ஆழ்துளை பலிகள்!
தமிழகத்தில் தொடர்ந்து ஆழ்துளைக் கிணறுகளுக்கு குழந்தைகளை பலி கொடுத்து கொண்டேயிருக்கிறோம்.


தமிழகத்தில் தொடர்ந்து ஆழ்துளைக் கிணறுகளுக்கு குழந்தைகளை பலி கொடுத்து கொண்டேயிருக்கிறோம். திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது சிறுவன் 26 மணி நேரத்துக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டான். சில தினங்களுக்கு முன்புதான் சங்கரன்
கோவில் அருகே ஒரு குழந்தையை ஆழ்துளைக் கிணற்றிலிருந்து உயிருடன் மீட்டனர். சில மாதங்களுக்கு முன்பு கரூரில் இதேபோன்ற சம்பவம்.
வடஇந்தியாவில் மட்டுமே முன்பு கேட்டறிந்த இச்சம்பவங்கள் இப்போது தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இருந்தும்கூட மூடப்படாத ஆழ்துளைக் கிணறுகள், நம் குழந்தைகளை தனக்குள் இழுத்துக்கொண்டே இருக்கின்றன.
குழந்தைகளின் பெற்றோருக்கும் சுற்றியிருக்கும் மக்களுக்கும் எத்தகைய அதிர்ச்சியையும் சோகத்தையும் இச்சம்பவங்கள் அளித்திருக்கும் என்பதை சொல்லி தெரிய வேண்டியதில்லை. இவ்வாறு ஆழ்துளைக் கிணற்றில் சிக்கிக்கொண்ட குழந்தைகளைக் காப்பாற்ற அரசு இயந்திரம் பல திறத்திலும் முடுக்கிவிடப்படுகின்றது. பாதுகாப்புக்கு காவல்துறை, மீட்புப்பணிக்கு தீயணைப்புத் துறை, அருகில் பள்ளம் பறிக்க ஜே.சி.பி. இயந்திரங்கள், ஆக்ஸிஜன் செலுத்த மருத்துவக் குழு, ஆள்தூக்கும் இயந்திரம் என எல்லா வகையிலும் பணிகள் முடுக்கி விடப்படுகின்றன. இருந்தும்கூட, 40 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட குழந்தை பெரும்பாலான நேரங்களில் சடலமாகவே மீட்கப்படுகிறது.
ஆழ்துளைக் கிணறுகள் அமைத்தவுடன் அவற்றை மூட வேண்டும் என்ற பொதுவிதி அமலில் இருக்கிறது. ஆனால் அதை நடைமுறைப்படுத்துகிறார்களா என்று சோதிப்பது யார்? புகார் தர வேண்டியது யார்? யாருக்கும் தெரியாது.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் தங்கள் வீடு, தோட்டம், வயல்களில் அமைத்துள்ள ஆழ்துளைக் கிணறுகள் எத்தனை என்ற கணக்கீடு தமிழக அரசிடம் இருக்க வாய்ப்பே இல்லை. ஏனென்றால், ஆழ்துளைக் கிணறு அமைக்க விரும்புவோர் இதற்காக அனுமதி பெறுவது கட்டாயம் இல்லை. பிறப்பு இறப்பு பதிவு போல, அந்தந்த நகராட்சி, உள்ளாட்சியில் பதிவு செய்ய வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.
ஒரு ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் நீரேற்றுக் குழாய்களை நுழைக்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது. இந்த அளவும்கூட வீட்டுப் பயன்பாடு, வயல்வெளி, தொழில்துறை பயன்பாட்டுக்கேற்ப நிர்ணயிக்கப்பட வேண்டும். ஒன்றரை வயது குழந்தை விழும் அளவுக்கு பெரிதாக இருக்க அனுமதிப்பது தவறு.
இத்தகைய துயரமான சம்பவங்களுக்குப் பிறகு ஆழ்துளைக்கிணறு அமைத்தவர்களை கைது செய்கிறார்கள். நிலத்தின் உரிமையாளரை கைது செய்கிறார்கள். அவர்களுடைய நிலத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதை மூடாமல் விட்டிருக்கிறார்கள். அதில் ஊரார் வீட்டு குழந்தை விழுந்தால், அவர்களை மட்டும் குற்றம் சாட்டினால் எப்படி? இதில் பெற்றோருக்கும் பங்கு இல்லையா?
இந்தச் சம்பவம் நடந்த இடத்தில் அண்மையில்தான் ஆழ்துளை கிணறு அமைத்துள்ளார்கள். அந்தப் பணிகள் நடைபெற்றபோது ஏற்பட்ட பேரொலி, சுற்றுவட்டார மக்கள் அனைவருக்கும் கேட்டிருக்கும். சங்கரன்கோவிலில் ஆழ்துளைக்கிணற்றில் குழந்தை சிக்கிய செய்தியை வெளியிடாத சேனல்களோ, பத்திரிகைகளோ இல்லை. அப்படியிருந்தும், தன் ஒன்றரை வயது குழந்தையை எந்த கண்காணிப்பும் இல்லாமல் ஒரு தாய் விட்டுவிடுவது என்ன நியாயம்?
அரசாங்கத்தையும் ஆழ்துளைக் கிணறு அமைத்தவர்களையும் கோபித்துக்கொள்வது ஒருபுறம் இருந்தாலும் குழந்தைகளை அங்கே விளையாடவிட்ட பெற்றோர்களை நாம் தண்டிக்க முடியாவிட்டாலும் கண்டிக்காமல் இருக்க முடியவில்லை.
ஆழ்துளைக் கிணறுகளின் விட்டம் குறித்து அரசு நிர்ணயம் செய்வதும், மாவட்டங்களில் எங்கெல்லாம் எத்தனை அங்குல அகலத்தில், எத்தனை அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன என்ற புள்ளிவிவரத்தைப் பெறுவதும், அவற்றைப் பயன்படுத்துகிறார்களா? பயன்படுத்தாத நிலையில் எவ்வாறு அவை பராமரிக்கப்படுகின்றன என்ற ஆய்வை கிராம நிர்வாக அலுவலர் மூலமும் செய்வதும் அவசியம்.
உலகம் முழுவதும் தவறுகள் நடக்கத்தான் செய்கின்றன. தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு திருத்திக் கொள்வதால்தான் மனித சமுதாயம் இன்றைய நாகரிக முன்னேற்றங்களை அடைந்திருக்கிறது. இந்தியாவில் மட்டும்தான் ஒரே தவறு மீண்டும் மீண்டும் தொடர்கிறது. இதற்கு நிர்வாகத்தின் பொறுப்பேற்பு என்பது அறவே இல்லாமல் இருப்பதுதான் காரணம்.
இன்னும் எத்தனை குழந்தைகளை இப்படி நாம் பலி கொடுக்க போகிறோமோ..?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...