தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்படிவம்-6 மூலம் 27.5 லட்சம் வாக்காளர்கள் சேர்ப்பு!தமிழ்நாட்டில் 74,07,207 வாக்காளர்கள் நீக்கம்!வாக்காளர் இறுதிப்பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 5.67 கோடி வாக்காளர்கள்!கரூர் விஷயத்தில் என் மீது ஏன் பழி போட்டீர்கள்? - முதல்வருக்கு விஜய் கேள்விவிஜய் கொடுத்த வாக்குறுதி; எனக்கும் ஸ்டாலினுக்கும் நடக்கிற போர் இது! - விஜய் பேச்சு தனிச்சின்னத்தில் போட்டி: தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்குப் பிறகு மதிமுக அறிவிப்பு சென்னை புறநகர் ரயில்கள் ரத்து! ரயில் நிலையங்களில் அசாதாரண சூழல்! வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!
/

நீதிபதிகள் நியமன ஆணையம் - I

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவர முயன்று நிறைவேற்றாமல் விட்ட நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தைச் சில திருத்தங்களுடன் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றி இருப்பது பாராட்டுதலுக்கு உரிய ஒன்று.

News image
Updated On :5 ஜனவரி 2024, 6:29 am

ஆசிரியர்

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கொண்டுவர முயன்று நிறைவேற்றாமல் விட்ட நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டத்தைச் சில திருத்தங்களுடன் நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு நிறைவேற்றி இருப்பது பாராட்டுதலுக்கு உரிய ஒன்று. "நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014' நிறைவேற்றப்பட்டிருப்பதுடன், இந்தச் சட்டத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்திய அரசமைப்புச் சட்டத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

நீதிபதிகள் நியமன ஆணையச் சட்டம் 2014, கடந்த 16 ஆண்டுகளாகக் கடைப்பிடிக்கப்பட்ட நீதிபதிகள் தேர்வுக்குழு (கொலீஜியம்) முறையை முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது. நீதிபதிகளே, நீதிபதிகளைத் தேர்ந்தெடுக்கும் அந்த முறையை மாற்றி அமைப்பது என்பது நீதித்துறையின் தன்னிச்சையான செயல்பாட்டில் தலையிடுவதால், நீதிமன்றம் அதை எவ்வாறு எடுத்துக் கொள்ளப் போகிறது என்பது தெரியவில்லை. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா தொடங்கி, உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதிகள் யாருமே இப்போதைய முறையை மாற்றுவதை ஏற்றுக் கொள்வார்களா என்பது சந்தேகமே.

தான் நீதிபதிகள் தேர்வுக் குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலைமுறை நீதிபதி என்றும், சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட ஆர்.எம். நாரிமன் இந்த முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சமீபத்திய நீதிபதி என்றும், இன்று நீதிபதிகளாக இருக்கும் அனைவருமே நீதிபதிகள் தேர்வுக் குழு முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்தான் என்றும், தேர்வுக் குழு முறை தோல்வி அடைந்தது என்று சொன்னால், இப்போது பதவியில் இருக்கும் அனைவருமே தோல்வியடைந்திருப்பதாகப் பொருள் என்றும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.எம். லோதா கூறியிருக்கிறார். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டிருக்கும் புதிய சட்டமும், அரசியல் சட்டத் திருத்தமும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் முன்னால் விவாதத்திற்கு வருமானால், அதை ரத்து செய்து, நீதித்துறை நாடாளுமன்றத்துடனான மோதலுக்குக்கூடத் தயாராகக் கூடும்.

நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் போன்ற நீதித்துறை தொடர்பான பிரச்னைகளைக் கையாள்வதற்கு நீதிபதிகள் நியமன ஆணையம் அமைக்கப்படுவது, நியமன முறையில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தும் என்பதில் எந்தவித ஐயப்பாடும் இல்லை. முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி ரூமா பாலின் கருத்துப்படி, இந்தியாவிலேயே மிகவும் ரகசியமாகப் பாதுகாக்கப்படுவது நீதிபதிகள் நியமனம் மட்டுமே. நீதிபதிகளே நீதிபதிகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் இந்த முறையில் அரசியல் தலையீடு இல்லை என்கிற வாதம் முன்வைக்கப்பட்டாலும், நீதிபதிகள் தங்களுக்கு வேண்டியவர்களை நீதிபதிகளாக நியமித்துக் கொள்வதும், அதற்குள் அரசியல் இருப்பதும் பல தருணங்களில் வெளிப்பட்டிருக்கின்றன.

நீதிபதிகள் நியமனப் பிரச்னை, அரசியல் நிர்ணய சபை விவாதங்களிலேயே எழுப்பப்பட்டது. நீதித் துறையின் உயர் பதவிகளுக்கான நியமனங்களில் தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் (concurrence) முடிவெடுக்க வேண்டும் என்கிற கருத்துத்தான் அரசியல் நிர்ணய சபையில் முதலில் முன்மொழியப்பட்டது. அப்படி இருந்தால் மட்டுமே நீதித்துறை அரசியல் தலையீடின்றி இருப்பதுடன், ஆளும் கட்சியின் கைப்பாவையாக செயல்படுவது தடுக்கப்பட முடியும் என்றும் சிலர் கருத்துத் தெரிவித்தனர். அன்றைய சட்ட அமைச்சராக இருந்த பாபாசாகேப் பி.ஆர். அம்பேத்கருக்கு அதில் உடன்பாடு இருக்கவில்லை.

""நீதித் துறையில் உயர் பதவிகளுக்கான நியமனத்தில் தலைமை நீதிபதியின் ஒப்புதல் இருக்க வேண்டும் என்று கருத்துத் தெரிவிப்பவர்கள், தலைமை நீதிபதியின் பாரபட்சமற்ற தன்மையையும், மனமாச்சரியங்கள் இல்லாத நிலைப்பாட்டையும் அடிப்படையாகக் கொண்டு தங்களது கருத்தை வெளியிடுகிறார்கள். உச்சநீதிமன்ற நீதிபதி நிச்சயமாக கண்ணியம் மிக்க, சார்பற்ற நீதிமானாக இருப்பார் என்பதில் எனக்கும் எந்தவித கருத்து வேறுபாடும் இல்லைதான். ஆனாலும், அவரும் எல்லா மனிதர்களையும் போல தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளும், உணர்வுகளும், மனமாச்சரியங்களும் உள்ள நம்மைப் போன்ற மனிதர்தான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. நீதிபதிகள் நியமனத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு முழு அதிகாரத்தையும் அளிப்பது என்பது, குடியரசுத் தலைவருக்கோ, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கோ தரப்படாத தன்னிச்சையான அதிகாரத்தை அவருக்கு அளிப்பதாகிவிடும். அதனால், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியின் "ஒப்புதல்படி' என்கிற கருத்து மிகவும் ஆபத்தானது'' என்று மே 24, 1949 அன்று நடந்த அரசியல் நிர்ணய சபை விவாதத்தில் பாபாசாகேப் அம்பேத்கர் மிகவும் தெளிவாகவும், பட்டவர்த்தனமாகவும் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார்.

(தொடரும்)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.