ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம்!
சில தினங்களுக்கு முன்பு கார்கில் வெற்றி விழா நாட்டின் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது.


சில தினங்களுக்கு முன்பு கார்கில் வெற்றி விழா நாட்டின் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த வீரர்களின் நினைவிடங்களில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வுகளின்போது, ராணுவத்தினர் முன்வைத்த கோரிக்கை: ஒரே பதவி, ஒரே மாதிரியான ஓய்வூதியம்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொண்டிருக்கும் பா.ஜ.க. அரசு, 2014-15 நிதிநிலை அறிக்கையில், இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கியுள்ளது. என்றாலும்கூட, இந்தத் திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும் என்பதுதான் ராணுவத்தினரின் கோரிக்கை. கடந்த சில ஆண்டுகளாக இருந்து வரும் அவர்களது இந்தக் கோரிக்கை நிதி ஒதுக்கப்பட்டுவிட்டதால் மட்டும் நிறைவேற்றப்பட்டதாகாது.
2006-க்கு முன்பாக ஓய்வு பெற்ற ராணுவ வீரர் அல்லது ராணுவ அதிகாரிக்குக் கிடைக்கும் ஓய்வூதியமும், அதன் பின்னர் ஓய்வு பெற்றவர்களுக்குக் கிடைக்கும் ஓய்வூதியமும் சுமார் 30% முதல் 60% வரை வேறுபடுகிறது. ஒரே பதவி, சேவை செய்த ஆண்டு
களின் எண்ணிக்கையும் மாறுபடவில்லை எனும்போது, ஓய்வூதியம் மட்டும் மாறுபடுவதா என்பதுதான் அவர்களது கேள்வி. மற்ற அரசு ஊழியர்களுக்கு இந்த நிலை இல்லையே, எங்களுக்கு மட்டுமே ஏன் இப்படி? என்று கேட்கிறார்கள்.
மற்ற அரசுப் பணிகளில் பணி ஓய்வுக்கான வயது 58 அல்லது 60-ஆக இருக்கிறது. ஆனால், ராணுவத்தில் அப்படி இல்லை. ராணுவ வீரர் குறைந்தபட்சம் 17 ஆண்டுகள் பணி பூர்த்தியானதும் ஓய்வு பெறலாம். அதிகபட்சம் ஒருவர் 32 ஆண்டுகள் பணியாற்ற முடியும். ஆகவே, ராணுவ வீரர்களில் 80 விழுக்காட்டினர், தங்களின் 42-ஆவது வயதுக்குள் ஓய்வு பெற்று, சொந்த ஊருக்குத் திரும்பி வேறு பணிகளில் சேர்ந்துவிடுகின்றனர். அதிகாரிகளிடையே இந்த விகிதாசாரம் சற்றுக் குறைவு. அவ்வளவுதான்.
ஓர் அரசு ஊழியர் 58 வயதில் ஓய்வு பெறுகிறார் என்றால், சராசரியாக அவர் 70 வயது வரை ஓய்வூதியம் பெறுவார் என்று கணக்கிட்டாலும் 12 ஆண்டுகளுக்குத்தான் ஓய்வூதியம் தர வேண்டியிருக்
கிறது. ஆனால், ராணுவ வீரருக்கு அதைவிட இரு மடங்கு காலம், சுமார் 24 ஆண்டுகள் ஓய்வூதியம் தந்தாக வேண்டும் என்பதால்தான், ராணுவத்துக்கு மட்டும் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் என்ற திட்டத்தை அமல்படுத்தாமல் அரசு காலம் தாழ்த்தியது.
ராணுவ வீரர்கள் திடகாத்திரமானவர்கள் என்பதும், அவர்கள் உள்ளூரில் பல்வேறு பணிகளில் சேர்ந்து விடுகிறார்கள் என்பதும் உண்மையே. அவர்கள் கடைசி வரையிலும் முன்னாள் ராணுவத்தினருக்கான சலுகைகளால் பயனடைகிறார்கள் என்பதும் உண்மைதான். ஆனால் இவை யாவுமே, அவருக்கான ஓய்வூதியத்தில் பாரபட்சம் காட்டுவதற்குக் காரணமாகிவிடாது. "ஓய்வூதியம் என்பது கருணைத்தொகை அல்ல. பணியாற்றி முடித்த காலத்துக்கான சம்பளம்' என்கிறது நீதிமன்றத் தீர்ப்பு ஒன்று.
ஒரே பதவி, ஒரே அளவு பணிக்காலம் என்றால் ஏன் இரு மாதிரியான ஓய்வூதியம்? இந்த வேறுபாட்டைக் களைவதற்கு அரசுக்கு ஏற்படக்கூடிய அதிகபட்சக் கூடுதல் செலவு ரூ.2,500 கோடி முதல் ரூ.3,000 கோடி வரையே. தற்போது ரூ.1,000 கோடி நிதிஒதுக்கீடு செய்திருக்கும் அரசுக்கு மேலும் ரூ.2,000 கோடி ஒதுக்கீடு செய்வது முடியாததல்லவே என்பதுதான், 2006-க்கு முன்பு ஓய்வு பெற்றவர்களின் கேள்வி.
இந்திய ராணுவ விமானங்கள், ஹெலிகாப்டர்கள், வாகனங்கள் வாங்கியதிலும் தளவாடப் பொருள்கள் வாங்கியதிலும் பல ஆயிரம் கோடி, ஏன், சில லட்சம் கோடி ரூபாய்கூட ஊழல் நடைபெற்றுள்ளது. அந்த ஊழல் விசாரணைகளும் முடிந்தபாடில்லை. ஆனால், ஒரே பதவி, ஒரேஅளவு பணிக்காலம், ஒரேஅளவு ஓய்வூதியம் எனும் திட்டத்துக்காக ரூ.3,000 கோடியை செலவிட மனமின்றி தள்ளிப்போட்டுக் கொண்டே வருகிறார்கள்.
கடந்த 20 ஆண்டுகளாகச் சொல்லப்படும் வாதம் இப்போது எடுபடாது. ராணுவ வீரர்கள் பலரும் தங்கள் விருதுகளைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கு போராட்டத்தில் தீவிரம் காட்டி வருவதால், இந்தத் திட்டத்தை அரசு ஏற்றுக்கொண்டுவிட்டது. இதற்குப் பிறகும் அமல்படுத்தாமல் ஏன் காலம் தாழ்த்த வேண்டும்?
ஒவ்வோர் ஆண்டும் கார்கில் வெற்றி விழா நெருங்கும் நேரத்தில், இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறல் நடக்கும். குண்டுகள் வந்து விழும். கார்கில் வெற்றியின் மகிழ்ச்சியைக் குலைக்க நிகழ்த்தும் தாக்குதல்கள் இவை. இந்தத் தாக்குதல்கள் போலவே, ஓய்வு பெற்ற ராணுவத்தினர் கார்கில் வெற்றி விழாவில் தங்கள் மனக்குமுறலைக் கொட்டுவதும் தொடர்கிறது. அடுத்த கார்கில் வெற்றி விழா நாள் கொண்டாடும்போதாவது, ராணுவத்
தினரின் கோரிக்கை முழுமையாக ஏற்கப்பட்டு, இந்த ஓய்வூதிய வேறுபாடுகள் களையப்பட்டிருக்கும் என்று எதிர்பார்ப்போம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...