தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

வழிகாட்டுகிறார் உம்மன் சாண்டி!

பூனைக்கு மணி கட்டியிருக்கிறார் என்று சொல்வதைவிட, துணிந்து அடங்காப் பிடாரிக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து அடக்க முற்பட்டிருக்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி என்றுதான் கூறவேண்டும்.

Updated On :27 ஏப்ரல் 2014, 11:18 pm

பூனைக்கு மணி கட்டியிருக்கிறார் என்று சொல்வதைவிட, துணிந்து அடங்காப் பிடாரிக் குதிரையின் கடிவாளத்தைப் பிடித்து அடக்க முற்பட்டிருக்கிறார் கேரள முதல்வர் உம்மன் சாண்டி என்றுதான் கூறவேண்டும். அரசுக்கு மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்படும் என்பது தெரிந்தும், கேரள மாநிலத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்த 418 மது அருந்தும் விடுதிகளின் (பார்) உரிமத்தை ஒரு மாதம் முன்பு ரத்து செய்தது உம்மன் சாண்டி தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி அரசு.

முதல்வர் உம்மன் சாண்டியின் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்குள்ளும், கூட்டணிக் கட்சிக்குள்ளும் பலத்த எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றாலும், மக்கள் மத்தியில் பெருத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது என்றுதான் கூற வேண்டும். கடந்த ஒரு மாதமாக 418 மது அருந்தும் விடுதிகள் செயல்படாமல் இருப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்கள்கூட, முதல்வரின் நோக்கத்தைப் பாராட்டவே செய்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டாக வேண்டும்.

"பூரண மதுவிலக்குதான் இலக்கு என்றாலும், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை. அதற்காக, மதுவிலக்கைப் படிப்படியாக அமல்படுத்தவும், மதுப் பழக்கத்தை மெல்ல மெல்ல குறைப்பதற்கும் இப்போது முதலே நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கினால்தான், பத்து ஆண்டுகளுக்குப் பிறகாவது சமுதாயம் மது போதையிலிருந்து விடுபடும்' என்கிற முதல்வர் உம்மன் சாண்டியின் கருத்தில் யார்தான் குறை காண முடியும்?

கேரள மாநிலத்தின் நிதி வருவாயில் மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வரி வருமானம் கணிசமானது. ஏறத்தாழ ரூ.8,000 கோடி மது விற்பனையிலிருந்து மட்டுமே இப்போது பெறப்படுகிறது. இந்த வருமான இழப்பை எப்படி அரசு ஈடுகட்டுவது என்று முதல்வரின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். அவர்களில் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வி.எம். சுதீரனே முன்னணியில் இருக்கிறார் என்பதுதான் பிரச்னையின் தீவிரத்தை அதிகமாக்குகிறது.

418 மது அருந்தும் விடுதிகளின் உரிமத்தை, மாநில அரசு ஒரு மாதம் முன்பு ரத்து செய்ததைத் தொடர்ந்து அவர்கள் உயர்நீதிமன்றத்தை அணுகிறார்கள். இந்தப் பிரச்னையில் தலையிட முடியாது என்று கூறி இடைக்காலத் தடை வழங்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. இது முதல்வர் உம்மன் சாண்டிக்குக் கிடைத்திருக்கும் மிகப்பெரிய ஆறுதல்.

கேரள மாநிலத்தில் மது அருந்தும் விடுதிகளை நடத்துபவர்கள் பெருத்த அரசியல் செல்வாக்கு மிக்கவர்கள். குறிப்பாக, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் கேரள காங்கிரஸ் கட்சியினர் பலர் மது விற்பனையுடன் தொடர்புடையவர்கள். காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சிகள் தலைமையிலான இரண்டு கூட்டணியையுமே ஆட்டிப் படைக்கும் சக்தி மது விற்பனையாளர் கூட்டமைப்புக்கு (லாபி) உண்டு.

உரிமம் ரத்து செய்யப்பட்டிருக்கும் 418 மது அருந்தும் விடுதிகளின் தரம் மிகவும் மோசமாக இருப்பதும், இந்த விடுதிகளில் பல, திருட்டுத்தனமாகப் போலிச் சரக்குகளை விற்பனை செய்து கொள்ளை லாபமடைவதும்தான் அவற்றின் உரிமத்தை ரத்து செய்ததற்கான காரணம்.

உரிமம் ரத்து செய்யப்பட்ட 418 மது அருந்தும் விடுதிகளும், தங்கும், உணவருந்தும் விடுதிகளுடன் இணைந்து செயல்பட்டு வந்தன. இவற்றின் உரிமம் ரத்து செய்யப்பட்ட பிறகு இப்போது 334 மது அருந்தும் விடுதிகளும், 383 அரசு மது விற்பனை நிலையங்களும் மட்டுமே செயல்படுகின்றன.

உதாரணத்திற்கு தமிழகத்தையே எடுத்துக் கொண்டால், 6,830 டாஸ்மாக் மது விற்பனை நிலையங்களும் 4,000 மது அருந்தும் விடுதிகளும் செயல்படுகின்றன. இதேபோல, ஏனைய மாநிலங்களிலும் உள்ள மது விற்பனையை கூட்டிப் பார்த்தால் பல மாநில அரசுகளின் ஆண்டு வருவாயை விட அதிகமாக இருக்கக் கூடும்.

இப்போது, இந்தியாவில் குஜராத் தவிர ஏனைய வேறு மாநிலங்கள் எதிலும் மதுவிலக்கு இல்லை என்கிற நிலைமை ஏற்பட்டிருக்கும்போது, துணிந்து படிப்படியாக மதுவிலக்கு என்கிற அறிவிப்பைச் செய்ததோடு நடைமுறைப்படுத்தவும் முற்பட்டிருக்கும் கேரள முதல்வர் உம்மன் சாண்டிக்கு ஆதரவாகக் குரலெழுப்பவும், பாராட்டவும் நாம் முன்வரவேண்டும். முதல்வர் உம்மன் சாண்டியை முன்னுதாரணமாக கொண்டு ஏனைய மாநிலங்களும் படிப்படியாக மது அருந்தும் விடுதிகளின் எண்ணிக்கையையும் மதுபான விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையையும் குறைக்க முற்பட்டால் பத்து ஆண்டுகளுக்கு பிறகாவது பூரண மதுவிலக்கு என்கிற இலக்கை இந்தியா எட்ட முடியும்.

வருங்கால சந்ததியினரின் நன்மை கருதி, கடுமையான எதிர்ப்பையும் எதிர்கொள்ளத் தயாரான கேரள முதல்வர் உம்மன் சாண்டியின் முயற்சியில் பின்னடைவு நேர்ந்தாலும்கூட, அதுவும் ஒருவகையில் வெற்றிதான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.