ரூ. 213 கோடி அபராதம்! மெட்டா - வாட்ஸ்ஆப் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!குடியரசுத் தலைவா் மாளிகையில் இன்று ராஜாஜி உத்சவ்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!முதல்வா் நாளை குமரி வருகை!வாக்காளா் இறுதிப் பட்டியல் இன்று வெளியீடு!டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

தவறு திருத்தப்படுகிறது!

சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்போதோ அளித்திருக்க வேண்டிய நியாயமான உரிமையை, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் இப்போது வழங்கி இருக்கிறது. இயற்கையின் சதியால் ஆணும் அல்லாமல், பெண்ணும் அல்லாமல் பிறந்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 5:01 am

ஆசிரியர்

சுதந்திர இந்தியாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எப்போதோ அளித்திருக்க வேண்டிய நியாயமான உரிமையை, உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் இப்போது வழங்கி இருக்கிறது. இயற்கையின் சதியால் ஆணும் அல்லாமல், பெண்ணும் அல்லாமல் பிறந்து

விடும் ஒருவரை, அந்த இயற்கைப் பிழைக்காகப் பரிவு காட்டாமல் கேலிப் பொருளாக்கும் சமூக அவலத்திற்கு, உச்சநீதிமன்றம் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.

திருநங்கையர்கள் என்று பரவலாக அறியப்படுபவர்கள், இனி மூன்றாம் பாலினர் என்கிற உரிமையைப் பெறுகின்றனர். ஆண்பால், பெண்பால் போல இனி மூன்றாம் பாலினரும் எல்லா ஜனநாயக உரிமைகளையும் பெறுவதற்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வழிகோலியிருக்கிறது. மூன்றாம் பாலினருக்கு இந்த உரிமைகளை வழங்கும் அதே நேரத்தில், இயற்கைக்கு விரோதமான சமூக வக்கிரங்களான ஓரினச் சேர்க்கையாளர்களையும், பல்லினச் சேர்க்கையாளர்களையும் மூன்றாம் பாலினருடன் இணைத்துப் பார்க்கலாகாது என்றும், இவர்களுக்குத் தரப்படும் சலுகைகள், அவர்களுக்கு தரப்படக்கூடாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.

இந்தத் தீர்ப்பின் மூலம், வாக்காளர் அடையாள அட்டை, வெளிநாடுகளுக்குச் செல்ல கடவுச் சீட்டு, வாகன ஓட்டுநர் உரிமம் போன்ற எல்லா உரிமைகளையும், ஆண்பால், பெண்பாலினர்போலவே மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்களும் பெறுவார்கள். அத்துடன் நின்றுவிடவில்லை நீதிமன்றத் தீர்ப்பு. கல்வி நிலையங்களில் சேர்க்கை, அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் வாய்ப்பு என்று ஏனைய குடிமக்களுக்குத் தரப்பட்டிருக்கும் எல்லா உரிமைகளையும் பெறும் தகுதி உடையவர்களாகவுமாகிறார்கள். இதுவரை தங்களை ஆண் அல்லது பெண் என்று குறிப்பிட்டுத்தான் மேலே குறிப்பிட்ட உரிமைகளை அவர்கள் பெற வேண்டியிருந்தது.

கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கு முன்னுரிமை வழங்கவும், மூன்றாம் பாலினம் சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டவர்களாகக் கருதப்பட வேண்டும் என்றும் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். இதற்கான வழிமுறைகளையும் திருத்தங்களையும் மத்திய அரசு கொண்டுவர வேண்டும் என்றும், மூன்றாம் பாலினருக்கான நலத்திட்டங்கள், சிறப்புச் சலுகைகள், அவர்கள் மீதான சமூகக் கண்ணோட்டத்தை மாற்றும் பிரசாரங்கள் ஆகியவை மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அந்தத் தீர்ப்பு தெளிவுபடுத்துகிறது.

2005ஆம் ஆண்டு முதல், கடவுச் சீட்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பு போன்றவற்றில் மூன்றாம் பாலினர் சேர்க்கப்பட சில வழிமுறைகள் கையாளப்படுகின்றன. அவர்களது குடியுரிமை உறுதிப்படுத்தப்படுவதுடன், அவர்களுக்கு எதிரான சமூக மனப்போக்கையும், வன்முறையையும் எதிர்கொள்ள கொள்கை ரீதியான, சட்ட ரீதியான பாதுகாப்பு தேவைப்படுகிறது. இந்தத் தீர்ப்பின் மூலம் மூன்றாம் பாலினர் அந்தப் பாதுகாப்பைப் பெறுவார்கள்.

இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 377 காவல்துறையினரால் மூன்றாம் பாலினருக்கு எதிராக பயன்படுத்தப்படுகிறது என்றும், ஓரினச் சேர்க்கையாளர்கள் பல்லினச் சேர்க்கையாளர்கள் ஆகியோரைப்போல மூன்றாம் பாலினர் நடத்தப்படக் கூடாது என்றும் கூறுகிறது அத்தீர்ப்பு.

தமிழகம் போன்ற மாநிலங்கள், திருநங்கையர்களுக்கான வாரியம் அமைப்பது, கல்விக் கூடங்களில் சிறப்பு அனுமதி, ரேஷன் அட்டை வழங்குதல் போன்று பல புரட்சிகரமான திட்டங்களை முன்னெடுத்துச் செய்திருக்கின்றன என்றாலும், தேசிய அளவில் விழிப்புணர்ச்சி ஏற்படவும், அவர்களது உரிமை நிலைநாட்டப்படவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வழிவகுக்கும் என்று நம்பலாம்.

அதிகபட்சம் போனால் 20 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர் என்பதால், அரசியல் கட்சிகள் அவர்களை வாக்கு வங்கிகளாகக் கருதிச் செயல்படவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பால் மூன்றாம் பாலினர் பெற்றிருக்கும் உரிமைகளை அவர்கள் பெற வேண்டுமானால், நீதித்துறைக்கு இருக்கும் அக்கறை மத்திய மாநில அரசுகளுக்கும் இருந்தால் மட்டுமே சாத்தியம்.

மூன்றாம் பாலினத்தவர்களை சமூக, கல்வி, பொருளாதார ரீதியாகப் பிற்படுத்தப்பட்டவர்கள் என்று அறிவிப்பதுடன், அரசு வேலைவாய்ப்பிலும் இட ஒதுக்கீடு அளிக்கும்போதுதான் சமூகத்தின் போக்கில் மனமாற்றம் ஏற்படும். இதுவரை ஜாதி ரீதியாக மட்டுமே சமூகநீதி பார்க்கப்பட்டதுபோல், மனித உரிமையாக சமூகநீதி பார்க்கப்பட இந்தத் தீர்ப்பு வழிகோலியிருக்கிறது.

இயற்கை மூன்றாம் பாலினருக்கு செய்துவிட்டிருக்கும் சதியை சரி செய்ய நம்மால் இயலாது. ஆனால், செயற்கையான சமூகச் சதியை அகற்றியே தீரவேண்டும். அதனால், இந்தத் தீர்ப்பு சரித்திர முக்கியத்துவம் பெறுகிறது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.