமைப் பரப்பின் விரிவும் என்பது நிதர்சனம்.
2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 7,935 சிறிய, நடுத்தர, பெரு நகரங்கள் உள்ளன. 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது இருந்ததைவிடக் கூடுதலாக 2,774 நகரங்கள் உருவாகிவிட்டன. இந்தியாவில் நகரங்கள் ஆக்கிரமித்துள்ள பரப்பு, மொத்த நிலப்பரப்பில் 16.5 விழுக்காடு. இங்குதான் இந்திய மக்கள் தொகையின் 35 விழுக்காட்டினர் வாழ்கின்றனர்.
நகர்வாழ் மக்களை அதிகம் கொண்ட மாநிலங்களில் தமிழ்நாடு மூன்றாம் இடத்தில் இருக்கிறது. முதலாவது மகாராஷ்டிரம் 5.9 கோடி. இரண்டாவது உத்தரப் பிரதேசம் 4.5 கோடி. மூன்றாவதாக தமிழ்நாடு 3.5 கோடிக்கும் அதிகம்.
இருப்பினும், தமிழக நகரங்கள் ஆக்கிரமித்துள்ள பரப்பு 12,492 சதுர கிலோ மீட்டர் என்றால், இதில் நகர்ப்புற மரங்களின் பசுமைப் பரப்பு 1,509 சதுர கிலோ மீட்டராக இருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பில், கிளைகளுடன் உள்ள அடிமரத்தின் அகலம் குறைந்தபட்சம் 10 செ.மீட்டருக்குக் குறைவான மரங்கள் சேர்க்கப்படவில்லை. வளரும் மரக்கன்றுகள் தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் இருப்பதால் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் பசுமைப் பரப்பு மேலும் கூடும் என எதிர்பார்க்கலாம்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சாலையின் இரு பக்கமும் ஆலமரங்கள் வளர்க்கப்பட்டன. 1939-இல் ராஜாஜி சென்னை ராஜதானியின் பிரதமரானபோது, புளியமரமும், மாமரமும் புதிதாக அமைக்கப்படும் சாலையின் இருபுறங்களிலும் நடுவதற்கு உத்தரவிட்டார்.
புளியங்காயிலும், மாங்காயிலும் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் "சி' இருப்பதால், அது சிறார்களின் ஆரோக்கியத்திற்கும் நல்லது என்று ராஜாஜி தந்த விளக்கத்தை இங்கே நினைவுகூர விரும்புகிறோம்.
விளைநிலங்களை அழித்து உருவாக்கப்பட்ட தங்க நாற்கரச் சாலைகளின் இரு புறங்களிலும் பயன்தரும் மரங்களை நடுவது பற்றி ஆட்சியாளர்கள் ஏன் யோசிக்கவில்லை என்பது புரியவில்லை.
ஊரகப் பகுதிகளைக் காட்டிலும் நகரங்களுக்குத்தான் மரங்கள் மிகவும் இன்றியமையாதவையாக இருக்கின்றன. மரங்களால் நகரச் சூழலில் கரியமில வாயு குறையும். ஒலி மாசு குறையும். துகள் மாசு வீட்டுக்குள், அலுவலகத்துள் நுழைவது தடைப்படும். வாகனங்களுக்கும் நடைபாதை மனிதருக்கும் நிழல் சேர்க்கும். பறவைகளுக்கு ஓய்விடம் தரும். மரங்களால் நாம் பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி மாளாது.
நகர விரிவாக்கம் என்ற பெயரில் மரங்களை ஏன் வெட்ட வேண்டும்? மரங்களை அப்படியே வேருடன் பெயர்த்து, நகர வளர்ச்சிக்கு இடையூறில்லாத பகுதியில் நட்டு வளர்க்கலாமே. பல கோடி ரூபாய் செலவில் சுற்றுச் சாலை, நிலத்தை சமன்படுத்தல் போன்ற பல பணிகள் நடக்கும்போது, மரங்களை வெட்டாமல் அவற்றைப் பெயர்த்து நடுவதற்கு எவ்வளவு கூடுதல் செலவு ஏற்பட்டுவிடும்? மேலை நாடுகளில் இதைத்தானே செய்கிறார்கள்..
நகர்ப்புறங்களின் பசுமைப் பரப்பு தற்போது கூடியுள்ளதற்கு தமிழக அரசும், வனத்துறையும் பல்வேறு தனியார் அமைப்புகளும் மரக்கன்றுகளை விநியோகித்து வந்ததும், பள்ளி மாணவர்களை ஊக்குவித்ததுமே காரணம். இருப்பினும்கூட, வீட்டுக்கொரு மரம் என்பது இதுவரை நடைமுறையில் இல்லை.
ஒவ்வொரு வீட்டிலும் மழை நீர் சேமிப்பு கட்டாயமாக்கப்பட்டதைப்போல, ஒவ்வொரு வீட்டு வாசலில் அல்லது தோட்டத்தில் ஒரு மரம் கட்டாயமாக்கப்பட்டால், தமிழக நகர்ப்புற பசுமைப் பரப்பு கணிசமாக விரியும்.
ஒரு மனிதன், ஒரு வீடு, ஒரு மரம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...