தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

'எபோலா'வும் இந்தியாவும்!

சமூக, கலாசார ரீதியாக உலகமயத்தால் ஏற்படும் பாதிப்புகளைவிட, சுகாதார ரீதியாக ஏற்படும் பாதிப்புகள்தான் கடுமையும் கொடூரமுமானவை என்பதை உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் "எபோலா' விஷ நுண்ணுயிரி உணர்த்துகிறது.

Updated On :11 ஆகஸ்ட் 2014, 11:32 pm

சமூக, கலாசார ரீதியாக உலகமயத்தால் ஏற்படும் பாதிப்புகளைவிட, சுகாதார ரீதியாக ஏற்படும் பாதிப்புகள்தான் கடுமையும் கொடூரமுமானவை என்பதை உலகத்தை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் "எபோலா' விஷ நுண்ணுயிரி உணர்த்துகிறது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கு முன் வரை பிளேக், காலரா, அம்மை போன்ற நோய்களால் பல கிராமங்கள் பூண்டோடு அழிந்த சரித்திரங்கள் ஏராளம் ஏராளம். இப்போது அறிவியல் வளர்ச்சி அடைந்துவிட்ட, சூரியமண்டலத்தில் இருக்கும் கிரகங்களுக்கு விண்கலன்களை அனுப்பி ஆய்வுகள் நடத்த முடிகிற காலகட்டத்திலும்கூட, அதேபோன்ற நிலைமை திரும்பக்கூடும் என்றால், அறிவியல் வளர்ச்சியால் நாம் பெரிதாக எதையும் சாதித்துவிடவில்லை என்றல்லவா ஆகிறது?

உலக சுகாதார நிறுவனம், "எபோலா' விஷ நுண்ணுயிரியின் பரவலை அசாதாரண அவசரநிலையாக அறிவித்து சர்வதேச நடவடிக்கையை முடுக்கிவிடப் பணித்திருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியில் முதல் முதலாகக் கண்டறியப்பட்ட "எபோலா' விஷ நுண்ணுயிரி நோய், கினியின் அண்டை நாடுகளான லைபீரியா, நைஜீரியா, சியரா லியோன் ஆகிய நாடுகளுக்கும் பரவி இருக்கிறது. ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிலவரப்படி சுமார் 1,779 பேர் "எபோலா'வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்நோயால் இறந்தவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தைத் தொட்டுவிட்டிருக்கிறது.

லைபீரியா அவசரநிலைச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது. சியரா லியோன், எபோலாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் சிகிச்சைக்குத் தனியிடம் ஒதுக்கி இருப்பதுடன், பொது இடங்களில் மக்கள் கூடுவதற்குத் தடை விதித்திருக்கிறது. அதிக சுகாதார வசதிகள் இல்லாத ஆப்பிரிக்க நாடுகளில் இந்த விஷ நுண்ணுயிரி தனது வீரியத்தை வெளிப்படுத்தி இருப்பதால், முறையாக கட்டுப்படுத்துவது கடினம் என்பது பிரச்னையை மேலும் கடினமாக்குகிறது. இதற்கு இதுவரை எந்தவிதத் தடுப்பு மருந்தோ, மாற்று மருந்தோ கண்டுபிடிக்கப்படவில்லை என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும்.

"எபோலா' விஷ நுண்ணுயிரி காற்று மூலம் பரவுவது கிடையாது என்றாலும்கூட, இதனால் பாதிக்கப்பட்டிருக்கும் நோயாளிகளின் ரத்தம், இருமல், தும்மல், கபம், விந்து, மலம், சிறுநீர், ஏன் வியர்வையின் மூலம்கூடப் பரவும் தன்மையுடையது இந்த நுண்ணுயிரி. அதனால்தான் இதனால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தனியிடத்தில் சிகிச்சை தரப்படுகிறது. அப்படி இருந்தும்கூட, அவர்களுக்கு சிகிச்சையளித்த அறுபதுக்கும் மேற்பட்ட மருத்துவப் பணியாளர்கள் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருக்கிறார்கள்.

"எபோலா' விஷ நுண்ணுயிரி பரவி இருக்கும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஏறத்தாழ 45,000 இந்தியர்கள் பணிபுரிகிறார்கள். அவர்கள் அனைவருமே இந்த நுண்ணுயிரியால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை என்றாலும், இப்படியொரு பிரச்னை எழுந்திருக்கும் நிலையில் அவர்கள் உயிருக்கு பயந்து தாயகம் திரும்ப விழைவது இயல்பு. அவர்களை வரவேற்றுப் பாதுகாப்பது நமது கடமை. அப்படித் தாயகம் திரும்பும் இந்தியர்களை முறையான சோதனைகளுக்கு உள்படுத்தி, "எபோலா' பாதிப்பு அவர்களுக்கு இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் அரசுக்கு இருக்கிறது.

ஆப்பிரிக்க நாடுகளில் போதிய மருத்துவ, சுகாதார வசதிகள் இல்லை என்பது இருக்கட்டும். உலகின் பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் நிலைமை மட்டும் சிறப்பாகவா இருக்கிறது?

அதிக மக்கள்தொகையுடன், அதிலும், குறைந்தது 30 விழுக்காடு மக்கள் அடிப்படை சுகாதார வசதிகள்கூட இல்லாமல் வாழும் இந்தியாவில், இதுபோன்ற தொற்றுநோய் பரவத் தொடங்கினால் அதைக் கட்டுப்படுத்தும் அளவுக்கு அரசு மருத்துவமனைகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளும், அர்ப்பணிப்புணர்வுடன் கூடிய மருத்துவப் பணியாளர்களும் இருக்கிறார்களா என்பது சந்தேகம்தான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவைத் தாக்கிய சிக்கன்குனியாவால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று அரசு கூறினாலும், இன்றும் பலர் அதன் பின் விளைவுகளை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

"எபோலா'வை எதிர்நோக்க அரசு தனது முழு முனைப்பையும் காட்ட வேண்டும். அதுமட்டுமல்ல, மருத்துவத்தில் தனியார்மயத்துக்கு இந்திய அரசு கொடுக்கும் முன்னுரிமை, இதுபோன்ற அவசர நிலையில் எப்படிப்பட்ட பாதிப்புகளை உருவாக்கும் என்பதை இதன்மூலம் உணர்ந்து வருங்காலத்தில் செயல்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளத் தயார்நிலையில் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.